பாலிவுட் திரையுலகில் 15 வயதில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திவரும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதனிடையே சமீபத்தில் ஹன்சிகா பற்றிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தன. ஹன்சிகா நடிக்க வந்த ஆரம்பத்தில் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்த ஒருவர் தொடர்ந்து அவரை டேட்டிங்குக்கு அழைத்து, துன்புறுத்தியதாக ஹன்சிகா கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும், `அந்த நடிகர் யார்?' என்ற கேள்விகளை எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இதுபோன்ற ஒரு விஷயத்தை நான் பேசவே இல்லை. தவறான தகவல்களை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மை தன்மையை அறிந்துக்கொண்டு பின் அவற்றை வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.