இன்றைக்குச் சற்றேறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாகச் சொன்னால், 1678-ஆம் ஆண்டிலிருந்து 1681-ஆம் ஆண்டு வரை, ஸ்ட்ரேயின் ஷாம் மாஸ்டர் என்பவர் சென்னையின் கவர்னராக இருந்தார். அவர் காலத்தில்தான் நீதியின் கதை தொடங்கியிருக்கிறது.
ஆனால், அவர் காலத்திற்கு முன்பேகூட, சென்னையில் ஒரு சத்திரத்தில் நீதிஸ்தலம் ஒன்று இயங்கிவந்ததாகத் தெரியவருகிறது.

இந்தச் சத்திர நீதிஸ்தலத்தில் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர், இந்தியரா அல்லது ஐரோப்பியரா என்று இறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. கவர்னர் ஸ்ட்ரேயின் ஷாம் மாஸ்டர், இந்த நீதிஸ்தலத்திற்குச் சில சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார். ஒரு நீதிபதிக்குப் பதிலாக மூவரை அமர்த்தினார். அவர்களுள் இருவரை, பத்திரங்களைப் பதிவு செய்வது, சிறிய குற்றங்களை விசாரணை செய்வது போன்ற காரியங்களைக் கவனித்துக்கொள்ளச் செய்தார். கவர்னரின் ஆணைப்படி, நீதிபதிகள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் நீதிஸ்தலத்திற்கு வந்து அலுவல்களைக் கவனித்து வந்தார்கள்.
இதுதவிர, உயர் நீதிமன்றம் ஒன்றையும் உருவாக்கி, சென்னை கோட்டையில் பிரதி புதன், சனிக்கிழமைகளில் ஆங்கில சட்டங்களைத் தழுவி, ஸிவில், கிரிமினல் வழக்குகளை விசாரணை செய்ய ஏற்பாடு செய்தார். இந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக கவர்னரும், அவருடைய ஆலோசனை சபை அங்கத்தினர்களும் பதவி ஏற்றார்கள்.
இந்நீதிமன்றத்தில், ஜூரிகளும் விசாரணைகளில் பங்கு கொண்டார்கள் என்று தெரியவருகிறது.
நாளாவட்டத்தில், சத்திரத்தில் இயங்கி வந்த நீதிஸ்தலத்தை இவ்வுயர் நீதிமன்றம் தன் பார்வைக்கு எடுத்துக்கொண்டது. இந்த உயர் நீதிமன்றம் ஜூரிகளின் உதவியைக் கொண்டு 1678-ஆம் வருடம், ஏப்ரல் மாதம் 10-ந் தேதி முதல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அக்காலத்தில் சென்னையில் வசித்து வந்த ஆங்கிலேயர்களும், போர்ச்சுகீசியர்களும் அடிக்கடி கொலை முதலிய குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், அவர்களை விசாரணைக்குக் கொண்டு வந்து தண்டிப்பதற்கு, இந்நாட்டுச் சட்டங்கள் போதிய அளவு இடம் கொடுக்கவில்லை. எனவே, கவர்னர் உயர் நீதிமன்றம் ஒன்றை நிறுவி, நியாய விசாரணை செய்து, குற்றவாளிகளைத் தண்டனைக்குள்ளாக்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், 1686-ம் ஆண்டில் ‘அட் மிரால்டி கோர்ட்’ என்ற புதிய நீதிஸ்தலம் உருவாக்கப்பட்டதால், அந்த உயர் நீதிமன்றம் மூடப்பட்டுவிட்டது. இப்புதிய நீதிஸ்தலத்திற்கு இங்கிலாந்திலிருந்தே ஒரு நீதிபதி வந்து பதவியேற்றார். தற்காலத்தில் இயங்கும் ஹைகோர்ட்டுக்கு, ‘அட்மிரால்டி கோர்ட்’ ஒரு மூதாதையர் என்றுகூடக் கூறலாம். ஆனால், 1689-ம் ஆண்டில் ‘அட்மிரால்டி கோர்ட்’டும் மூடப்பட்டு விட்டது. அதற்குக் காரணம், ஸர் ஜான் பிக்ஸ் என்ற பெயர் கொண்ட ஒரு நீதிபதி இறந்துபோனதுதான்.1688-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று, சென்னை நகராண்மைக் கழகம் நிறுவப் பெற்றது. அந்தச் சமயம், மேயரும் மூன்று நகராண்மைக் கழகக் குழுவினரும் நீதி வழங்கும் உரிமை பெற்று, ‘மேயரின் கோர்ட்’ என்ற பெயரில் செயலாற்றி வந்தார்கள். மேயரின் நீதிஸ்தலத்தில் பெற்ற தண்டனை கடுமையாக இருந்தால், வழக்கை மேல் நீதிஸ்தல மாகிய ‘அட்மிரால்டி கோர்ட்’டுக்கு மறு விசாரணைக்காக மனுக்கொடுக்கலாம். ஒருநாள், சென்னை கவர்னர் யேல் துரைக்கும், மேயரின் கோர்ட்டுக்கும் ஒரு தகராறு ஏற்பட்டது. ‘அட்மிரால்டி கோர்ட்’ 1689-ல் மூடப்பட்டதனால், வழக்கை அங்கு மீண்டும் விசாரணை செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இச்சங்கட நிலையைச் சமாளிப்பதற்கு, கவர்னர் யேல் ஒரு புதிய நீதிஸ்தலத்தை உருவாக்கினார். இப்புதிய நீதிஸ்தலத்தில் ஒரு உயர் நீதிபதியும், நான்கு நீதிபதிகளும் பதவி ஏற்றார்கள். இந்நால்வருள் ஒருவர் ஆலங்காத்தா பிள்ளை என்பவர். இவர் கிழக்கு இந்தியக் கம்பெனியின் தலைமை வியாபாரி பதவியிலிருந்தார். சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில், இவரால் கட்டப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.1725-லிருந்து 1730 வரை கவர்னர் மெக்ரே என்பவர் சென்னையை ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவர் காலத்தில், முதலாவது ஜார்ஜ் மன்னரின் ஆணைபெற்ற அதிகாரப் பத்திரத்தின்கீழ், 1726-ம் வருடம் மேயரின் கோர்ட்டானது சீர்திருத்தி அமைக்கப்பட்டது. இந்த அதிகாரப் பத்திரத்தின்கீழ், மேயரின் கோர்ட்டில் தீர்ப்பு செய்யப்பட்ட வழக்குகளை மீண்டும் புனர்விசாரணைக்குக் கொண்டுவர வாய்ப்புக் கொடுக்க ‘அப்பீல் கோர்ட்டு’ ஒன்று நிறுவப்பெற்றது. இக்கோர்ட்டில் கவர்னரும், அவருடைய ஐந்து ஆலோசகர்களும் நீதிபதிகளாக அமர்ந்து செயலாற்றினார்கள்.1746-ஆம் ஆண்டிலிருந்து 1749 வரை சென்னை பிரஞ்சுக்காரர்களால் பிடிக்கப்பட்டு, அவர்களது ஆட்சியில் இருந்ததன் காரணத்தால், சென்னை நகராண்மைக் கழகமும், மேயரின் கோர்ட்டும் செயலற்றுப் போயிருந்தன. இதனால், மீண்டும் மேயரின் கோர்ட்டை உயிர் கொடுத்துப் புதுப்பிப்பதற்கு, 1753-ம் ஆண்டு பிரிட்டிஷ் மன்னர் இரண்டாவது ஜார்ஜ் அவர்களின் ஆணை பெற்ற புதிய அதிகாரப் பத்திரம், அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. ஹோபார்ட் பிரபு 1795-லிருந்து 1798 வரை சென்னை கவர்னராகப் பணியாற்றிய பொழுது, அவர் தம் கவனத்தை மீண்டும் நீதிமன்றத்தின்மீது செலுத்தினார். மேயரின் கோர்ட்டுக்கும், அரசாங்கத்திற்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதைக் கவனித்த அவர், 1798-ம் ஆண்டு ‘ரிக்கார்டர்ஸ் கோர்ட்டு’ என்ற பெயர் கொண்ட ஒரு புதிய நீதிமன்றத்தைத் துவக்கினார். இதுகாறும் இயங்கி வந்த மேயரின் கோர்ட், இப்புதிய கோர்ட்டுடன் ஒன்றிக்கொண்டது. இப்புதிய நீதிமன்றத்தில் ரிக்கார்டர் (பதிவாளர்) என்ற புதிய பதவி ஒன்று நிறுவப்பட்டது. 1801-ஆம் ஆண்டில், பழைய சத்திரத்து நீதிஸ்தலமானது மூடப்பட்டு, பின்னர் அதற்குப் பதிலாக புது உயர் நீதிமன்றம் ஒன்று துவக்கப்பட்டது. இவ்வுயர் நீதிமன்றத்திற்கு ரிக்கார்டர்ஸ் கோர்ட்டில், ரிக்கார் டராகப் பணியாற்றி வந்த ஸர் தாமஸ் ஸ்ட்ரேன்ஜ் என்பவர், பிரதம நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் கீழ் இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள்.

ஸர் வில்லியம் டெனிஸன் 1861-66-ல் சென்னை கவர்னராகப் பதவியிலிருந்தார். இன்றைய ஹைகோர்ட்டு அவரது நிர்வாகத்தில்தான் உருவெடுத்தது. ஆகையால், அதைத் தோற்றுவித்த பெருமை அவரையே சாரும். சத்திரத்து நீதிமன்றத்தை மூடிய பின்னர், சென்னையில் ஆழ்வார்பேட்டையில் ஒரு பெரிய கட்டடத்தில் இரண்டு கோர்ட்டுகள் இயங்கிவந்தன. அவற்றுக்கு ‘ஸடர் கோர்ட்’ என்று பெயர். இக்கோர்ட்டின் இரு பிரிவினைகளிலும், முறையே ஸிவில் வழக்குகளும், கிரிமினல் வழக்குகளும் விசாரணை செய்யப்பட்டு வந்தன.
இதுகாறும் செயலாற்றிக்கொண்டு வந்த உயர் நீதிமன்றத்தையும், மேற்சொன்ன ஸடர் கோர்ட்டையும் இணைத்து, ஹைகோர்ட் ஆக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஹைகோர்ட்டின் முதல் அதிகாரப் பத்திரம், 1862 ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. 1865-ஆம் ஆண்டில் மற்றொரு அதிகாரப் பத்திரமும் ஹைகோர்ட்டுக்கு வழங்கப்பட்டது என்று தெரியவருகிறது.
இப்பொழுது வானளாவி நின்று காட்சியளிக்கும் இந்த ஹைகோர்ட்டின் கட்டட வேலை, 1889-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்புதிய கட்டடத்தின் விஸ்தீர்ணம் 1,00,000 சதுர அடி. இக்கட்டடம் அமைக்க, சுமார் 13 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது.1892-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதியன்று, சென்னை கவர்னர் வென்லாக் பிரபு, கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, வெள்ளியினால் செய்யப்பட்ட இக்கட்டடச் சாவி ஒன்றை, பிரதம நீதிபதியான ஸர் ஆர்தர் காலின்ஸினிடம் அளித்தார். சென்னைத் துறைமுகத்திற்கு எதிரே, தற்காலத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடத்தில் வெகு நாட்களாக இயங்கி வந்த ஹைகோர்ட், இப்புதுக்கட்டடத்தில் அலுவல்களைத் துவக்கியது.
இந்த விஸ்தீரணமான சிவப்புக் கட்டடங்களின் நடுவே, தரை மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் புதிய கலங்கரை விளக்கம் ஒன்று, நாள்தோறும் இரவுகளில் மாலுமிகளுக்கு வழிகாட்டி நிற்கின்றது. இதற்கு சற்றுத் தொலைவில், இப்பொழுது உபயோகத்தில் இல்லாத வேறு ஒரு கலங்கரை விளக்கம் நின்றுகொண்டிருக்கிறது.
புதிய கலங்கரை விளக்கத்தின் அடியில், கட்டடத்தின் உள்ளே, முதல் இந்திய நீதிபதியும், புகழ்பெற்றவருமான ஸர்.டி.முத்துஸ்வாமி அய்யரின் உருவச் சிலையை, வெள்ளைச் சலவைக் கல்லில் நாற்காலியில் அமர்ந்திருப்பது போல அமைத்துள்ளார் சிற்பி வேட் என்பவர். வேலை துவக்குவதற்கு முன்பு, சிற்பி கண்டது நீதிபதியின் ஒரு மங்கலடைந்த புகைப்படம்தான். ஆனால், ஐயர் அவர்களின் நண்பர்கள் கொடுத்த அங்க அடையாளங்களைக் கொண்டு, சிற்பி தன் மனத்தில் அவரது உருவத்தைக் கற்பனை செய்து, அவர் வடிவத்தைக் கல்லில் தத்ரூபமாகச் சமைத்துவிட்டார்.
முதல் உலக மகா யுத்தம் ஆரம்பமான சமயம், செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி 1914-ஆம் ஆண்டு, ‘எம்டன்’ என்ற பெயர் கொண்ட ஒரு ஜெர்மானிய யுத்தக் கப்பல், இரவு 9.20 மணிக்கு சென்னை மீது குண்டு வீசியது. வெடிகுண்டு ஹைகோர்ட்டின் கிழக்குப் புறச் சுற்றுச் சுவரில் (வடக்கு பீச் சாலை ஓரம்) பட்டு, சுவருக்குச் சேதம் விளைவித்தது. குண்டு பட்ட இடத்தில், ஒரு நினைவுச் சின்னமாகக் கல்வெட்டு ஒன்று புதைத்திருக்கிறார்கள். அதையும் இன்று நாம் காணலாம்!
- எஸ்.எஸ்.என்.