பிரபல இயக்குநர் எஸ். எஸ் ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார்.
ராஜமௌலியின் பல படங்களுக்கும் கதை எழுதியுள்ள விஜயேந்திர பிரசாத், தற்போது ஆர். எஸ்.எஸ் பற்றி கதை எழுதி வருகிறார்.

இந்நிலையில் இது தொடர்பாக தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த ராஜமௌலி, “எனக்கு ஆர். எஸ்.எஸ் பற்றி அதிகம் தெரியாது. அந்த அமைப்பை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அது எப்படி உருவானது அதன் சித்தாந்தங்கள் என்ன? என்பதெல்லாம் பற்றி எனக்கு தெரியாது. தற்போது ஆர். எஸ்.எஸ் பற்றி எனது தந்தை எழுதிய கதையை படித்தேன். அது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அந்தக் கதையைப் படிக்கும்போது பலமுறை அழுதேன்.
ஆனால் நான் அதை படமாக இயக்குவேனா என்று கேட்டால் அது இப்போதைக்கு எனக்குத் தெரியாது. ஏனென்றால் என் தந்தை வேறு தயாரிப்பாளருக்காகவோ, அமைப்பிற்காகவோகூட எழுதியிருக்கலாம். ஒருவேளை அந்த கதையை நான் இயக்கினால் பெருமைப்படுவேன்.

காரணம், அது ஒரு அழகான மனிதம் நிறைந்த உணர்ச்சிகரமான டிராமா. ஆனால் அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றித் தெரியவில்லை. நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார் .