தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கடந்த 2009-ம் ஆண்டு நடிகையும் திரைப்பட இயக்குநருமான ரேணு தேசாயை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2012-ல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இவர்கள் `பத்ரி’, `ஜானி’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் பவன் கல்யாணின் ரசிகர்கள் தன்னை வில்லி போல நடத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார் ரேணு.

கடந்த சனிக்கிழமை தன் மகன் அகிராவின் 19-வது பிறந்த நாளில் ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் தன் மகனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் ரேணு. அதற்கு பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர், `எங்கள் சகோதரர் (பவன் கல்யாண்) மகனின் முகத்தை எங்களிடம் இருந்து மறைத்து அநியாயம் செய்துள்ளீர்கள்’ என்பது போல பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ரேணு, `அகிரா என் மகன். உங்கள் சகோதரரின் மகன் மட்டும் அல்லர். நீங்கள் தாய்க்குப் பிறக்கவில்லையா? நீங்கள் பெரும் ரசிகர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கண்ணியமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உணர்ச்சியற்றவர்கள்’ எனக் கூறியிருந்தார்.
மேலும் அந்த ரசிகரின் பதிவை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் பதிவிட்டு, `இதுபோன்ற கருத்துகளை நான் தொடர்ந்து புறக்கணித்து வருகிறேன். ஆனால், இன்று என் மகனின் பிறந்தநாள். இந்நாளில் இந்த உணர்ச்சியற்ற கருத்தை படித்தது எனக்கு மிகவும் வலித்தது’ எனக் கூறியிருந்தார். இதற்கும் பவன் கல்யாணின் ரசிகர்கள் பலர் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இவை அனைத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக, ``கடந்த 11 ஆண்டுகளாக நான் இதே போன்ற பல கருத்துகளைக் கையாண்டு வருகிறேன். என் மகனின் பிறந்தநாளில் தாயாக நான் காயமடைந்தேன். என்னை வில்லியாகச் சித்திரிக்கும் கதை எப்போது முடிவுக்கு வரும்? நான் இதனால் மிகவும் சோர்வாக உணர்கிறேன். அமைதியாக இருப்பதும் எதிர்வினையாற்றாமல் இருப்பதும் என் மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளது” என ரேணு தேசாய் குறிப்பிட்டுள்ளார். பின்னர் ரேணு தன் போஸ்ட்டில் யாரும் கமென்ட் செய்ய முடியாத வகையில் செட்டிங்கை மாற்றிவிட்டார்.