Published:Updated:

``எஸ்கேப் ஆன கணவர், அஜித்தைப் பிடிக்கும் விஜய் ஃபேன்!'' - டிக் டாக் பயங்கரங்கள்

Tiktok
Tiktok

டிக்டாக்கில் சில ஏலியன் லெவல் வாடிக்கையாளர்கள் எல்லாம் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த ஆர்டிக்கிளை டெடிகேட் பண்றோம்!

தெம்பின்றி சுற்றிக்கொண்டிருக்கும் பாதி ஜீவராசிகளுக்கு கையிலிருக்கும் இன்ஸ்டன்ட் குளுக்கோஸ் பாட்டில்தான் ஸ்மார்ட் போன். தூக்கத்திலிருந்து எழுந்ததும் தலையணைக்கு அடியில் ஒளிந்திருக்கும் செல்போனை கப் ஐஸ் அடித்துக் கண்டுபிடித்த பிறகுதான் மனிதனுடைய அந்த நாளே தொடங்குகிறது. ஜெட் வேகத்தில் பறந்துகொண்டிருக்கும் டெக்னாலஜியைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸும் பல சிக்கலான செயலிகளைக் கண்டுபிடித்து நம் அன்றாட வாழ்க்கையைச் செயலிழக்கச் செய்கின்றது. இந்த வரிசையில் சமீபத்தில் வைரலான டிக்டாக் என்ற செயலியைப் பற்றியும், பாப்புலாரிட்டிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் சில ஏலியன் லெவல் டிக்டாக் வாடிக்கையாளர்களைப் பற்றியும்தான் பார்க்கப்போகிறோம்.

Tiktok
Tiktok
Varun

டிக்டாக்கில் சில புதுமையான முயற்சியில் வீடியோக்கள் வெளிவந்தாலும், கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சில `வேற்றுக் கிரக' லெவல் வீடியோக்களும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வளவு ஏன், டிக்டாக் சில உயிர்களைக்கூட காவு வாங்கியிருக்கிறது. வங்கதேசம், இந்தோனேசியா போன்ற சில நாடுகளில் இதை தடையும் செய்துவிட்டனர். இந்தியாவிலும் இதை தடை செய்ய சில பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. `எங்க புள்ளீய்ங்க எல்லாம் பயங்கரம்' என காலரைத் தூக்கிவிட்டு தடையை நீக்க வைத்தது அந்நிறுவனம்.

தமிழில் வெளியாகும் சில சினிமாக்களின் கனவும், லட்சியமும் 100 கோடி பாக்ஸ் ஆபீஸில் இணைவதாகத்தான் இருக்கும். இதை அசால்ட்டாக அடித்து துவம்சம் செய்துவிட்டது டிக்டாக். போகிற போக்கைப் பார்த்தால் டிக்டாக்கில் வெளியிடுவதற்கென்றே சில படங்கள் எடுத்தாலும் எடுப்பார்கள் போல. அந்தளவுக்கு நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. டிக்டாக் என்ற பெயருக்கு முன் `மியூசிக்கலி' என்ற பெயரில்தான் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்தது. பின் வேறொரு குழு, இதை வாங்கி டிக்டாக் என பெயர் வைத்தது. வெளியான புதிதில் பெரிதாக ரீச் இல்லையென்றாலும் நாளாக நாளாக சூடு பிடித்து மக்களை செம போதைக்கு அடிமையாக்கியது. இதில் ஆபாசப் பதிவுகள் அதிகமாக வெளிவருவதால் இதைத் தடை செய்ய வேண்டுமென பல்வேறு நாடுகளில் வழக்கு பதியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதோடு சேர்த்து `அஜித்தா விஜய்யா' பஞ்சாயத்துகளும் இதில் தொத்திக்கொண்டது. அஜித் ரசிகர்கள் விஜய்யைக் கலாய்க்க, விஜய் ரசிகர்களை அஜித் ரசிகர்களைக் கலாய்க்க, ஒரே கூத்தாக இருக்கும். அதில் ஒருவர், 'நான் விஜய் ஃபேன்தான். ஆனா, எனக்கு அஜித்தையும் பிடிக்கும்' என வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு சமாதானப் புறாவாக டிக்டாக்கில் பறந்துகொண்டிருக்கிறார். பீஸ் ப்ரோ!

வாடிக்கையாளர்களும் கோடிக் கணக்கில் இதை உபயோகிக்க, பல்வேறு ஆப்ஷன்களும் இதில் புதிதாக கொண்டவரப்பட்டது. யூடியூபைப் போல் இதில் மானிடைசேஷன்கூட இல்லை. காஸ்ட்யூம், மேக்அப் கிட், தங்க நகை ஆபரணங்கள் எனச் சில ஆயிரம் செலவு செய்து இதில் வீடியோ பதிவிடுகின்றனர். இதுகூட சோஷியல் மேட்டர், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். அதில் ஒரு படி மேலே சென்று சிங்கத்தின் பிடரியைப் போல் ஒருவர் அவரது தாடியையும் முடியையும் செட் செய்துகொண்டு `சிங்கம் ஒண்டிதான்டா காட்டுக்கு ராஜா' என வலம் வந்துகொண்டிருக்கிறார். இது சிங்கத்துக்குத் தெரியுமா ப்ரோ?!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக்கை பதம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு பாட்டிமா `பேட்ட' வேலனைப் போல் வேட்டி, கறுப்புச் சட்டை, கலர் கண்ணாடி போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் வீடியோ கூட வைரலானது. இன்னும் என்னவெல்லாம் நான் பார்க்கவேண்டியதிருக்குமோ?

`ஜஸ்ட் நவ்' ப்ரேக்கிங் நியூஸாக இருப்பது ஜேசன் ஸ்டாத்தம் கிளப்பிட்ட `பாட்டில்கேப் சேலஞ்ச்'தான். பாட்டிலின் மூடியை காலை வைத்து உதைத்தே துறந்துகாட்டி மாஸ் செய்தார். இது அப்படியே டிக்டாக்கில் `டொக் டொக்' என்று கதவைத் தட்ட, ஃபேன்ஸி டிரெஸ் காம்படீஷனில் கலந்துகொள்ளும் குட்டிக் குழந்தைபோல் கிருஷ்ணர் வேடம் போட்டுக்கொண்டு பாட்டில் கேப் சேலஞ்ச் செய்தார் ஒருவர். பகவானே! இது என்ன பிரமாதம்... இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவரைக் காணவில்லை என 2016-ல் வழக்கு பதிந்திருக்கிறார். மூன்று வருடங்கள் ஆகியும் அவர் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவரைக் கண்டுபிடித்த பிறகுதான், வீட்டில் ஏற்பட்ட ஒரு பிரச்னையை தீர்க்க முடியாமல் தமிழ்நாட்டிலிருந்து ஓசூர் தப்பிச் சென்றிருக்கிறார் எனத் தெரியவந்தது. அங்கு மெக்கானிக்காக வேலைக்கு சேர்ந்து, ஒரு திருநங்கையுடன் காதல்வயப்பட்டிருக்கிறார். (இந்த இடம்தான் த்ரில்லிங்கான இடம்) இருவரும் சேர்ந்து டிக்டாக் வீடியோ ஒன்றைச் செய்து பதிவிட்டுள்ளனர். அதைப் பார்த்த அவரின் மனைவி, `நீ இங்கதான் இருக்கியா' என கிளம்பி அவரை அலேக்காக பிடித்துவிட்டார். இது வேற லெவல் டிக்டாக்!

Tiktok
Tiktok

டிக்டாக்கில் தனியாக இப்படி ஒரு டிராக்கில் பலர் போய்கொண்டிருக்க, `இந்தாப் போறேன் டூயட்டுக்கு' என்றபடி சில கும்பல், டூயட் வீடியோக்களிலும் கலமிறங்கி கதகளியாடி வருகிறது. சிலரும் அதுக்குத் தகுந்த மாதிரியே டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு ஏன். `ஏய் சுழலி' அனுபமாகூட தற்போது டிக்டாக்கில் பயங்கர ஆக்டிவ். வித்தியாசமான சில கான்செப்ட்டுகளில் அனுபமா அவரின் ஐடியில் இருந்து வீடியோக்கள் வெளியிட, அதை டூயட் செய்கிறேன் என்ற பெயரில் அவரைக் கலாய்க்கும்படியான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொண்டு, அவரது ஐ.டியிலிருந்தே அதை ரீ-ஷேர் செய்திருந்தார், அனுபமா. பும்... பும்... பும்!

முன்னொரு காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பைக் கற்று, சில பல நாடகங்களில் நடித்து, ஆக்டிங்கில் அனுபவம் பெற்றால்தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைக்கும். இப்போதெல்லாம் அப்படியில்லை. டிக்டாக்கில் ஃபேமஸானாலே போதும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பிலிருந்து கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் வாய்ப்பு வரை சர்வசாதாரணமாகக் கிடைக்கும். டிக்டாக் சாதனையாளர்கள் சிலர், அவர்களுக்கு பாடி கார்ட்ஸ்கூட வைத்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். இந்த நாடு எங்க போகுது..? எல்லாம் டிக்டாக் பண்ணத்தான் போகுது! இது சமீபத்திய செய்திகள். பழைய ரெக்கார்டுகளை எடுத்துப் பார்த்தால் இன்னும் ஏராளமான ஃபன் கிடைக்கும். கழுத்தை உடைத்துக்கொள்தல், தலைகீழாகக் குதித்தல், கையை அறுத்துக்கொள்ளுதல் என ஒலிம்பிக்கை விஞ்சும் சில ஜிம்னாட்டிக்ஸ்கள்கூட டிக்டாக்கில் அரங்கேறும். இப்படிச் செய்வதற்கெல்லாம் ஒரே நோக்கம், பாப்புலாரிட்டி. டிக் டாக்கில் மூழ்கி, விண்வெளிக்குச் செல்லாமல் இருந்தால் சரி.

அடுத்த கட்டுரைக்கு