Published:Updated:

துணிவு விமர்சனம்: வங்கிக் கொள்ளையும் அதிரடி திருப்பங்களும்... ஒற்றை Gangsta-வாக மிரட்டுகிறாரா அஜித்?

துணிவு விமர்சனம்
News
துணிவு விமர்சனம்

படத்தின் மைய கருவான கார்ப்பரேட் வங்கிகளின் 'பைனான்சியல் க்ரைம்களை' ஒரே காட்சியில், ரசிக்கும் படியாகவும் எளிமையாகவும் காட்சிப்படுத்தியதற்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். ஆனால்...

Published:Updated:

துணிவு விமர்சனம்: வங்கிக் கொள்ளையும் அதிரடி திருப்பங்களும்... ஒற்றை Gangsta-வாக மிரட்டுகிறாரா அஜித்?

படத்தின் மைய கருவான கார்ப்பரேட் வங்கிகளின் 'பைனான்சியல் க்ரைம்களை' ஒரே காட்சியில், ரசிக்கும் படியாகவும் எளிமையாகவும் காட்சிப்படுத்தியதற்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். ஆனால்...

துணிவு விமர்சனம்
News
துணிவு விமர்சனம்
பங்குச் சந்தையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செய்த பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல், நாட்டையே பரபரப்பு ஆக்குகிறது. மறுபுறம், சென்னையில் உள்ள ஒரு பெரிய வங்கியைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டி நுழைகிறது. இவர்களுக்கு முன்பே அந்த வங்கியைக் கொள்ளையடிக்க அங்கே வீற்றிருக்கிறார் அஜித் குமார். இந்த கொள்ளையைக் கையில் எடுப்பவர் அதை வெற்றிகரமாக முடிக்கிறாரா, கொள்ளையடிக்கக் காரணம் என்ன, பங்குச் சந்தை ஊழலுக்கும் இந்தக் கொள்ளைக்கும் என்ன சம்பந்தம் உள்ளிட்ட கேள்விகளுக்கு ரேஸ் பைக் வேகத்தில் திரைக்கதை அமைத்து பதில்கள் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அ.வினோத்.

படத்தின் முதற்காட்சியில் இருந்தே கதைத் தொடங்கிவிடுகிறது. சாதாரண ஒரு ஷாட்டில் அறிமுகமாகும் அஜித் குமார், அப்போதிருந்தே மொத்த படத்தையும் தன் கேப்டன் கூல் மோடில் ஜாலியாகத் தாங்கியிருக்கிறார். மாடுலேஷனில் நையாண்டியாகப் பேசுவதும், காவல்துறையை மிரட்டுவதும் கலாய்ப்பதும், குட்டி டான்ஸ் போடுவதும், 'மைக்கேல் ஜாக்சனாக' மூன் வாக் (Moon Walk) போவதும் என அஜித் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட். தொய்வில்லாத திரைக்கதையும், அதனூடாகவே எல்லா கதாபாத்திரங்களும் அறிமுகமாகி, கதைக்குள் வரும் பாணியும் முதல் பாதியைச் சுவாரஸ்யமாக மாற்றியிருக்கின்றன.

துணிவு விமர்சனம்
துணிவு விமர்சனம்

காவல்துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, முதற்பாதியில் தன் கெத்தான மேனரிசத்தால் கவர்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் அந்த மிடுக்கு காணாமல் போய், பத்தோடு பதினொன்றாகிவிடுகிறார். நாயகியாக மஞ்சு வாரியர் படம் நெடுக வருகிறார். அவருக்கான மாஸ் காட்சிகளும் அப்ளாஸ் ரகம். ஆனால், அவரின் கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாகவும் தாக்கம் ஏற்படுத்தும் ஒன்றாகவும் அமைத்திருக்கலாம்.

அஜித்துக்குப் பெரும் போட்டியாக இருக்க வேண்டிய பிரதான வில்லன் ஜான் கொக்கேன், படத்துக்குப் பலமாக இல்லாமல் நாயகனுக்கு அடுத்த லேயரில் பயணிக்கும் சுமாரான இரண்டாம் கட்ட வில்லனாகவே தெரிகிறார். மகாநதி சங்கர், பக்ஸ், ஜி.எம்.சுந்தர், பிரேம் குமார் என எல்லோரும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். பால சரவணனை ஓவர் டேக் செய்து கைத்தட்டல்களை வாங்கும் மோகன சுந்தரம், சிரிப்புக்கு கேரன்ட்டி.

முதற்பாதியில், அஜித்துக்கும் காவல்துறைக்கும் இடையேயான காட்சிகளில் இருதரப்புக்கும் சம பலம் இருந்தது ஒரு சுவாரஸ்ய த்ரில்லர் டிராமாவாக படத்தை மாற்றியிருக்கிறது. ஆனால், அந்தப் பரபரப்பு இரண்டாம் பாதியில் அந்த லைவ் பேட்டியைத் தவிர மற்ற இடங்களில் மிஸ்ஸிங். குறிப்பாக, அஜித்தின் அல்ட்ரா கூல் மோட் மீதான கவர்ச்சி குறையக் குறைய, படத்திலுள்ள லாஜிக் ஓட்டைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன.

துணிவு விமர்சனம்
துணிவு விமர்சனம்

பலமிக்க காவல்துறை, மீடியா பேசுவதையும், கொள்ளையர் பேசுவதையும் கேட்டு மண்டையை ஆட்டிக்கொண்டிருக்குமா, மீடியாவிற்கு எப்படித் தகவல்கள் கசிகின்றன என்பதைக் கடைசியில்தான் ஆராயுமா, சிசிடிவி ஃபுட் டேஜ் பார்ப்பதை மட்டுமே முழு வேலையாகச் செய்துகொண்டிருக்குமா, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லிக்விட் கேஷாக (Liquid Cash) வைத்திருப்பதெல்லாம் இந்தியப் பொருளாதாரத்தில் சாத்தியமா எனப் பல கேள்விகள் எழுகின்றன.

இரண்டாம் பாதியில், அஜித் யார் என்பதையும் கொள்ளைக்கான காரணத்தையும் குறைந்த காட்சிகளின் வழியாக எமோஷனலாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். இந்த யுக்தி சிறப்பாக இருந்தாலும், கண் சிமிட்டும் நேரத்தில் வந்துபோகும் சில புதிய கதாபாத்திரங்களால் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. விறுவிறுப்பில் உச்சம் பெற்றிருக்க வேண்டிய இறுதி காட்சிகளும், எந்தவித லாஜிக்கும் அழுத்தமும் இல்லாமல் முடிந்துவிடுகின்றன. நாயகன் மேல் துப்பாக்கி குண்டுகள் படாது, பட்டாலும் அவருக்கு எதுவும் ஆகாது என்ற ஆதிகால சினிமா விதிமுறை 2023-லும் தொடர்வது வருத்தமே!

படத்தின் மைய கருவான கார்ப்பரேட் வங்கிகளின் 'பைனான்சியல் க்ரைம்களை' ஒரே காட்சியில், ரசிக்கும் படியாகவும் எளிமையாகவும் காட்சிப்படுத்தியதற்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். ஒரு பெருநிறுவனம், அது சார்ந்திருக்கும் வங்கி, சிறிய கார்ப்பரேட் நிறுவனங்கள், இவற்றின் இடையே இருக்கும் நிதி ஆதாய உறவு என அந்தக் குழப்பமான படிநிலையைச் சுவாரஸ்யமாகக் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால், பங்குச் சந்தை முதலீடுகள், கடன் அட்டை, லோன், இ.எம்.ஐ உள்ளிட்ட வங்கிச் செயற்பாடுகள், நிதி நிறுவனங்கள் என மொத்த நிதி அமைப்புகளுமே தவறானவை எனப் பொதுமைப்படுத்திப் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம்.
துணிவு விமர்சனம்
துணிவு விமர்சனம்

கடன் அட்டைகளும் சரி, வங்கிக் கடன்களும் சரி, ஒரு வளர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்துக்கு அவசியமானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அது குறித்த தெளிவும், ஜாக்கிரதை உணர்வும் அவசியம் என்பதை வெளிக்காட்டாமல் அதன் மீதே ஒரு ஒவ்வாமையையும் பயத்தையும் ஏற்படுத்தியிருப்பது நெருடல்.

மத்திய ஆயுதப்படைகள் அதிகாரியிடம், "ரவீந்தர் இது தமிழ்நாடு" என சமுத்திரக்கனி எச்சரிக்கும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது. ஆனால், அபத்தமான 'வடக்கன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, வட மாநில தொழிலாளர் ஒருவரை, 'உங்க ஊருக்கு போடா' எனத் தமிழர் ஒருவர் அடிக்கும் காட்சி முற்றிலுமாக அரசியலற்று இருக்கிறது. உழைக்கும் மக்களையே உழைக்கும் மக்களுக்கு எதிரியாகச் சித்திரிக்கும் இந்தக் காட்சி திரையரங்குகளில் கைத்தட்டலைப் பெறுவது, சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் சிந்திக்காமல் போனது வருத்தம்.

ஒளிப்பதிவில் நீரவ் ஷா சமரசமின்றி சுழன்று சுழன்று காட்சிப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உள்ள கேமரா மூவ்மண்ட்ஸ், கோணங்கள், இரண்டாம் பாதியில் வரும் அந்த சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சிகள் என எல்லாமே பக்காவான தியேட்டர் விருந்து. விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு, பரபர திரைக்கதைக்குப் பக்கபலமாக இருக்கிறது. அவரின் கத்தரிக்கோலுக்கு ஒரு கைதட்டு. முழு படத்திலும் தன் பின்னணி இசையை ஊற்றி நிரப்பியிருக்கிறார் ஜிப்ரான். சில இடங்களில், காட்சிகளை ஓவர் லேப் செய்யும் பின்னணி இசை, தலைவலியைத் தருகிறது. படத்தில் வரும் மூன்று பாடல்களும் 'ரசிகர்களுக்கு மட்டும்' தொந்தரவு இல்லாமல் வருகிறது.

துணிவு விமர்சனம்
துணிவு விமர்சனம்
மொத்தத்தில், ரேஸ் பைக்கில் போகும் திரைக்கதையும், கேப்டன் கூல் அஜித் குமாரின் பெர்பாமன்ஸும் இணைந்து அவரது ரசிகர்களுக்கு நல்லதொரு ட்ரீட்டைத் தந்திருக்கிறது. கொஞ்சம் லாஜிக் ஓட்டைகளையும், ஹீரோ அஜித்தை உரசக்கூட மாட்டேன் என அடம்பிடிக்கும் எதிரிகளின் துப்பாக்கி புல்லட்டுகளையும் தாங்கிக்கொண்டால், மற்றவர்களுக்கும் இந்த `துணிவு' ஒரு ட்ரீட்தான்.