
தான் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள `விடுதலை' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சொந்த மண்ணில் பிடித்தமான தியேட்டரில் மக்களோடு மக்களாகப் பார்த்து மகிழ்ந்துள்ளார் சூரி

சமந்தாவும் வதந்திகளும் என்று ஒரு புத்தகமே போடலாம் போல! `புஷ்பா' முதல் பாகத்தில் `ஊ சொல்றியா'வுக்கு ஆடியதைப் போல இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடலுக்கு ஆடக் கேட்டபோது சமந்தா மறுத்துவிட்டார் என்று ஒரு தகவல் வெளியானது. புஷ்பா டீமிலிருந்து சமந்தாவிடம் அப்படிக் கேட்கவே இல்லையாம்! ரசிகர்கள் ஹேப்பி!
பாப்புலர் இந்திய செலிபிரிட்டிகளுக்கான IMDb பட்டியலில் ஷாருக் கானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடம் பிடித்தார் ராஷி கன்னா. `ஃபார்ஸி' வெப்சீரிஸ் பெற்ற வரவேற்பே இதற்குக் காரணம். ``முதலில் இந்தத் தகவலை என்னிடம் சொன்னபோது, யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். உண்மை என்று தெரிந்தபோது ஒருவித குழந்தைத்தனத்துடன் பரவசமானேன். கிங் கானை யாருமே தோற்கடிக்க முடியாது. அந்த வெப்சீரிஸில் என் கேரக்டர் ரசிகர்களுக்குப் பிடித்ததால் இப்படி முதலிடம் கிடைத்திருக்கிறது'' என்று பரவசத்துடன் சொல்கிறார் ராஷி கன்னா. இந்தத் தன்னடக்கம்தான்...

சல்மான் அடுத்து பஜ்ரங்கி பாய்ஜான் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதற்கு `பவன் புத்ர பாய்ஜான்' என்று பெயர் வைத்துள்ளனர். முதல் பாகத்தில் சல்மானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்தார். இரண்டாம் பாகத்தில் பூஜா ஹெக்டே நடிக்கலாம் என்கிறார்கள். தற்போது சல்மானுடன் `கிசி கா பாய் கிசி கா ஜான்' படத்தில் பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். அவருடன் மேலும் ஒரு படத்தில் நடிக்க சல்மான் முடிவு செய்துள்ளார். உங்க ராசி என்ன பூஜா?


பச்சைப் பசேல் மலைத்தொடர்கள், மேகங்கள் தவழும் பள்ளத்தாக்குகள், சில்லென்ற வெள்ளி நீரோடைகள் என மனம் மயக்கும் மலைகளின் அரசியான ஊட்டி சினிமா ஷூட்டிங் ஹாட் ஸ்பாட்டாக ஈர்த்துவருகிறது. சூழலியல் பாதுகாப்புகளுக்காக அவலாஞ்சி போன்ற அடர்வனப் பகுதிகளில் தற்போது ஷூட்டிங் தடை இருப்பதால், அரசுப் பூங்காக்களே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறியுள்ளன. ஷூட்டிங் நடைபெறும் நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதிப்பதால் அசௌகரியமாக உணர்கிறார்கள். எனவே, சுற்றுலா சீசன் உச்சத்தில் இருக்கும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஷூட்டிங்கிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங்களும் என்ஜாய் பண்ணிக்கிறோமே...

தான் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள `விடுதலை' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சொந்த மண்ணில் பிடித்தமான தியேட்டரில் மக்களோடு மக்களாகப் பார்த்து மகிழ்ந்துள்ளார் சூரி. சிறு வயதில் மதுரைக்கு அருகிலுள்ள ராஜாக்கூர் கிராமத்திலிருந்து பிடித்த நடிகர்களின் படங்களைப் பார்க்க நண்பர்களுடன் சினிப்ரியா காம்ப்ளக்ஸுக்குத்தான் வருவாராம் சூரி. தற்போது பல படங்களில் நடித்துவிட்டாலும், தான் ஹீரோவாக நடித்த முதல் படத்தை அங்கு வந்து ஊர் மக்களின் ஆரவாரத்தோடு பார்த்து நெகிழ்ந்துள்ளார். மறக்குமா நெஞ்சம்?!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மாசி மாதத்தில் ஒரு நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்துவருகிறது. இவ்விழாவில் நேர்த்திக் கடனாகச் செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு, 150 மூட்டை அரிசியில் அசைவ சாப்பாடு தயாரானது. இதில் நத்தம் அருகே புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்துகொண்டனர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுக்கறிக் குழம்பும் பிரசாதமாகப் பரிமாறப்பட்டது. விடிய விடிய கிடாக்கறி சாப்பிடுறவன்தான்டா இளந்தாரிப் பய!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆண், பெண் ஆசிரியர்கள் 54 பேர் சேர்ந்து தங்கள் சொந்த செலவில் ஒரே பேருந்தில் கீழடி அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். இதையறிந்த முதன்மைக் கல்வி அலுவலரான சிவக்குமார், ஆசிரியர்கள் தஞ்சாவூர் வந்தபோது நகர எல்லையில் காத்திருந்து வரவேற்பு கொடுத்து உற்சாகப்படுத்தினார். ‘பண்பாடு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுச் செலவில் பள்ளி மூலமாகவே கீழடிக்கு அழைத்துச் சென்று பார்வையிட வைக்க வேண்டும்’ என தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலரும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். பண்பாட்டுப் பயணம்!

உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு வீதியில் விடப்படுகிறார்கள் ஆதரவற்றோர் பலர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து சுற்றித் திரிவதோடு, இறுதியில் தெருவோரங்களிலும், பொது இடங்களிலும் இறந்துபோகின்றனர். புதுக்கோட்டையில் இவ்வாறு இறப்பவர்களின் உடலை மீட்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ராமதாஸ். அவர்களது உறவினர்களின் இடத்திலிருந்து, அனைத்துச் செலவுகளையும் ஏற்று இறுதிச் சடங்குகளைச் செய்து நெகிழ வைக்கிறார். மருத்துவரோடு சில தன்னார்வலர்களும் இணைந்துகொண்டு இதனை ஒரு சேவையாகச் செய்துவருகின்றனர். கடந்த 2008-ல் ஆரம்பித்து இதுவரை 530-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்துள்ளனர். ஆதரவு தொடரட்டும்!


பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புக்களத்துக்கு அழைத்துச் சென்று கதைகளைப் படிக்கச் சொல்லி விளக்கினார்கள். இந்தப் புதிய முயற்சியின்படி புதுமைப்பித்தனின் `புதிய கூண்டு’ என்ற கதையில் சொல்லப்பட்ட நாரணம்மாள்புரம் கிராமத்துக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கதையில் குறிப்பிடப்பட்ட இடங்கள் தற்போது எவ்வாறு மாறியிருக்கின்றன என்பதை மாணவர்கள் நேரில் பார்வையிட்டதுடன், கதை நடந்த காலத்தின் நினைவுகளுக்குள்ளும் சென்றனர். படைப்பாளிகளான வண்ணதாசன், சு.வேணுகோபால், மகாதேவன் ஆகியோர் பல்வேறு சிறுகதைகளில் குறிப்பிடப்படும் இடங்களை நேரில் காண்பித்து விளக்கிச் சொன்னார்கள். பின்னர், ரா.பி.சேதுப்பிள்ளை, வல்லிக்கண்ணன் என இரு சாகித்ய அகாடமி விருதாளர்களைக் கொடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்துக்குச் சென்று, இருவரும் வாழ்ந்த வீடுகளைப் பார்த்தனர். வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெருவைப் பார்வையிட்ட மாணவர்கள், தாமிரபரணி நதிக்கரை உள்ளிட்ட பல்வேறு கதைக் களங்களுக்குச் சென்று சிறுகதைகளோடு அந்த இடங்களையும் நினைவில் கொண்டுவந்தனர். கல்லூரி முதல்வர் சே.மு.அப்துல்காதர், ``மாணவர்களின் இந்த அனுபவ அறிவு, அவர்களிடம் படைப்பிலக்கிய ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். எழுத்தறிவித்த இறைவனைத் தேடி!


விழுப்புரம் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா 100 புத்தக அரங்குகளுடன், அரசுத்துறைக் கண்காட்சிகள், மாணவர்களுக்கான விளையாட்டு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் எனச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் விழுப்புரம் பகுதியின் தொன்மையான வரலாற்றை எடுத்துரைக்கும் வகையிலான கண்காட்சி அரங்கு ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றோரம் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய்கள், வட்டச் சில்லுகள், குறியீடு கொண்ட ஓடுகள், சுடுமண் காதணி மற்றும் பொம்மைகள், பழங்கால நாணயங்கள், ஆயுதங்கள், கெண்டிமூக்கு பானை, செப்பேடுகள், சங்ககால செங்கல் உள்ளிட்ட பல பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரங்கைப் பார்வையிடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், “நம்ம ஊரு மரபு இவ்வளவு பழைமையானதா'' என்று ஆச்சரியத்துடன் ரசிக்கின்றனர். பெருமை பேசும் கண்காட்சி!
ஷாருக் கான் கார்கள்மீது அதீத காதல் கொண்டவர். அவரிடம் ஏற்கெனவே ஆடி, பி.எம்.டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் இருக்கின்றன. புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் புதிய மாடல் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதன் மதிப்பு பத்துக் கோடி ரூபாய். புதிய கார் வாங்கிய கையோடு அதை மும்பை சாலைகளில் ஓட்டிப் பார்த்தார். `பதான்' பட வெற்றியில் கிடைத்த பணத்தில் இதை வாங்கியிருக்கிறார். பதான் பாய்ச்சல்!

திருச்செந்தூர் நகராட்சி இரண்டாவது வார்டான அன்பு நகர் பகுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்துவருகிறார்கள். காலையில் பணிக்குச் செல்லும் இவர்கள், மாலை அல்லது இரவில்தான் வீடு திரும்புகிறார்கள். இவர்களில் பலரின் குழந்தைகளை வீட்டில் இருக்கும் பெரியவர்களே கவனித்துக்கொள்கிறார்கள். பகல் நேரங்களில் பெரியவர்களே வீடுகளில் இருக்கிறார்கள். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக இங்கு திருட்டுச் சம்பவங்கள் நடந்தேறின. குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அன்பு நகர் பகுதியின் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் இப்பகுதியில் 22 இடங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்திட முடிவு செய்தனர். வீடுகளில் வசூல் செய்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். திருச்செந்தூர் நகராட்சித் தலைவர் சிவ ஆனந்தி, இவற்றைத் தொடங்கிவைத்தார். இந்தப் பகுதி மக்களின் முயற்சியை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆகியோர் பாராட்டியுள்ளனர். இதைப் பார்த்து மேலும் நான்கு வார்டுகளில் இதேபோன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். சிசிடிவி... ஜாக்கிரதை!