சமீபத்தில் நடைபெற்று முடித்த 95-வது ஆஸ்கர் விருது விழாவில் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில், ராம் சரண் ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில், கீரவாணி இசையில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல்களுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவிற்குப் பெருமையை சேர்த்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராஜமௌலி ஆஸ்கர் விருதுகள் பொருளாதார வளர்ச்சியை எப்படி ஏற்படுத்துகிறது என்று கொரியன் திரைத்துறையை உதாரணம் காட்டி பேசியிருக்கிறார். இது குறித்துப் பேசிய ராஜமௌலி, “ஆஸ்கர் விருதுகள் ஏன் மிகப்பெரிய விஷயங்களாகக் கருதப்படுகிறது என்றால், உங்கள் படங்களுக்கு ஆஸ்கர் போன்ற விருதுகள் கிடைக்கும்போது அவை சர்வதேச அங்கிகாரம் பெறுவது மட்டுமின்றி பொருளாதார அளவிலும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக தென் கொரிய சினிமா துறைகள், பத்து வருடங்களுக்கு முன்பு மிகச்சிறியத் தொழில்துறையாகத்தான் இருந்தது.
ஆனால் 'பாராசைட்' திரைப்படம் மற்றும் ஒரு சில தென் கொரிய ஹிட் ஷோக்களுக்குப் பிறகு அங்குள்ள தொழித்துறைப் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் அந்த திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து அதை விரும்புபவர்கள் அதிக பேர் இருப்பதால், கொரிய உணவு துறையில் ஆர்வம் 100 மடங்கு அதிகரித்து வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதேபோல் கொரிய அழகுச் சாதனத்துறையும் திரைபடங்களைப் பார்த்து வளர்ச்சி கண்டிருக்கிறது. எனவே நம் படங்களின் மூலம் சர்வதேச அளவில் கால்பதித்தால், இந்திய படங்களும் வளரும், அதை விட இந்திய உணவுத்துறை, இந்திய அழகுசாதனத் துறைகள் வளர்ச்சிக்கண்டுப் பொருளாதார அளவிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்திருக்கிறார்.

'பாராசைட்' திரைப்படத்தைப் பொறுத்தவரைக்கும் 2019 ஆம் ஆண்டு ஆஸ்கர் அகாடமி விருதைப் பெற்ற முதல் கொரியத் திரைப்படமாகும். அதன் பின்னர், உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரிய படங்களிலும், நிகழ்ச்சிகளிலும் அதிக விருப்பத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.