ராஜமௌலி இயக்கத்தில், கீரவாணி இசையில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ‘நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதினை வென்று சாதனை படைத்த நிலையில் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் படக்குழுவினருக்கு குவிந்து வருகிறது.
அந்தவகையில் நடிகர் ராம் சரண் கூட சமீபத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

இதனிடையே நடிகர் ராம் சரண் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வழக்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விருப்பப்படுவதாகப் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ‘India Today Conclave 2023’ என்ற நிகழ்ச்சியில் ராம் சரண் கலந்துக்கொண்டுள்ளார். அப்போது அவரிடம் , எதிர்காலத்தில் நீங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், ``விளையாட்டு சம்பந்தமான கதாபத்திரங்களில் நான் நடிக்க விரும்புகிறேன். ஸ்போர்ட்ஸ் தொடர்பான படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை" என ராம் சரண் கூறியிருக்கிறார்.
மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பீர்களா? என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, நிச்சயம் நடிப்பேன். அவர் ஒரு உத்வேகமான ஆளுமை கொண்ட பிளேயர். விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். நான் கோலியைப் போன்றே தோற்றம் கொண்டுள்ளதால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.