இயக்குநர் மற்றும் நடிகர்கள் தங்களின் திரைப்படங்கள் வெளியான பிறகு பார்வையாளர்களின் மனநிலையை, படம் பிடித்திருக்கிறதா இல்லையா போன்றவற்றைத் அறிந்துகொள்ள நேரடியாகத் திரையரங்கிற்குச் சென்று பார்வையாளர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பது வழக்கம்.
அந்தவகையில் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை எடுத்து கோல்டன் குளோப் வரை சென்றுள்ள இயக்குநர் ராஜமெளலி, தன் படங்களை பார்வையாளர்கள் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள 100 முறைகூட திரையரங்கிற்குச் சென்று பார்வையாளர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

இது பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், "என் படங்களை பார்வையாளர்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதேசமயம், அவர்களுக்குப் படம் பிடித்திருக்கிறாதா இல்லையா? என்பதை பற்றி நான் யோசிப்பதில்லை. அப்படி பார்வையாளர்கள் உங்கள் படங்களை மதிப்பிட ஆரம்பித்துவிட்டால் அவர்களால் படத்தை புரிந்துகொள்ள முடியாது.
என் படங்களை மதிப்பிடுவதற்கு நான் ஒரு சிறந்த வழியைக் கையாளுகிறேன். அது என்னவென்றால், தியேட்டருக்குச் சென்று, பார்வையாளர்களுடன் அமர்ந்து, ஒவ்வொரு காட்சிகளுக்கும் அவர்கள் எப்படி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை உணர வேண்டும். எனது திரைப்படங்களை பார்வையாளர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காகச் சில சமயங்களில் பத்து, முப்பது, நாற்பது ஏன்... நூறு முறைகூட திரையரங்குகளுக்குச் செல்வேன்" என்று கூறியுள்ளார்.