துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ராயல் ரிசார்ட் உலகிலேயே அதிக கட்டணம் வாங்கும் ஓய்வு விடுதியாக விளங்குகிறது. இந்த ரிசார்ட்டில் தங்க ஒரு நாள் இரவுக்கு முக்கிய அறைக்கு கட்டணம் சுமார் 82.5 லட்சம் ஆகும்.

ஆடம்பர வசதிகளையும் பிரம்மாண்டத்தை காட்டி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது மத்திய கிழக்கு நாடான துபாய். உலகின் மிகப்பெரிய வேளாண் சுற்றுலாத் தளமாக `துபாய் அக்ரி ஹப்’ திட்டத்தை செயல்படுத்தி, உலக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பிரமிக்க வைக்கும் விதமாக துபாயின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது `அட்லாண்டிஸ் தி ராயல்’ ரிசார்ட். உலகின் முன்னணி வடிவமைப்பாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு பிரமிக்க வைக்கும் வானுயர்ந்த கட்டிடமாக விளங்குகிறது.
எந்த அறைக்கு எவ்வளவு கட்டணங்கள்..?
அட்லாண்டிஸ் தி ராயல் ரிசார்ட்டில் மொத்தம் 800 அறைகள் உள்ளன, அதில் `ராயல் மேன்ஷன் அறை மிகவும் விலை உயர்ந்த அறையாகும்.
இதில் தங்க ஒரு நாள் இரவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வசூலிக்கப் படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 82.5 லட்சமாகும்.

இந்த ஹோட்டலில் தங்க குறைந்த விலையில் அறைகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதற்காக கட்டணம் சுமார் 4,134 திர்ஹாம்கள் (ரூ.92,000) ஆகும்.
மிடில் கிளாஸ் அளவுக்கு தங்க வேண்டும் என்றால் அதற்காக பனோரமிக் பென்ட்ஹவுஸ் அறைகள் உள்ளன. இதில் தங்க கட்டணம் 36,000 டாலர்கள் (கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்) ஆகும்.
சிறப்பு அம்சங்கள்...
அட்லாண்டிஸ் ஹோட்டலின் அறைகள் மற்றும் லாபிகளில் கண்ணைக்கவரும் வகையில் தங்கத்தாலும் பளிங்குகளாலும் அலங்காரங்கள் ஜொலிக்கும்.
ஹோட்டலின் சுவர்கள் உண்மையான தங்க வால்பேப்பரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
குளியலறைகள் இத்தாலிய பளிங்குகளால் அழகுபடுதப்ப்பட்டுள்ளது.
ஹோட்டலில் 17 பிரபல நிறுவனங்களின் சுவையான உணவு வகைகள், தரமான பார்கள் உள்ளன.

ஆடம்பரம், அனுபவித்தல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இங்குதான் வரவேண்டுமாம்.
``இந்த இடம், மனிதனின் கற்பனைக்கு சவால் விடும் வகையில், ஆடம்பரத்திற்கான ஒரு எல்லையாகவும், சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாகவும் இருக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் கலைநயமிக்க தலைசிறந்த படைப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், அழகான கைவினைத்திறன்கள் காண்பவர்களை வியக்க வைக்கும். இங்கு வருபவர்களுக்கு சாத்தியமற்ற பயணமாக இந்த இடம் இருக்கும். மிக உயர்ந்த சேவை தரமாக வழங்கப்படும். இங்கு நீங்கள் தங்கியிருக்கும் ஒவ்வொரு கணமும் உங்கள் வாழ்க்கையில் நம்பமுடியாத அனுபவமாக அமையும் ” என்கிறது அட்லாண்டிஸ் தி ராயல் நிர்வாகம்.