Published:Updated:

ரஃபேல் முதல் திருவள்ளுவர் வரை... 2019-ன் பிரச்னைகளும், அரசியல்வாதிகளின் `அடடே’ உளறல்களும்!

சர்ச்சை, உளறல், காமெடி என மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்கு இவர்கள் செய்த கோமாளித்தனத்தில் கிறுகிறுத்து கிடக்கிறது நாடு. என்னென்ன பிரச்னைகள், என்னென்ன உளறல்கள்... வாங்க பார்க்கலாம்!

‘அடடே’ உளறல்களும்

வருடா வருடம் பிரச்னைகள் நிகழ்வதும், அதற்குத் தீர்வு சொல்கிறேன் பேர்வழி என அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த வருடமும் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் வைக்காமல் சிறப்பான சம்பவங்களையெல்லாம் செய்தனர் அரசியல்வாதிகள். சர்ச்சை, உளறல், காமெடி என மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்கு இவர்கள் செய்த கோமாளித்தனத்தில் கிறுகிறுத்து கிடக்கிறது நாடு. என்னென்ன பிரச்னைகள், என்னென்ன உளறல்கள்... வாங்க பார்க்கலாம்!

2
ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங் - ரஃபேல் ஊழல் வழக்கு:

இந்தியாவை வலுப்படுத்த ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது ஒப்பந்தம் செய்தது. அதன் பின் பொறுப்பேற்ற பி.ஜே.பி அரசு ரஃபேல் விமான விவகாரத்தில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டியது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ். ரஃபேல் ஊழலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என மாறி மாறி குற்றம் சாட்டி, நாடே பதறி சிதறிக்கொண்டிருந்தது. இந்தச் சர்ச்சைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு, பிரான்ஸிடமிருந்து இந்தியாவுக்கு வந்தது ரஃபேல். இப்போது ட்ரோல் அதுவல்ல. அதை நம் அரசு எப்படி வரவேற்றது என்பதில் பொதிந்து கிடக்கிறது அற்புதமும் அதிசயமும். பூ, பொட்டு, பழம், ரஃபேல் விமானம் தலையில் தேங்காய், சக்கரத்துக்குக் கீழே எலுமிச்சை என அறிவியலில் ஆன்மிகத்தைப் புகுத்தி பீதியைக் கிளப்பினார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

`சிரித்த முகத்தோடு இவர் செய்த பூஜைகள் சிவனுக்கே சிலிர்த்திருக்கும், ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது' என சீரியஸ் மோட் டு சிரிப்பு மோடில் மாறி மாறி ஒரு வாரத்திற்கு கருத்துத் தெரிவித்து கலாய்த்துத் தள்ளினர் நெட்டிசன்கள்.

3
பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த் - பேனர் விவகாரம்:

சட்ட விரோதமாக பேனர் வைத்ததில் அது விழுந்து ஐடி பெண் சுபஶ்ரீ இறந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி மீது, எதிர்க்கட்சிகள் வலுவான குற்றச்சாட்டுகளை வைக்க, முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்துக்கொண்டிருக்க இத்தனையையும் தாண்டி கள்ள மெளனம் சாதித்தது தமிழக அரசு.

இந்நிலையில், அப்போது அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்த, தே.மு.தி.க, இந்த விவகாரத்திற்கு ஆற்றிய எதிர்வினை தமிழகத்தை எகிற வைத்தது. பேனர் விவகாரம் தொடர்பாகப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், `அது அவருடைய விதி. பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்' எனக் கொளுத்திப் போட, கடுமையான எதிர்வினைகளுக்கு ஆளானார் அவர்.

4
அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார் - நித்தியானந்தாவின் கைலாசா:

பெண்கள் மீதான பாலியல் வழக்குகள், ஆசிரமத்தில் சிறுவர்கள் சித்ரவதை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து கிளம்ப, உடனே தலைமறைவானார் நித்யானந்தா. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் தனித்தீவை விலைக்கு வாங்கிவிட்டேன். இந்து மதத்தைப் பின்பற்ற என் சொந்த நாட்டில் நிறைய தடைகள் உள்ளதால் கைலாசா எனப் பெயரிட்டுள்ள இந்த நாட்டில் குடியேற உள்ளேன். எனது பக்தர்களும் இங்கு குடியேற விருப்பம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என நித்யானந்தா ஆன்லைனில் தட்டிவிட, பத்திக்கொண்டது பரபர.

`இதென்னடா புதுக்கதை?' என அரங்கேறிய ஆச்சர்யங்களுக்கு இணையாக, காமெடியும் ஒரு பக்கம் கலக்கலாகச் சென்றது. தி.மு.கவையும் ஸ்டாலினையும் அடிக்கடி பொதுவெளியில் சீண்டி வந்த ஜெயக்குமார், குடியுரிமை மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்ததற்கு, ஸ்டாலின் எதிர்வினையாற்ற, எதிர்வினைக்கு எதிராக நிற்கிறேன் என அவருக்கு பதிலடியும் தர... `இப்படியே மாறி மாறி பார்த்துட்டே இருந்தோம்' என்ற மோடில் அவர் கையில் எடுத்தது நித்யானந்தாவின் கைலாசாவைதான். ஸ்டாலின் முதல்வராக வேண்டுமானால் நித்யானந்தா போல ஒரு தீவு வாங்கி, அவரே தன்னை முதல்வராக அறிவித்துக்கொள்ளட்டும். தமிழகத்தில் முதல்வராக அ.தி.மு.கவால் மட்டுமே முடியும் எனத் திரியைக் கொளுத்த, `புஃப்' என ஊதித் தள்ளி கலாய்த்தனர் மீம் பாய்ஸ்.

5
நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் - வெங்காய விலை உயர்வு:

பெட்ரோல் விலையேற்றம், வெங்காய விலையேற்றம் என அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வரலாறு காணாத வகையில் விலையேற, விழி பிதுங்கி விக்கித்து நின்றனர் சாமானியர்கள். பிறந்தநாள் பரிசாக வெங்காயம், கல்யாண சீர்வரிசையில் வெங்காயம், வெங்காயத்துக்கு மாற்றாக சமையலில் என்ன பண்ணலாம் என வரிசையாக ஒரே வெங்காய புராணத்தை வைத்து நாலாப்பக்கமும் கன்டென்ட் தேத்தினார்கள். இத்தனை கலவரத்துக்கும் மத்திய அரசு என்ன தீர்வு வைத்திருக்கிறது எனக் கேட்டால், "நான் வெங்காயம், பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்ளாத குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கிறேன்" என்று பொறுப்பாகப் பதில் சொல்லி வெறுப்பேற்றினார் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தமிழக மக்கள் கூடத்தான் பிஜேபிக்கு ஓட்டு போடவில்லை. நாங்கள் ஜி.எஸ்.டி கட்டாமல் இருக்கோமா? பொது மக்களின் அடிப்படை கஷ்டம்கூட புரியாமல் ஒரு அமைச்சரா என நாலாப்பக்கமும் கோபத்தைக் கக்கினர் மக்கள்.

6
ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா - திருவள்ளுவருக்கு காவிச்சாயம்:

வெள்ளை உடையில் பொதுமறைப்புலவராக இருந்த திருவள்ளுவரை காவி உடை, நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சம் எனக் காவி வண்ணம் பூசி, அடுத்த பிரச்னையை ஆரம்பித்தது தமிழக பிஜேபி. இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில்தான் திருக்குறள் உள்ளது. எனவே, திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் என ஹெச்.ராஜாவும் ஆரம்பிக்க, பொதுமறை புலவர்க்குக் காவிச்சாயம் பூசுவது எந்த வகையிலும் சரியில்லை, அவர் எந்த மதத்தைச் சார்ந்தவரும் இல்லை என இணையத்தில் கலவரம் வெடித்தது. இதன் எதிரொலியாக திருவள்ளுவர் சிலையின் கண்களுக்குக் கறுப்பு துணி கட்டி, கலவரம் செய்து எனப் பொது வெளியிலும் சர்ச்சை தொடர்ந்தது.

7
ராமதாஸ்-அன்புமணி

அ.தி.மு.கவுடன் பா.ம.க குழப்பக் கூட்டணி:

தி.மு.கவுடன் கூட்டணி இல்லை... அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை... என ஏகப்பட்ட இல்லைகளுக்குப் பிறகு மாறி மாறி கூட்டணியைத் தொடர்ந்த பா.ம.க, ஒரு கட்டத்தில் திராவிடக் கட்சிகளுடனே இனி கூட்டணியில்லை என அறிவித்தது. வெளியிட்ட அறிவிப்பை நியாயம் செய்யும் வகையில், அ.தி.மு.க அரசையும் தி.மு.கவையும் லெஃப்ட் ரைட் வாங்க, பல மக்கள் பிரச்னைகளை முன்வைத்து கிழித்தது பா.ம.க. எல்லாம் தேர்தல் வரைதான். நாடாளுமன்றத் தேர்தல் வர, மீண்டும் திரை விலக்கி அ.தி.மு.கவுடன் கூட்டணியில் குதித்து `நான் சொன்னதை நம்பீட்டீங்களா?' எனப் பழிப்பு காட்டி, வழக்கம்போல `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என அடாது மழையிலும், விடாது கூட்டணியைத் தொடர்கிறது பா.ம.க.

8
பா.ஜ.க எம்பி கணேஷ்சிங்

பா.ஜ.க எம்பி கணேஷ்சிங் - சம்ஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது:

மதம், மொழி என இந்த ஆண்டு எல்லா ஏரியாவிலும் இறங்கியடித்தது பா.ஜ.க. போன முறை ஆட்சியின்போது அடிக்கடி புதிய இந்தியாவுக்குப் பிறப்பு கொடுத்தவர்கள், இந்த ஆண்டு மொழியை வளர்த்தெடுத்தார்கள்.

`இந்தி, சம்ஸ்கிருதம் எல்லாம் தேவ பாஷைகள். சம்ஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது. நாடி நரம்புகள் எல்லாம் நலமுடன் இருக்கும். இதுமட்டுமா, கணினி மென்பொருள்களை சம்ஸ்கிருத மொழியில் உருவாக்கினால் அவை நீண்ட ஆயுளோடு எந்தக் குறையும் இல்லாம் செழித்திருக்கும். இதை நாசாவே சொல்லியிருக்கிறது' என பா.ஜ.க எம்பி கணேஷ்சிங் ஸ்டேட்மென்ட் தட்டி விட பரபரப்பானர்கள் மீம் கிரியேட்டர்ஸ்.

9
ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திரபாலாஜி:

ஜெயக்குமார், செல்லூர் ராஜு என அ.தி.மு.கவின் உளறல் அமைச்சர்களுக்கு டஃப் கொடுத்து இவர்களை எல்லாம் இந்த வருடம் ஓவர் டேக் செய்தார் ராஜேந்திர பாலாஜி. ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் மோடியா, லேடியா எனக் கேட்க, அவர் காலத்துக்குப் பின்பு `அம்மா இல்லாத சூழலில் மோடிதான் எங்களுக்கு டாடி, இந்தியாவுக்கும் டாடி' என மோடி புகழ் பாடினார்.

`முதல்வராக வேண்டுமென வெறிபிடித்து ஸ்டாலின் சுற்றிக்கொண்டிருக்கிறார். அதற்கு என்ன செய்ய முடியும்? ஒரு சினிமா எடுத்து முதல்வராக நடித்து விடுவதைத் தவிர வேறு வழி இல்லை' என ஸ்டாலினையும் தன் உளறல் மூலம் விளாசினார். `இந்தியாவின் வித்து மோடிதான். ராகுல் காந்தி தாய்மாமன் மடியில் உட்கார்ந்து காது குத்தினாரா?' என தேசிய அரசியலிலும் களம் புகுந்து இந்த வருடம் உளறல் நாயகனாக கிரீடம் சூடினார் பாலாஜி.

அடுத்த கட்டுரைக்கு