கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என பாலிவுட் வரை சென்றிருக்கிறது. அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, பெண்கள் தினத்தை முன்னிட்டு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள அந்தப் பேட்டியில், “சமூகத்தில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த மாற்றங்களில் ஏற்படும் வளர்ச்சியில் பெண்கள் அங்கம் வகிக்க வேண்டும். சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வல்லவர்கள் பெண்கள்தான். பெண்கள் இன்று ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் உயர் பதவிகளில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் சக பெண்களுக்கும் உத்வேகமாக இருக்கின்றனர்" என்று கூறியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் ராஷ்மிகா சந்தித்த ட்ரோல்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த அவர், "சோஷியல் மீடியாக்களில் ஒரு புறம் என்னை ட்ரோல் செய்து கொண்டிருந்தாலும், எனக்கு வரும் பாசிட்டிவ் கருத்துகளை மட்டுமே நான் எடுத்துக்கொள்கிறேன். எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பொழியும் அன்பிற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். என் மீது வைக்கப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் நான் வருத்தப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால் இன்று நான் என் வேலையில் மட்டுமே கவனத்தைச் செலுத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.