மும்பை பாந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான் கான் 19 மாடிகள்கொண்ட ஹோட்டல் ஒன்றைக் கட்ட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக, பழைய கட்டடம் இருக்கும் நிலம் ஒன்றை வாங்கி ஹோட்டல் கட்டும் திட்டத்துக்கு மும்பை மாநகராட்சியில் ஒப்புதலும் வாங்கியிருக்கிறார். ஆனால், இந்த ஹோட்டலுக்கு மும்பை பா.ஜ.க தலைவர் ஆசிஷ் ஷெலார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஆசிஷ் ஷெலார் அளித்திருக்கும் பேட்டியில், ``அமைதி மற்றும் சுதந்திரத்துக்கு இடையூறாக இருக்கும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஹோட்டல் கட்டும் திட்டத்துக்கு முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

பாந்த்ரா - வெர்சோவா கடல் பாலத்துக்கு அருகில் ஹோட்டல் கட்டப்படவிருக்கிறது. பா.ஜ.க., வளர்ச்சிக்கு எதிரான கட்சி கிடையாது. அதேசமயம் மக்களின் அமைதி மற்றும் சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் அனுமதிக்க முடியாது. ஆயிரக்கணக்கான மக்கள் கார்களுடன் பாந்த்ராவுக்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது” என்றார்.
மும்பை மாநகராட்சி தேர்தல் குறித்துக் கேட்டதற்கு, ``அக்டோபருக்கு முன்பு அதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றுவோம் என்ற இலக்கை பா.ஜ.க அடையும். மும்பையின் அடுத்த மேயர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவராக இருப்பார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பா.ஜ.க-வுக்கு அச்சுறுத்தலாக இல்லை. பா.ஜ.க. வளர்ச்சியை விரும்புகிறது” என்றார். மும்பை மாநகராட்சியில் ஏராளமான ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்பட்டாலும், மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டதற்கு, ``நாங்கள் தனிப்பட்ட முறையில் யாருக்கும் எதிராக இல்லை. .
ஊழல் படிந்த இந்த சிஸ்டத்துக்கு எதிராகத்தான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார். மும்பை மாநகராட்சிக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றுவிட்டால், சல்மான் கான் ஹோட்டல் கட்டுவதில் மேலும் சிக்கல் ஏற்படலாம்.