Published:Updated:

Jr.NTRக்கு அனிருத், ரவி தேஜாவுக்கு ஜி.வி, பிரபாஸுக்கு ச.நா; அக்கட தேசத்தில் அனல் பறக்கும் தமிழ் இசை!

தமிழ் இசை

தெலுங்கு சினிமாவில் தமிழ் இசையமைப்பாளர்கள் பலரும் பயங்கர பிஸியாக இருக்கிறார்கள். அது பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு இங்கே!

Published:Updated:

Jr.NTRக்கு அனிருத், ரவி தேஜாவுக்கு ஜி.வி, பிரபாஸுக்கு ச.நா; அக்கட தேசத்தில் அனல் பறக்கும் தமிழ் இசை!

தெலுங்கு சினிமாவில் தமிழ் இசையமைப்பாளர்கள் பலரும் பயங்கர பிஸியாக இருக்கிறார்கள். அது பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு இங்கே!

தமிழ் இசை
தெலுங்கு சினிமாவில் தமிழ்க் கலைஞர்கள் பலர் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை. குறிப்பாக, நம் ஊர் ஒளிப்பதிவாளர்களுக்கு டோலிவுட்டில் செம டிமான்ட். பி.சி.ஶ்ரீராம், ரவி.கே.சந்திரன், ரத்னவேலு, ஆர்தர் வில்சன், முரளி, சத்யன் சூரியன், விஜய் கார்த்திக் கண்ணன் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். அதே போல, தமிழ் இசையமைப்பாளர்கள் பலர், தெலுங்கு சினிமாவை இசை வாயிலாக அலங்கரிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.  
தேவி ஶ்ரீ பிரசாத்
தேவி ஶ்ரீ பிரசாத்

தேவி ஶ்ரீ பிரசாத், தமன் இந்த இருவர்தான் டோலிவுட் ஹீரோக்களின் ஆஸ்தான இசையமைப்பாளர்கள். கீரவாணி, மணிசர்மா போன்ற சீனியர்கள் இருந்தாலும் மிக்கி ஜே.மேயர், விவேக் சாகர், காலபைரவா, மஹதி ஸ்வர சாகர் போன்ற இசையமைப்பாளர்கள் டோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்கள்.

இவ்வளவு இசையமைப்பாளர்கள் இருந்தும் தமிழ் இசையமைப்பாளர்களை கமிட் செய்வதில் ஆர்வமாக இருக்கிறது டோலிவுட். காரணம், வெரைட்டி தேவைப்படுகிறது. சென்னையை மையமாகக் கொண்டு சினிமா இயங்கிய சமயத்தில், எல்லா கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் எல்லா மொழிப் படங்களுக்கும் வேலை பார்த்தனர். பின், அந்தந்த ஊருக்கு போன பின்புதான், நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. நிறைய புதுமுகங்கள் திரைக்கு முன்னும் பின்னும் இயங்க ஆரம்பித்தனர். 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்று சொல்வது போல, இப்போது மீண்டும் எல்லோரும் எல்லா மொழி படங்களிலும் பணிபுரிய ஆரம்பித்துவிட்டனர். இது ஒரு ஆரோக்கியமான சூழலே. நம் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் தெலுங்கில் ஒப்பந்தமாகி இருக்கும் படங்கள் பற்றிப் பார்ப்போம்.  

யுவன் ஷங்கர் ராஜா - அனிருத்
யுவன் ஷங்கர் ராஜா - அனிருத்

சமீபமாக, இளையாராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் வெங்கட் பிரபு - நாகசைதன்யா கூட்டணியில் உருவான 'கஸ்டடி' படத்திற்கு இசையமைத்திருந்தனர். இதற்கு முன், இளையராஜா இசையில் கிருஷ்ணா வம்சி இயக்கிய 'ரங்கமார்த்தாண்டா' திரைப்படம் தெலுங்கில் வெளியானது. தற்போது, டோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நாயகனான விஷ்வக் சென் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 

கொரடாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'தேவாரா' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் நாயகியாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். இது தவிர, 'ஜெர்ஸி' படத்தை இயக்கிய  இயக்குநர் கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார் அனிருத். 'ஜெர்ஸி' படத்தின் வெற்றியில் அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல படங்களுக்கு அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 

ஜி.வி.பிரகாஷ் - சந்தோஷ் நாராயணன்
ஜி.வி.பிரகாஷ் - சந்தோஷ் நாராயணன்

நானியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அதில் 'சம்கீலா அங்கீலேசி' (தமிழில் 'மைனரு வேட்டிக்கட்டி') பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு அபாரமாக இருந்தது. இன்ஸ்டா ரீல்ஸ் முழுக்க இந்தப் பாடல்தான். தவிர, பின்னணி இசையிலும் சந்தோஷ் மிரட்டியிருந்தார். மண்ணுக்கான இசையை மண் சார்ந்த இசையைக் கொடுப்பதில் சந்தோஷ் நாராயணன்தான் இந்தியாவிலேயே பெஸ்ட் என நானி விகடன் பேட்டியில் கூறியிருந்தார்.

அடுத்ததாக, 'நடிகையர் திலகம்' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இசையமைத்து வருகிறார், சந்தோஷ். தவிர, வெங்கடேஷ், நவாஸுதின் சித்திக்கி நடிக்கும் 'சைந்தவ்' படத்திலும் ச.நாவின் இசை ஆளப்போகிறது. 

ஜி.வி.பிரகாஷ் ஆரம்பத்திலிருந்தே அவ்வப்போது தெலுங்குப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஹீரோவான பிறகுதான், இசையமைப்பது குறைந்தது. இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து நிறைய படங்கள் இவரது இசையில் வெளியாக இருக்கின்றன. ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வர ராவ்' படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது ஒரு பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, பஞ்ச வைஷ்ணவ் தேஜ், ஶ்ரீலீலா, ஜோஜு ஜார்ஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கும் 'ஆதிகேஷவா' என்ற படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் ஜூலையில் ரிலீஸாக இருக்கிறது. தவிர, 'பீஷ்மா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கி குடுமுலா - நித்தின் - ராஷ்மிகா நடிக்கும் புதிய படத்திற்கும் ஜி.வி-தான் இசை.   

தமிழ் இசையமைப்பாளர்கள்
தமிழ் இசையமைப்பாளர்கள்

ஹாரிஸ் ஜெயராஜ் எப்போது ரீ-என்ட்ரி கொடுப்பார் என அவரது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவரது கான்சர்டுக்கும் கூட்டம் அலை மோதுகிறது. தமிழில் தற்போது ஜெயம் ரவியின் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கில் நித்தின் படமொன்றுக்கும் நாகசெளரியா படமமொன்றுக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பிரபாஸ் நடித்த 'சாஹோ' படத்திற்கு இசையமைத்திருந்த ஜிப்ரானின் இசையில் 'அமிகோஸ்', 'ஹன்ட்' என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி, மம்மூட்டி நடித்த 'ஏஜென்ட்' படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சந்தீப் கிஷன் நடிக்கும் 'Buddy' படத்திற்கும் இசையமைத்து கொண்டிருக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஜஸ்டின் பிரபாகரன் கரியரில் திருப்புமுனையாக அமைந்தது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்த 'டியர் காம்ரேட்' படம்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த விஷால் சந்திரசேகரும் தெலுங்கில் கலக்கி வருகிறார். 'சீதா ராமம்' பாடல்கள் அனைத்தும் அதற்கு சாட்சி. இந்தப் படத்திற்கு முன், நிறைய தெலுங்குப் படங்கள் இசையமைத்திருந்தாலும், இந்தப் படத்திற்கு கிடைத்த பாராட்டும் வரவேற்பும் அபாரமானவை. இவர்கள் தவிர, லியோன் ஜேம்ஸ், நிவாஸ் கே.பிரசன்னா என நம்ம ஊர் இசையமைப்பாளர்கள் பலரும் டோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்கள். 

கலக்குங்க ட்யூட்ஸ்!