பொதுவாக முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்று செய்தி வெளிவந்தால் அந்தப் படத்தின் அப்டேட்டுகள் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருப்பது வழக்கம். இந்நிலையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜூனியர் என்டிஆர் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்டுகளை கேட்காதீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராஜேந்திர ரெட்டி இயக்கத்தில் நந்தமூரி கல்யாண் ராம் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அமிகோஸ்'. பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்பட விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டார். அப்போது பலரும் அவரது 30வது திரைப்படம் குறித்த அப்டேட் கேட்டபோது அதற்குப் பதிலளித்த அவர், "ஒரு படம் தொடங்கியதுமே அந்தப் படம் தொடர்பான அப்டேட்டுகளைக் கேட்காதீர்கள். தினமும் படம் குறித்த அப்டேட்டை பகிர்ந்துகொண்ட இருக்க முடியாது. அது மிகவும் கடினமான ஒன்று. ரசிகர்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பதால் அது தயாரிப்பாளருக்கும், இயக்குநர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அப்படியே அப்டேட்டுகள் கொடுத்தாலும் அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் ட்ரோல் செய்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு அழுத்தத்தை உண்டாக்குகிறது. நாங்கள் நடிக்கும் படம் தொடர்பான அப்டேட்டுகளை எங்கள் மனைவிகளிடம் சொல்வதற்கு முன்பே ரசிகர்களாகிய உங்களிடம்தான் முதலில் தெரிவிக்கிறோம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்" என்று ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.