
சென்னையைச் சேர்ந்த வருண் விஜயபிரசாத், மூளைப் புற்றுநோய்ல மனை வியை இழந்துட்டார். அந்த இழப்புலேருந்து அவரால மீண்டு வரவே முடியல. அப்பதான் புற்றுநோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் வந்திருக்கு.
ஊஞ்சலில் உட்கார்ந்து ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தார் வித்யா. வினுவும் விமலும் வந்ததைக்கூட அவர் கவனிக்கவில்லை.
“என்ன வித்யாக்கா, யோசனை பலமா யிருக்கு” என்று வினு கேட்டதும் சட்டென்று இயல்புநிலைக்குத் திரும்பினார் வித்யா.
“தெலங்கானா டாக்டர் ஹர்ஷவர்தனை பத்திதான் யோசிச்சிட்டிருந்தேன். கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லேயே தனக்கு நுரையீரல் புற்றுநோய்னு தெரிய வந்திருக்கு. அவர் மனசு என்ன பாடுபட்டிருக்கும்? பிழைக்க முடி யாதுன்னு தெரிஞ்ச உடனே மனசைத் தேத்திக்கிட்டு, பெத்தவங்ககிட்ட விஷயத்தைச் சொல்லிருக்கார். தன் மனைவிகிட்ட விஷயத் தைச் சொன்னதோடு, விவாகரத்துக்கும் தயார் பண்ணிருக்கார். மனைவிக்குத் தேவை யான பொருளாதார வசதியையும் ஏற்பாடு செஞ்சுருக்கார். மறுபடியும் ஆஸ்திரேலியா வுக்குப் போய் வேலை செஞ்சுகிட்டே, இறந்த பிறகு தன் உடலைக் கொண்டுபோறதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சு முடிச்சிட்டார். அவர் சொன்னது மாதிரியே உடலும் இந்தியா வுக்கு வந்து, இறுதிக் காரியம் செஞ்சுருக்காங்க. இப்படியொருத்தருக்கு ஏன் இந்த நிலைன்னு நினைச்சிட்டிருந்தேன்” என்று சொல்லும் போதே வித்யாவின் கண்கள் கலங்கின.
“சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரக மாயிடும்’னு சொல்வாங்க. இவர் எவ்வளவு நேர்த்தியா எல்லாத்தையும் செஞ்சுட்டுப் போயிருக்கார். அற்புதமான மனிதர்” என்றாள் வினு.
“ஆமாம். சென்னையைச் சேர்ந்த வருண் விஜயபிரசாத், மூளைப் புற்றுநோய்ல மனை வியை இழந்துட்டார். அந்த இழப்புலேருந்து அவரால மீண்டு வரவே முடியல. அப்பதான் புற்றுநோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் வந்திருக்கு. புற்றுநோயால பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்ய பணம் இல்லாதவங்களையும், உதவ மனம் உள்ளவங்களையும் இணைக்குற பணியைச் செஞ்சுட்டு வர்றார். இந்தச் சேவை தன் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத் திருக்கிறதா சொல்றார்”- தகவல் சொன்னாள் விமல்.
‘`இன்னிக்கு ரெண்டு பேரும் என்னை இன்னும் சோகமாக்கிட்டீங்களே... இருங்க தர்பூசணி ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்று எழுந்த வித்யா, வெள்ளரித் துண்டுகளையும் ஜூஸ் கோப்பைகளையும் கொண்டு வந்து கொடுத்தார்.
அப்போது வீட்டு உதவியாளர் சீதா வந்தார். “என்ன, இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டே...” என்று கேட்டார் வித்யா,
“பக்கத்து வீட்டுக்காரங்க மூணு நாள் என்னை வீட்டுக்குள்ளவிட மாட்டாங்களே... அதான் உங்க வீட்டுக்கு வந்துட்டேன் அக்கா!” என்றார் சீதா.
“இன்னுமா இப்படியெல்லாம் பார்க்க றாங்க?” என்றாள் வினு.
“இதுக்கு மேலயும் சில கிராமங்கள் தமிழ் நாடு, ஆந்திரா எல்லைகள்ல இருக்கு. அங்கே பீரியட்ஸ் வந்த பெண்கள் பக்கத்துல இருக்கிற மலைக்குப் போயிடணும். கைக்குழந்தைங்க இருந்தா, அவங்களையும் அழைச்சிட்டுப் போயிடணும். அங்கேயே சமைச்சு, சாப்பிட்டு, திறந்தவெளில தூங்கணும். வெயிலோ மழையோ வீட்டுக்குள்ள விட மாட்டாங்க. இந்த விஷயம் ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே வெளிய தெரிஞ்சு, தொண்டு நிறுவனங்கள் எவ்வளவோ பேசிப் பார்த்திருக் காங்க. அந்த ஊர்கள்ல இருக்கிறவங்க மனசை மாத்த முடியல. அதனால ஊருக்குள்ளேயே கட்டடங்களைக் கட்டிக் கொடுத்து, அதுல யாவது பெண்கள் தங்கட்டும்னு சொல்லி யிருக்காங்க. அதுக்குப் பிறகுதான் பெண் களுக்கு ஓரளவு விடிவு காலம் வந்திருக்கு. இன்னும்கூட ஆந்திரால பல கிராமங்கள் பெண்களை ஒதுக்கிதான் வச்சிருக்கு” - விளக்கமாகச் சொன்னாள் விமல்.
“ஐயோ... என்னத்தைச் சொல்றது? இன்னும் இதெல்லாம் மாற எவ்வளவு காலம் ஆகுமோ?”
``பெண்கள் வீட்டைவிட்டு வெளியில வந்ததுல ஆரம்பிச்சி, விண்வெளிக்கும் போக ஆரம்பிச்சாச்சே! இனி, மாற்றங்கள் ரொம்ப வேகமாவே இருக்கும்னு நம்பிக்கையோட நடைபோடுவோம். சரி... ஹேப்பியா ஒரு நியூஸ் சொல்றேன்... சூரத்ல 15,000 பெண்கள் சேலை கட்டிக்கிட்டு, ஒரு பேரணி நடத்தி னாங்க. வெளிநாட்ல இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்கள்ல இருந்தும் பெண்கள் கலந்துகிட்டாங்க. ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு நடந்த பேரணி முடிவுல, பெண்கள் நடனமாடினாங்க. கலந்துகிட்ட அத்தனை பெண்களும் ரொம்ப சந்தோஷமா இருந் தாங்க!”
“எதுக்கு வினு இந்தச் சேலை பேரணி?”
“இதை பெண்களோட ஆரோக்கியம், உடற் பயிற்சி விழிப்புணர்வுக்கான பேரணியா மாநகராட்சி நடத்தியிருக்கு. எப்படியோ நல்ல விஷயத்துக்கு நடந்த பேரணினு சந்தோஷப் பட்டுக்குவோம் வித்யாக்கா.”
“ஸ்பெயினை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை பீட்ரிஸ் ஃப்ளாமினி. இவங்க ஒரு ஆராய்ச்சிக்காக யாரும் வசிக்காத, 70 மீட்டர் ஆழமுள்ள குகைக்குள்ள தனியா 500 நாள்கள் இருந்துட்டு, திரும்பி வந்திருக்காங்க தெரியுமா!”
“நாட்டுக்குள்ள இருக்கிறதைவிட குகைக் குள்ள தனியா இருக்கறது நிம்மதியா இருக்கும் விமல்.”
“ஃப்ளாமினி 2021 நவம்பர்ல குகைக்குள்ள இறங்கினாங்க. அது கோவிட் காலகட்டம். உணவு, தண்ணீரை மட்டும் குகைக்குள்ள அனுப்பியிருக்காங்க. கேமரா மூலம் ஒரு டீம் கண்காணிச்சிட்டு இருந்திருக்காங்க. 500 நாள்கள்ல 60 புத்தகங்களைப் படிச்சிருக் காங்க. 1000 லிட்டர் தண்ணீரைக் குடிச்சிருக் காங்க. யார்கிட்டயும் ஒரு வார்த்தைகூட பேசலை. தனக்குத்தானே பேசிக்கிட்டாங் களாம். அவங்க குகைக்குள்ளே போனபோது ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கல. வெளியில் வந்த ஃப்ளாமினி, ‘48 வயசுல குகைக்குள்ள போனேன். இப்போ 50 வயசுல திரும்பி வந்திருக்கேன். நான் இன்னும் 500 நாள்களுக்கு முன்னால இருந்த உலகத்துலதான் இருக்கேன். இன்றைய உலகத்தை இனிமேதான் தெரிஞ் சுக்கணும்னு சொல்லியிருக்காங்க.”

“எப்படியோ குகைக்குள்ள 500 நாள்கள் தனியா இருந்தவங்கங்கிற சாதனையைப் படைச்சிருக்காங்க ஃப்ளாமினி. அதுக்காக அவங்களை வாழ்த்திடு வோம்’’ என்ற வினு...
‘`அப்புறம் என்ன படம் பார்த்தீங்க?” என்றார்.
“மாஜா மா. இந்திப் படம். அமேசான் ப்ரைம்ல தமிழ்ல பார்த்தேன். மாதுரி தீக்ஷித் மூணு குழந்தைகளோட அம்மா. அமைதியான குடும்ப வாழ்க்கை. அவங்க டான்ஸர். வீட்டுலயும் வெளியிலயும் மரியாதையும் செல்வாக்கும் இருக்கு. மாதுரியின் மகள் தன்பால் ஈர்ப்பாளர்களைப் பத்தி ஆய்வு செய்யறாங்க. அவங்க உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கறாங்க. அது விவாதமா மாறும்போது, ‘தன்பால் ஈர்ப்பாளரா இருந்தாதான் வலி தெரியும்’னு சொல்றாங்க மகள். உடனே தன்னையறியாம, ‘எனக்கும் ஆணைவிடப் பெண்ணைத்தான் ரொம்பப் பிடிக்கும்’னு சொல்லிடறாங்க மாதுரி.
அமெரிக்காவுல வேலை செய்யும் மகன், அங்கேயே ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெண்ணோட வீட்டுல, பையன் குடும்பம் ரொம்ப டிரெடிஷனலா இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. மாதுரி லெஸ்பியனா இருப்பாங்களோனு அவங் களுக்குத் தோணுது. மாதுரி இல்லைன்னு சொல் றாங்க. அதுக்காக உண்மை கண்டறியும் பரி சோதனை வைக்கிறார் பெண்ணோட அப்பா. மாதுரி டெஸ்ட் டுக்குப் போறாங்க. ‘லெஸ்பியனா’ங்கிற கேள்விக்கு இல்லைன்னு சொல்றாங்க. இன்னொரு பெண்ணோட உடல்ரீதியான உறவு உண்டாங்கிற கேள்விக்கும் இல்லைன்னு சொல்றாங்க. டெஸ்ட்டுல பாஸ் ஆயிடறாங்க. மகன் இது எப்படின்னு அம்மா கிட்ட கேட்கறார். ‘அவங்க ஒரு பெண்ணைக் காதலிச்சிருக்கியான்னு கேட்டிருந்தா ஆமான்னு சொல்லியிருப்பேன்’ னு சொல்றாங்க மாதுரி. கல்யாணம் உறுதியாகுது. மாதுரியின் மனம் கவர்ந்த தோழி வர்றாங்க. `அடுத்த ஜென்மத்துல பையனா பிறந்தா என்னோட வந்திரு வியா'ன்னு கேட்கறாங்க. அதுக்கு மாதுரி, `இதே பெண்ணா கூப்பிட்டாகூட வருவேன்'னு சொல்றாங்க. படம் முடியுது. ரொம்ப அழ கான ஃபீல் குட் மூவி!”
“ஓ... பார்த்துடறோம்” என்று வித்யாவும் விமலும் சொல்ல, அரட்டை முடிவுக்கு வந்தது.
- அரட்டை அடிப்போம்...
***

மாதவிடாய் விடுமுறை... விகடனின் முன்னெடுப்பு!
மாதவிடாய் நாள்களில் பெரும்பாலான பெண்கள்படும் அவஸ்தை சொல்லி மாளாது. அதிலும் கல்லூரி/பணி என்று வெளியில் செல்லும் பெண்களின் நிலை பரிதாபமே. இதை உணர்ந்துதான் உலக அளவில் பல்வேறு களங்களிலும் மாதவிடாய் விடுப்பு என்கிற ஒன்று உருவாக்கப்பட்டு, சமீப காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலான நிறுவனங்கள் இந்த விடுப்பை அமல்படுத்தியுள்ளன. அவற்றில் ஒன்றாக, தற்போது தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது விகடன் குழுமம். மொத்தப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாகப் பெண்கள் பணியாற்றும் விகடன் குழுமம், மாதவிடாய் விடுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்...
`பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்குப் பன்னிரண்டு நாள்கள் மாதவிலக்கு விடுப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது விகடன் குழுமம். இந்த விடுப்பின் மூலம் கிடைக்கும் ஓய்வு, அவர்களை மேலும் வலிமை உள்ளவர் களாக மாற்றும் என்பது உறுதி.
ஆண்-பெண் இரு பாலருக்குமான பணிச் சூழலை ஏற்படுத்துவதில் எப்போதும் அக்கறை காட்டும் விகடனின் முன்னெடுப்புகளில், இது முக்கியமானதொரு அறிவிப்பு' என்று கூறப் பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்புக்குப் பெண்களின் சார்பில் நன்றி நவில்வோம்!