லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா: பொண்ணுக்கு தங்க மனசு!

 மாவிஸ் பேட்டர்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
மாவிஸ் பேட்டர்சன்

ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் 15 முதல் 49 வயசுக்குள்ள இருக்கிற பெண்கள்ல 83 சதவிகிதம் பேர் பெண்ணுறுப்பு சிதைப்புக்கு உள்ளானவங்களாம். அதிர்ச்சியா இருக்கு.

திடீரென்று பெய்த கோடை மழையால், கருப்பட்டி காபி கடையில் வினு, விமல், வித்யா மூவரும் ஒதுங்கினார்கள்.

“வெயிலுக்கு ஜில்லுனு லிச்சி ஜூஸ், நுங்கு ஜூஸ்னு குடிக்கலாம்னு நினைச்சேன். சட்டுனு கிளைமேட் மாறிருச்சு. நவதானிய சுண்டலும் கருப்பட்டி காபியும் சாப்பிட வச்சிருச்சு.”

“வித்யாக்கா, ஒரு மாற்றத்தை நான் கவனிச் சேன்... டீக்கடைகள்ல பெண்கள் நின்னு டீ குடிக்க மாட்டாங்கன்னு சொல்வாங்க. விருகம் பாக்கம், நடேசன் நகர் கருப்பட்டி காபி கடைக் குப் போனேன். அங்கே பெரும்பாலும் பெண்கள் உட்கார்ந்து காபி சாப்பிட்டுக்கிட்டே பேசிட்டி ருந்தாங்க” என்றாள் விமல்.

“சென்னையில் சில அமைப்புகள் பொது வெளியும் பெண்களுக்கானதேங்கிற நோக்கத் தோடு, பெண்கள் சந்திப்புகளை நடத்திட்டு வர்றாங்க.”

“அப்படினா என்ன வினு?”

“பெண்கள் கூட்டமா சேர்ந்து டீக்கடையில டீ குடிச்சிட்டு, அரட்டையடிச்சிட்டு வர்றாங்க.”

”அப்படியா வினு! அடுத்த தடவை எங்கே யாவது நடந்தா சொல்லு. நாமளும் போலாம்!”

“ஓகே வித்யாக்கா. ரெண்டு மாசம் முன்னால மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மேல பாலியல் குற்றச் சாட்டைச் சுமத்தி, நடவடிக்கை எடுக்கச் சொல்லிப் போராடினது பத்தி பேசிட்டிருந்தோம் நினைவிருக்கா?”

“ஆமா, இப்போ மறுபடியும் போராட்டத்தைத் தொடர்ந்துகிட்டு இருக்காங்களே, இன்னும் நடவடிக்கை எடுக்கலையா, விமல்?”

“ஆமா, தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர். எம்.பி-யாவும் இருக் கார். அதனால இன்னும் நடவடிக்கை எடுக்கல. கோர்ட்கூட இதைக் கண்டிச்சிருக்கு.”

“இதுல இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரா இருக்கும் பி.டி.உஷா சொன்னது என்னை ரொம்பவே அதிர்ச்சியாக்கிருச்சு. ‘இப்படி வீராங்கனைகளும் வீரர்களும் போராடுறது ஒழுக்கமின்மை யைக் காட்டுது. நாட்டுக்குத் தலைகுனிவு’ன்னு சொல்லி யிருக்காங்க.”

“ஒரு காலத்துல உஷா மேல நான் ரொம்ப மரியாதை வச்சிருந்தேனே... இவ்வளவு மோசமான கருத்தைச் சொல்லணுமா? ஒரு பெண்ணா இருந்தும் இந்தப் பிரச்னையைப் புரிஞ்சுக்கலையே... கொடுமையா இருக்கு” என்று வித்யா புலம்ப ஆரம்பித்தார்.

“தலைவர் ஒழுக்கத்தோட இருந்திருந்தா இந்தப் பிரச்னையே வந்திருக்காது. இந்த ஸ்டேட்மென்ட்டை அவரைப் பார்த்துச் சொல்ல வேண்டியதுதானே உஷா மேடம்...இந்தியாவுக்காக விளையாடி, பதக்கங்கள் வாங்கிட்டு வந்து பெருமை சேர்த்தவங்களே இப்படிப் போராட வேண்டியிருந்தா, சாதா ரணமானவங்க எல்லாம் என்ன செய்யறது?”- கோபமாகச் சொன்னாள் வினு.

“ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. புதுச்சேரில அரசாங்க அலுவலகத்துல வேலை செய்யற பெண்கள் வெள்ளிக்கிழமை ரெண்டு மணி நேரம் பர்மிஷன் எடுத்துக்கலாம்னு சொல்லி யிருக்காங்க. அதை பத்தி என்ன நினைக்கிறே விமல்?”

“பெண்கள் இதை ஏத்துக்கக் கூடாது வித்யாக்கா. இதுல ரெண்டு விஷயம் இருக்கு. ஒண்ணு, வீட்டைச் சுத்தம் செய்றது பெண் களோட வேலைன்னு அரசே அடிச்சு சொல்லுது. இன்னொண்ணு இந்த மாதிரி உரிமைகள் எல்லாம் பெண்கள் கேட்கல. சம வேலைக்கான சம ஊதியம் கொடுத்தா போதும். நம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பெண்கள் தங்களோட பர்சனல் டைம்ல செஞ்சிடுவாங்க.”

மூவரும் பருத்திப்பால் குடித்துக்கொண்டே அரட்டையைத் தொடர்ந்தார்கள்.

“முன்னபின்ன தெரியாதவங்களுக்குக்கூட நாம உதவி செய்வோம். உறுப்பு தானம் செய்வோமா?” என்று விமல் கேட்க, வினுவும் வித்யாவும் புரியாமல் பார்த்தனர்.

“இங்கிலாந்துல 44 வயசு லூசிக்கு கிட்னி ஃபெயிலியர். இன்னும் சில வருஷங்களே உயிரோட இருப்பாங்கன்னு சொல்லிட்டாங்க. அதனால அவங்க இணையர், ஒரு நகரும் வீடு அதாவது வேனுக்குள்ளே இருக்கும் ஒரு வீட்டை வாங்கிட்டு, மனைவியை சந்தோஷமா வச்சுக்கணும்னு ஊர் ஊரா கிளம்பிட்டார். அப்ப ஒரு இடத்துல அவங்க நாய் ஓடுச்சு. அதைப் பிடிக்கப் போனப்ப கேட்டி ஜேம்ஸைப் பார்த்தாங்க. 40 வயசான கேட்டி, லூசியோட கதையைக் கேட்டாங்க. உடனே தன்னோட சிறுநீரகத்தைக் கொடுக்கறதா சொல்லிட்டாங்க. லூசிக்கு ஆச்சர்யமாயிருச்சு. கேட்டி ஏற்கெனவே தானம் கொடுக்கறதா பதிவு செஞ்சு வச்சிருந்தாங்க. லூசிக்கும் கேட்டிக்கும் பரிசோதனைகளைச் செஞ்சப்ப எல்லாம் ஒத்துப்போச்சு. சக்ஸஸ்ஃபுல்லா சர்ஜரியும் பண்ணினாங்க. இப்போ சந்தோஷமா இருக்காங்க ரெண்டு பேரும்!”

“அட... செம்மையா இருக்கு விமல். கேட்டி ஜேம்ஸுக்கு தங்க மனசு!”

“எங்கிட்ட இருந்த இன்னொரு கிட்னியைத் தானே கொடுத்தேன். அது ஒரு உயிரைக் காப் பாத்திருக்குங்கிறதைவிட எனக்கு வேற என்ன வேணும்னு கேட்கறாங்க கேட்டி. தன் வாழ்க்கை முடியப் போகுதுன்னு நினைச்சிட்டி ருந்த லூசிக்கு இப்ப மறுபடியும் வாழ்க்கையைத் தொடர ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு.”

 மாவிஸ் பேட்டர்சன்
மாவிஸ் பேட்டர்சன்

“சந்தோஷமா இருக்கு. மாவிஸ் பேட்டர்சன் கிற பாட்டி, தன்னோட 85வது பிறந்தநாளை வித்தியாசமா கொண்டாடியிருக்காங்க. எப்படின்னு தெரியுமா?”

“கெஸ் பண்ண முடியல வினு.”

“ஸ்காட்லாந்து முழுக்க சைக்கிள்ல சுத்தி வரணும்னு முடிவு பண்ணியிருக்காங்க. இந்த வயசுல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல சைக்கிள்ல சுத்தி வந்துட்டாங்க. அதுக்கு ஒரு காரணத்தையும் சொல்லியிருக்காங்க. அவங் களோட மூணு குழந்தைங்க நாலு வருஷங்கள்ல அடுத்தடுத்து இறந்து போயிட்டாங்க. அவங்க நினைவுகளுக்காக இந்தப் பயணத்தை நடத்தி முடிச்சிருக்காங்க. ஏழு வருஷங்களா மாவிஸ் தனியாதான் இருக்காங்க. ஆறு வயசுலேருந்து சைக்கிள் ஓட்டிட்டு இருக்காங்களாம். சைக்கிள் ஓட்டுறதுனா ரொம்ப பிடிக்குமாம். அதனாலதான் இந்த வயசுலயும் ஓட்ட முடிஞ்சிருக்கு.”

“ஆமா, இந்தப் பெண்கள் ‘ஜஸ்ட் லைக் தட்’ எல்லாத்தையும் பண்ணிடறாங்க... சரி `ஃபீமேல் ஜெனிட்டல் மியூட்டிலேஷன்' (Female Genital Mutilation) பத்தி நிறைய பேசிருக்கோம் இல்லையா?”

“பெண்ணுறுப்பு சிதைப்புதானே? அது இப்போ குறைஞ்சிட்டு வருதுதானே விமல்?”

“அப்படித்தான் நினைக்கிறேன். இப்போ நிறைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுது. பல நாடுகள்ல குறைஞ்சிட்டுதான் வருது. ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் 15 முதல் 49 வயசுக்குள்ள இருக்கிற பெண்கள்ல 83 சதவிகிதம் பேர் பெண்ணுறுப்பு சிதைப்புக்கு உள்ளானவங்களாம். அதிர்ச்சியா இருக்கு. 8 வருஷத்துக்கு முன்னால பாத்திமாங் கிற தன்னோட 19 வயசு காதலி, பெண்ணுறுப்பு சிதைப்பால் இறந்துட்டதா சொல்றார் பத்திரி கையாளர் டைசன் காண்ட். அம்மா கிராமத் துக்கு வரச் சொன்னதா சொல்லிட்டுப் போன பாத்திமா, 36 மணி நேரத்துல இறந்துட்டாங்க. ஆனா, அது பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கா லதான் இறந்ததா அவங்க ஏத்துக்கல. போஸ்ட் மார்ட்டத்துக்கும் ஒத்துக்கல. இனி ஒரு பொண்ணுகூட இப்படி ஒரு சடங்கால உயிரிழக்கக் கூடாதுன்னு டைசன் இப்போ இதுக்கு எதிரா விழிப்புணர்வு ஏற்படுத்திட் டிருக்கார்.”

“டைசனோட முயற்சி வெற்றியடையணும். ஆப்பிரிக்காவுலதான் இந்தச் சடங்கு அதிகமா நடக்குது. இப்போ விழிப்புணர்வு கொஞ்சம் வந்ததால, பகிரங்கமா செய்யாம, தெரியாம செய்யறாங்க. இந்தச் சடங்குக்கு அப்புறம் யூரின்கூட இயல்பா வெளியேறாது. வாழ்நாள் கொடுமை” - வருத்தமாகச் சொன்னார் வித்யா.

“ம்... ஏதாச்சும் படம் பார்த்தீங்களா?”

“நான் ஜூப்ளிங்கிற வெப் சீரிஸ் பார்த்தேன். பீரியட் சீரிஸ். சுதந்திரம் கிடைச்ச 1947 கால கட்டத்துல கதை நடக்குது. அந்தக் காலத்துல இந்திய சினிமா உலகம் எப்படி இருந்துச்சுன்னு கண் முன்னால நிறுத்திருக்காங்க. விக்ரமாதித்ய மோத்வானி எழுதி, இயக்கியிருக்கார். பிரசன்ஜித் சாட்டர்ஜி, அபர்சக்தி குரானா, அதிதி ராவ், சிதாந்த் குப்தான்னு எல்லாருமே பிரமாதமா நடிச்சிருக்காங்க. அவசியம் பாருங்க, நல்ல அனுபவமா இருக்கும்.”

“எதுல வந்திருக்கு விமல்?”

“அமேஸான் பிரைம்ல இருக்கு. சரி, கிளம்புவோம்” என்று விமல் எழுந்தாள்.

மூவரும் ஆளுக்கு ஒரு வண்டியில் கிளம்பி னார்கள்.

அரட்டை அடிப்போம்...

எலிசபெத் காரெட் ஆண்டர்சன்
எலிசபெத் காரெட் ஆண்டர்சன்

வினு தரும் வித்தியாசமான தகவல்

சட்டத்தால் சாதித்த இங்கிலாந்தின் முதல் பெண் டாக்டர்!

லண்டனில் பிறந்தவர் எலிசபெத் காரெட் ஆண்டர்சன் (1836 - 1917). இங்கிலாந்தில் மருத்துவராக தகுதிபெற்ற முதல் பெண் இவரே. ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. தன் இளம்பருவத்திலேயே அவர் லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் மருத்துவ மனையில் செவிலியராகச் சேர்ந்தார். மருத்துவ விரிவுரைகளில் கலந்து கொண்டார். ஆண் மருத்துவ மாணவர்களை கவனித்தார். ஆனால், எந்தப் பல்கலைக்கழகமும் அவரை மருத்துவராகத் தேர்வுசெய்ய அனுமதிக்கவில்லை. ஒரு பெண் மருத்துவராவதைச் சட்டபூர்வமாக மறுக்க முடியாது என்பதைக் கண்டறிந்த பிறகே, அவர் 1865-ம் ஆண்டில் தகுதி பெற்றார்.

பின்னர் அவர் லண்டனில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயின்ட் மேரிஸ் மருத்துவ மனையைத் திறந்தார். பெண்களுக்கான லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் கல்லூரியை நிறுவினார். அதுமட்டுமல்ல... பெண்களின் வாக்களிக்கும் உரிமைக்காகவும் பிரசாரம் செய்தார்!