95-வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 12-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கிறது.
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த விருது நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ராஜமெளலி, ராம் சரண், கீரவாணி உள்ளிட்ட 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராம் சரண், ஹாலிவுட் படத்தில் தான் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், "ஹாலிவுட் படத்தில் நான் நடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் எப்போது அந்தப் படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது குறித்தும் படம் தொடர்பான அப்டேட் குறித்தும் ஓரிரு மாதங்களில் தெரிவிக்கப்படும். ஜூலியா ராபர்ட்ஸ், டாம் க்ரூஸ் மற்றும் பிராட் பிட் போன்ற ஹாலிவுட் பிரபலங்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “ஆஸ்கர் விருதுக்கு 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ‘நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைச் செய்யப்பட்டதற்கு நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியில் உள்ளோம். இது மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தியாவில் காத்திருக்கும் என் அப்பாவிற்கும் (சிரஞ்சீவி) இது உணர்ச்சிகரமான ஒன்றுதான்.

நான் விருது விழாவில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கு கிளம்பும்போது என் அப்பா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். 42 வருடங்களில் 152 படங்களில் நடித்துள்ள அவர் 80களில் ஆஸ்கர் விருது விழாவுக்கு இங்கு வந்துள்ளார். அதையே அவர் மிகப்பெரிய சாதனையாக உணர்ந்திருக்கிறார். ஆஸ்கர் என்பது எங்களுக்கு ஒலிம்பிக் தங்க பதக்கத்தைப் போன்றது" என்று தெரிவித்திருக்கிறார்.