கட்டுரைகள்
Published:Updated:

“மரணத்துலதான், எல்லாத்தையும் கடந்து அன்பு மேலெழும்பி வருது!”

பலகம் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
பலகம் படத்தில்...

மசாலா படங்களை மக்கள் விரும்பி ரசிக்கிறதாலதான் அப்படியான படங்கள் அதிகமா வருது. ஹாரர் படம் ஹிட் ஆச்சுன்னா அதே ஜானர்ல படம் வர்றதில்லையா? அந்தமாதிரிதான் மசாலா படங்களும்

அதிரடி ஆக்‌ஷன் தெலுங்குப் படங்களுக்கு மத்தியில் கிராமத்து சென்டிமென்ட்களுடன் வெளியாகி ரசிகர்களின் இதயங்களைக் கனக்கவைத்திருக்கிறது, குடும்ப உறவுகளையும் பாசத்தையும் மையப்படுத்திய ‘பலகம்' திரைப்படம். அதுவும், ஆந்திர கிராமங்களில் தெருவுக்குத் தெரு படத்தைப் போட்டுப்பார்த்து நெகிழ்ச்சியடையும் அளவுக்குப் பாராட்டுகளைக் குவித்துவருகிறது. குறைந்த பட்ஜெட், எளிமையான திரைக்கதை என உருவாக்கி மெகா வசூலைக் குவித்த இப்படத்தின் இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான வேணு எல்டாண்டிக்கு வாழ்த்து சொல்லிப் பேசினேன்.

வேணு எல்டாண்டி
வேணு எல்டாண்டி

‘‘நகைச்சுவை நடிகர் நீங்கள். ஆனா, இப்படிப்பட்ட சென்டிமென்ட் படத்தை இயக்கணும்ங்குற எண்ணம் எப்படி வந்தது?’’

“எனக்கு டயலாக் எழுதுறது ரொம்பப் பிடிக்கும். ‘ருத்ரமாதேவி' படத்தில் அல்லு அர்ஜுன் சாருக்காகக் கொஞ்சம் போர்ஷனை எழுதியிருக்கேன். அதேமாதிரி, ஜூனியர் என்.டி.ஆரோட ‘ஜெய் லவ குசா' படத்திலும் எழுதியிருக்கேன். 200 படங்களுக்குமேல காமெடி நடிகரா எல்லா முன்னணி ஹீரோக்கள் கூடவும் நடிச்சிட்டேன். காமெடி ட்ராக்கும் எழுதுவேன். அந்த அனுபவம்தான் இந்தக் கதையை எழுத வெச்சது. சென்டிமென்ட் கதையா இருந்தாலும் என்னோட வழக்கமான காமெடி ட்ராக்கும் இந்தப் படத்துல இருக்கிறதை கவனிச்சிருப்பீங்க.

என் வாழ்க்கையில ஒரு மோசமான காலகட்டம் 2016-17தான். ரெண்டு வருஷம் பட வாய்ப்புகள் இல்லாம இருந்தேன். சினிமாவுல உச்சத்துக்கும் போவோம், சரிவும் வரும். எனக்கும் அப்படியான சரிவுக் காலகட்டம் அது. நான் பிறந்தது, தெலங்கானாவுல கரீம்நகர் மாவட்டம். அப்பா விவசாயி. 9 பிள்ளைகள் நாங்கள். நான்தான் கடைக்குட்டிப் பையன். ரொம்ப ஏழ்மையான குடும்பம். வறுமை, கஷ்டம், வலி எதுவுமே புதுசு கிடையாது. அதனால, இந்த இடைவெளியைப் பழகிக்கிட்டேன். அப்போதான், ‘நமக்குத் தெரிஞ்சது எழுதுறதுதானே’ன்னு திரைக்கதை எழுத ஆரம்பிச்சேன். அதுக்கு மிக முக்கியமான காரணம்னு சொல்றதைவிட கரு, என் அப்பா வெங்கடய்யாவின் மரணம்தான். என் குடும்பம் பெரிய குடும்பம். வழக்கமான சாவில் பார்க்குற சொந்தபந்தங்களைவிட அதிகமா வந்திருந்தாங்க. சிலர் அழுதாங்க, சிலர் சிரிச்சுக்கிட்டிருந்தாங்க. சிலர் கூல்ட்ரிங்ஸ் வாங்கிக் குடிச்சுக்கிட்டிருந்தாங்க. சிலர் ஒவ்வொருத்தரையும் கட்டிப்புடிச்சு சம்பவங்களைச் சொல்லி அழுதுக்கிட்டே இருந்தாங்க. இதையெல்லாம், பார்த்து அதையே சினிமாவாக்கலாம்னு தோணுச்சு.

பலகம் படத்தில்...
பலகம் படத்தில்...

ஒரு மனுஷனோட மரணத்துலதான், அவரை நாம எப்படி நடத்தினோம்னு மத்தவங்க சுயபரிசோதனை செஞ்சுக்கறாங்க. அவரோட நல்ல குணங்களை அப்பதான் பேசறோம், அவர் இருக்கும்போது அதையெல்லாம் பேசியிருக்க மாட்டோம். அவர்மீது இன்னும் கொஞ்சம் அன்பு காட்டியிருக்கலாமேன்னு குற்ற உணர்வு வருது. மரணத்துலதான், எல்லாத்தையும் கடந்து அன்பு மேலெழும்பி வருது. இதைத்தான் படத்தில் உணர்த்த நினைச்சேன்.

முதல்ல நான் ஹீரோவா நடிக்கணும்னுதான் இந்தக் கதையை எழுதினேனே தவிர, இயக்கணும்ங்குற எண்ணமே இல்ல. தயாரிப்பாளர் சிவராம் சார்கிட்ட கதையைச் சொன்னேன். ‘நல்ல கதையா இருக்கு. பெரிய ஹீரோவையே வெச்சுப் பண்ணலாம். இந்தக் கதையோட உணர்வை உண்மையிலேயே அனுபவிச்ச உங்களாலதான் ரசிகர்களுக்குக் கடத்த முடியும். நீங்களே இயக்கிடுங்க’ன்னு சொல்லிட்டார். அப்படித்தான் இயக்குநர் ஆனேன். படத்தை இயக்கும்போது ‘நம்மள நம்பி ஒரு டீமே வேலை பார்த்துக்கிட்டிருக்கு. தோல்வி அடைஞ்சா என்ன ஆகும்’னு கவலையோடவே இருந்தேன். அப்போல்லாம் என் மனைவி லதாதான் ‘நல்லதே நடக்கும்’னு நம்பிக்கை கொடுத்துக்கிட்டிருந்தாங்க. நல்ல கம்பேக் கொடுத்தது பெரிய சந்தோஷம். இப்போ, நடிக்கவும் வாய்ப்புகள் வந்திட்டிருக்கு. நிறைய தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் கதையும் கேட்டிருக்காங்க.’’

பலகம் படத்தில்...
பலகம் படத்தில்...

‘‘தில்ராஜு எப்படி இந்தப் படத்துக்குத் தயாரிப்பாளரா ஆனார்?’’

‘‘தில்ராஜு சார் தெலுங்குல பெரிய தயாரிப்பாளர். அவர் தயாரிச்சு இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணினா பெரிய ஓப்பனிங் கிடைக்கும்னு சொல்லி தில்ராஜு சார்கிட்ட அனுப்பிவெச்சார் சிவராம். ‘பலகம்' படம் தெலங்கானா, ஆந்திரா, ராயலசீமா என மூன்று பகுதி மக்களோட கலாசாரத்தையும் மையப்படுத்தியது. என்னைப் போலவே தில்ராஜு சாரும் தெலங்கானாதான். கதையைச் சொன்னதும் தில்ராஜு சாருக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. சென்டிமென்ட் கதைன்னாலே அவருக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா சப்போர்ட்டும் பண்ணுனாரு. படத்தோட மொத்த பட்ஜெட்டே 4 கோடிதான். வசூல் 26 கோடி ரூபாய்க்குமேல போயிடுச்சு. குடும்பம் குடும்பமா போயி பார்க்குறாங்க. சின்ன வயசுல மக்கள் இப்படி வந்து படம் பார்த்ததை நான் பார்த்திருக்கேன். என் படத்தை இப்படி மக்கள் பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. கிராமத்து மக்கள் தங்கள் கடந்த கால வாழ்க்கையை இந்தப் படத்தில் திரும்பிப் பார்த்துக்கறாங்கன்னு தோணுது.’’

பலகம் படத்தில்...
பலகம் படத்தில்...

‘‘தெலுங்குப் படங்கள் என்றாலே எக்ஸ்ட்ரா மசாலாக்களை அள்ளிக்கொட்டி, அதகளம் பண்ணியிருப்பாங்க என்கிற எண்ணம் ரசிகர்களிடையே இருக்கே..?”

‘‘மசாலா படங்களை மக்கள் விரும்பி ரசிக்கிறதாலதான் அப்படியான படங்கள் அதிகமா வருது. ஹாரர் படம் ஹிட் ஆச்சுன்னா அதே ஜானர்ல படம் வர்றதில்லையா? அந்தமாதிரிதான் மசாலா படங்களும். கே.விஸ்வநாத் சாரின் ‘சங்கராபரணம்', தெலுங்கு சினிமாவோட மிகச்சிறந்த படமா கொண்டாடப்படுது. அதுல மசாலா இல்ல, ஆக்‌ஷன் இல்ல. ஆனா, மிகப்பெரிய ஹிட். இந்தமாதிரிக் கதைகளைக் கொடுத்தாலும் மக்கள் ரசிப்பாங்க. எனக்கு ‘பலகம்' கதைமேல ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு. அது நினைச்சமாதிரி ஹிட் அடிச்சிடுச்சு.’’

‘‘ஓரளவுக்கு தமிழ் பேசுறீங்களே... எப்படி?’’

“25 வருஷமா நடிக்கிறேன். தமிழ்நாட்டுக்கு 20 தெலுங்குப் படங்களுக்கு மேல ஷூட்டிங் வந்திருக்கேன். அதேமாதிரி, கேமராமேன், ஆர்ட்டிஸ்ட்கள், டெக்னீஷியன்கள், டான்ஸர்கள்னு தமிழ்லேர்ந்து நிறைய பேர் இங்க வந்து ஒர்க் பண்ணுறாங்க. ரொம்ப வருஷம் முன்னாடி நாலஞ்சு தமிழ்ப் படங்களிலும் சின்னச் சின்ன ரோலில் நடிச்சிருக்கேன். அந்தப் பழக்கத்துலதான் தமிழ் பேசுறேன்.’’

பலகம் படத்தில்...
பலகம் படத்தில்...

‘‘தமிழ்ப்படங்கள் பார்ப்பீங்களா?’’

“பாலா சார், வெற்றிமாறன் சாரோட பெரிய ஃபேன் நான். ‘பருத்தி வீரன்', ‘கர்ணன்', ‘சார்பட்டா பரம்பரை' எல்லாமே மண் சார்ந்த படங்கள், இதெல்லாம் நான் ரொம்ப ரசித்த படங்கள். தமிழ் இயக்குநர்கள் நேட்டிவிட்டி சார்ந்துதான் படங்கள் இயக்குறாங்க.’’

‘‘நீங்கள் ஒரு நகைச்சுவை நடிகர், தமிழில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் யார்?’’

‘‘வடிவேலு சார்தான் என்னோட ஃபேவரிட். பாடி லாங்குவேஜாலயே சிரிக்க வெச்சிடுவார். சந்தானம் சார், கருணாஸ், சதீஷ் எல்லாரையுமே பிடிக்கும். ‘பொல்லாதவன்' படத்துத் தெலுங்கு வெர்ஷன்ல கருணாஸ் சார் பண்ணின ‘நீ கேளேன்’ காமெடியை நான்தான் பண்ணினேன்.’’

பலகம் படத்தில்...
பலகம் படத்தில்...

‘‘ ‘பலகம்’ படத்துக்குத் தமிழ்நாட்டிலிருந்து பாராட்டுகள் வந்ததா?’’

“பாக்கியராஜ் சார் போன் பண்ணி ‘வொண்டர்ஃபுல்... பியூர் தெலுங்கு சினிமா’ என்று பாராட்டினார். அப்புறம், மோகன் சாரும் ‘சூப்பரா இருக்கு. எங்கப்பா, அம்மா எல்லோருக்கும் படம் பிடிச்சிருந்தது’ன்னு சொன்னார். தெலுங்கில் எல்லா முன்னணி ஹீரோக்களும் கொண்டாடினாங்க. படம் வெளியான மறுவாரமே சிரஞ்சீவி சார் நேரில் அழைத்துப் பாராட்டினார்.’’

‘‘உங்களோட அடுத்த படம் என்ன?’’

“தில்ராஜு சார்க்குதான் என் ரெண்டாவது படத்தையும் பண்ணுறேன். இதுவும் மண் சார்ந்த கதைதான். எமோஷன்ஸ் இருக்கும். இந்த வருட கடைசியில ஷூட்டிங் போறோம்.’’

பலகம் படத்தில்...
பலகம் படத்தில்...

‘‘படத்தோட க்ளைமாக்ஸ் ரொம்ப உருக்கமா இருந்தது...’’

‘‘க்ளைமாக்ஸ் பாட்டுல உண்மையாவே பாடக் கூடியவர்களைத்தான் படத்திலேயே நடிக்கவெச்சேன். அதனாலதான், இவ்ளோ ரியாலிட்டி கிடைச்சது. கிராமத்து மக்களைக் கூட்டிக்கிட்டு வந்து சுத்தி நிக்க வெச்சேன். அவங்க எல்லோருமே க்ளைமாக்ஸ்ல அழுதுட்டாங்க. நடிகர்கள் பெரும்பாலும் க்ளிசரினே பயன்படுத்தாம இயல்பா நடிச்சாங்க. க்ளைமாக்ஸ் காட்சியில கேமராமேன் அழுதாரு, டெக்‌னீஷியன்களும் அழுதுட்டாங்க. எடிட்டிங்கின்போது க்ளைமாக்ஸ் காட்சி 19 நிமிஷம் வந்துடுச்சு. அதைக் குறைக்க வேணாம் எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொன்னார் தில்ராஜு. அதேமாதிரி படமும் மக்கள்கிட்ட கனெக்ட் ஆகிடுச்சு.’’