தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மீனவப் பெண்களின் கடைகளை அகற்றியது சரியா?

மீனவப் பெண்களின் கடைகளை அகற்றியது சரியா?
பிரீமியம் ஸ்டோரி
News
மீனவப் பெண்களின் கடைகளை அகற்றியது சரியா?

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி `அவள் விகடன்' சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

சென்னை, பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் `லூப்’ சாலைகளில் மீனவப் பெண்கள் பல ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தக் கடைகளால் சாலை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து இடையூறு பிரச்னைகள் உள்ளதாகக் கூறி, நீதிமன்ற உத்தரவுப்படி அவை அகற்றப்பட, அப்பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். `அவர்களுக்கான மாற்று வழிகளை அரசு ஏன் யோசிக்கவில்லை?’, ‘தனியாரின் பெரிய பெரிய ஆக்கிரமிப்புக் கட்டடங்களையும் இதே வேகத்தில் இடிக்குமா அரசு?’ எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்...

Jaya Jaya

எளிய மக்களின் வாழ்வாதாரத்தை இப்படி துடைத்துப் போடுவதற்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றமும், அதைச் செயல்படுத்திய அரசும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மற்ற காரணிகளிலும் இதேபோல நடவடிக்கை எடுப்பார்களா?

Prabhu AS

கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைக்க நினைக்கிறார்கள். கடலை நம்பியிருக்கும் மீனவ மக்களை அங்கிருந்து போகச் சொல்கிறார்கள்.

பாலா சனவேலி

பிரைவேட் பீச், பிரைவேட் ஃபால்ஸ் ஆக்கிரமிப்புகள், மலைகளில் அனுமதிக்கப்படாத பகுதிகளில் ரிசார்ட்களின் ஆக்கிரமிப்புகள், ஆசிரமம் கட்டுவதாக பல நூறு ஏக்கர் காட்டை அழித்த ஆக்கிரமிப்புகள் குறித்த வழக்குகள் எல்லாம் பல்லாண்டுகளாக நிலுவையிலேயே இருக்கும் போது, வாழ்வாதாரத்துக்காக மீன் விற்கும் எளிய மக்களின் கடைகளை ஒரே உத்தரவால் அகற்றும் இந்த அதிகாரம் பயங்கரமானது.

Vijay Anand E G

மாற்று ஏற்பாடு செய்து தராமல் அவசர அவசரமாக விசாரித்துத் தீர்ப்பு தரவேண்டிய அவசியம் என்ன வந்தது? இது அப்படியொன்றும் தலைபோகிற பிரச்னை இல்லையே.

Jaganathan

மீன், இறைச்சி கடைகள் என்றாலே அது ஏதோ கீழானது என்ற மனநிலையில் உள்ளவர்கள் ஆட்சி, அதிகாரங்களில் இருக்கும்போது அந்தத் தொழிலுக்கும் அதைச் செய்யும் மக்களுக்குமான அடிப்படை உரிமை இப்படித்தான் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

Naga Rajan

எல்லா ஊர்களிலும் சாலைகளை ஆக்கிரமித்துக் கட்டப் பட்டுள்ள பெரிய பெரிய வணிகக் கட்டடங்கள், வானுயர்ந்து நிற்கின்றன. அவர்கள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்துவிடுகிறார்கள். சொல்லப்போனால், அவர்கள் வளாகங்களுக்கு மக்கள் வந்து செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ள அதிகாரிகளால் ஆவணச் செய்யப்பட்ட வரலாறுகள் உண்டு. அதையும் பார்த்துவிட்டு, இதையும் பார்க்க வேண்டியிருப்பது மக்களின் சாபம்.

diNeShMT

நீதிமன்றமும் மாநகராட்சியும் இதே வேகத்தில் செயல் பட்டிருந்தால், சென்னையில் காணாமல் போன பல ஏரிகளை இப்போது நாம் தேடிக்கொண்டிருந்திருக்க வேண்டாம். போக்குவரத்து இடையூறு, நகரம் விரிவாக்கல், வளர்ச்சித் திட்டங்கள் என எளிய மக்களை வெளியேற்றத் தான் எத்தனை பெயர்கள்!

மீனவப் பெண்களின் கடைகளை அகற்றியது சரியா?
மீனவப் பெண்களின் கடைகளை அகற்றியது சரியா?

Dhayanithi

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியதுதான். ஆனால், அந்த மீனவ வியாபாரிகளுக்கான மாற்று வழிகளை ஏற்படுத்திக்கொடுத்த பின்னர் உயர் நீதிமன்றமும், அரசும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

the_john_tales

இடம் பெயரே நொச்சிக்குப்பம். அது மீனவர்களின் பகுதி. அவர்களின் வாழ்விடம். அவர்கள்தான் அதன் பூர்வகுடி. அந்த வழியில் செல்பவர்களின் சொகுசுப் பயணங்களுக்காக அவர்களை வேரில் இருந்தே பிடுங்கி எறிவார்களா?!

itsme_ayan_k

காந்தி நகர், சிந்தாதரி பேட்டையில் உள்ள பல்லவன் நகர், தீவுத்திடல் சத்தியவாணிமுத்து நகர் மற்றும் இந்திரா நகர், சிந்தாதரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் ஓட்டேரி கொன்னூர் ரோடு, கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம் திடீர் நகர்... இப்படி கடந்த சில வருடங் களாக உழைக்கும் விளிம்புநிலை மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள குடிசைகள் பல. உலகமயமாக்கல், வணிகமயமாக்கல், நவீனமயமாக்கல் என்ற பெயரில் இந்தப் பட்டியல் இன்னும் நீளவே செய்யும் என்பதே கசப்பான உண்மை.

Ran Boyot

அதிகாரமும் சட்டமும் ஏழைகளிடம்தான் வேகமாகப் பாயும். கார்ப்பரேட், பெரும் முதலாளிகளிடத்தில் குனிந்து பணிந்து கும்பிடு போடும். இவர்கள் அவர்களுக்கு ’வேலை’ செய்ய, அல்லது செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் இருக்க வழங்கப்படும் சம்பளத்துக்கு, மக்களின் வரிப்பணம் செல்கிறது.

Abimanyu Sharma

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துக்கு எதிராக 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த வழக்கு முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? பார்ப்போம்.