Published:Updated:

இன்பாக்ஸ்

அம்பேத்கர் சிலை
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பேத்கர் சிலை

‘சிபாரிசு இல்லாமல் வரும் புகார் மனுக்களுக்கு விசாரணையில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தக் காவல் நிலையத்தில் யாரும் லஞ்சம் வாங்குவது இல்லை. எனவே, பொதுமக்கள் இடைத்தரகர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.

ஹைதராபாத் நகரின் என்.டி.ஆர் மார்க் பகுதியில் தெலங்கானா அரசு உருவாக்கியிருக்கும் அம்பேத்கர் சிலை, இனி இந்தியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும். இந்த 125 அடி உயர சிலை, ஏப்ரல் 14-ம் தேதி திறப்பு விழா காணவிருக்கிறது. நாடாளுமன்றக் கட்டடத்தின் மேலே, கையில் அரசியல் சட்ட நூலை ஏந்தியபடி அம்பேத்கர் நிற்பது போன்ற தோற்றத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் மேற்புறம் 111 டன் வெண்கலத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இதை உருவாக்கியவர், 98 வயது சிற்பி ராம் வாஞ்சி சுதர். குஜராத்தில் படேல் சிலையை அமைத்தவர் இவர். “பிரமாண்ட சிலை என்பதால் அம்பேத்கரின் ஷூ லேஸ், உடைச் சுருக்கங்கள், முக பாவங்கள் என்று எல்லாவற்றிலும் துல்லியம் காட்டியுள்ளோம்'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ராம் வாஞ்சி சுதர். இதேபோன்ற இன்னொரு சிலை ஆந்திராவின் விஜயவாடாவிலும் நிறுவப்படவுள்ளது. பெருமைமிகு அடையாளம்!

அம்பேத்கர் சிலை
அம்பேத்கர் சிலை

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, தனியார் பள்ளிகளைவிட மேலான வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கும் விதமாக, `ஸ்டார் கார்டு' எனும் திட்டம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களிடம் கண்டறியும் நல்ல பண்புகளுக்கு உடனுக்குடன் ஒரு கார்டு வழங்குவார்கள். உதாரணமாக, வாரம் முழுவதும் விடுமுறை எடுக்காமல் வருவது, தன் சுத்தம் பேணுவது, சக மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது போன்றவை. தலைமையாசிரியரும் தன் பங்குக்கு கார்டுகளை வழங்குவார். பத்து கார்டுகள், 20 கார்டுகள் எனப் பெறுபவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளாக ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கூல் பேக் போன்ற பரிசுகளும், ஆண்டு இறுதியில் அதிக கார்டு பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசை அவர்களின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யவும் அறிவிப்பு செய்திருக்கிறார்கள். அசத்தல் ஆசிரியர்கள்!

ஸ்டார் கார்டு
ஸ்டார் கார்டு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சோமசுந்தரம். இவர் காவல் நிலைய முகப்பு சுவற்றில் பெரிய ப்ளக்ஸ் போர்டு ஒன்றை வைத்துள்ளார். அதில், ‘சிபாரிசு இல்லாமல் வரும் புகார் மனுக்களுக்கு விசாரணையில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தக் காவல் நிலையத்தில் யாரும் லஞ்சம் வாங்குவது இல்லை. எனவே, பொதுமக்கள் இடைத்தரகர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். புகார் அளிப்பவர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் அதனை இன்ஸ்பெக்டரிடம் நேரடியாகவோ அல்லது போன் மூலமாகவோ தெரிவிக்கலாம்’ என தன் செல்போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் காலதாமதமின்றி விரைவாக விசாரணை நடைபெறுகிறது. இதையறிந்த பலரும் சோமசுந்தரத்தைப் பாராட்டி வருகின்றனர். நேர்மைன்னா இப்படி இருக்கணும்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் சல்மான் கானும், ஷாருக் கானும் இணைந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு `கரன் அர்ஜுன்' படத்தில் நடித்தனர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடித்திருந்தாலும் இருவருக்கும் சம வாய்ப்பு இருக்கும் படங்களில் நடித்தது கிடையாது. ஒருவர் படத்தில் மற்றொருவர் கௌரவ வேடத்தில் மட்டுமே நடித்திருக்கின்றனர். ஷாருக்கும் சல்மானும் வரும் 2025-ம் ஆண்டு 60 வயதில் அடியெடுத்து வைக்கின்றனர். 60 வயது அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதற்காக, இருவரும் இணைந்து நடிக்கும் படத்தைத் தயாரிக்க யஷ்ராஜ் ஸ்டூடியோ முடிவு செய்துள்ளது. கான்களின் ராஜ்ஜியம்!

ஆமிர் கான்
ஆமிர் கான்

ஆமிர் கான் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு, குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட்டுவருகிறார். அதோடு தான் தயாரிக்கும் படத்தின் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். ஷாருக் கானின் `பதான்' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆக்‌ஷன் படம் ஒன்றில் நடிப்பது குறித்து ஆமிர் பரிசீலித்துவருகிறார். இதுபற்றி யஷ்ராஜ் ஸ்டூடியோவின் ஆதித்ய சோப்ராவிடம் பேசியிருக்கிறார். 2013-ம் ஆண்டு ஆமிர் நடிப்பில் வெளிவந்த `தூம் 3' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்தை எடுக்கலாம் என்று ஆமிர் சொல்லியிருக்கிறார். பாக்ஸ் ஆபீஸ் வெயிட்டிங்!

வாழ்வியல் தடயங்கள்
வாழ்வியல் தடயங்கள்
வாழ்வியல் தடயங்கள்
வாழ்வியல் தடயங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்நமண்டி கிராமத்தில், பெருங்கற்கால மக்களின் வாழ்வியல் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஏப்ரல் 6-ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இங்கு ரூ.30 லட்சத்தில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை, 300-க்கும் அதிகமான கல்வட்டங்கள், கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், இரும்பினால் ஆன ஆயுதங்கள், வானிலை நிலவரத்தைக் கணிக்கும் குறிக்கல் போன்றவை கிடைத்திருக்கின்றன. இங்கு அகழாய்வு மேற்கொள்வதால், தமிழகத்தின் தொன்மையை விளக்கும் சான்றுகள் அதிகம் கிடைக்கும் என நம்புகிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். தமிழர்களின் மற்றுமொரு தாய்மடி!

டிரவுட் மீன் பண்ணை
டிரவுட் மீன் பண்ணை

மீன்கள் குறித்த ஆய்வாளரான பிரான்சிஸ் என்பவரின் முன்னெடுப்பில், 1863-ல் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் டிரவுட் மீன் பண்ணை உருவாக்கப்பட்டது. குளிர் நிறைந்த தூய நீரோடைகளில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட குறிப்பிட்ட டிரவுட் மீன் இனத்தை, காஷ்மீரிலிருந்து கொண்டுவந்து கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 அடி உயரத்தில் அமைந்துள்ள அவலாஞ்சியில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். தென்னிந்தியாவின் ஒரே டிரவுட் மீன் பண்ணை என்ற அடையாளத்துடன் நூற்றண்டைக் கடந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது இந்தப் பண்ணை. 2019-ம் ஆண்டு கொட்டித் தீர்த்த பெருமழை டிரவுட் மீன்களையும் சேர்த்து வாஷ் அவுட் செய்திருக்கிறது. அவலாஞ்சியின் குளிர் நீரோடைகளில் மீண்டும் டிரவுட்களை நீந்தச் செய்ய விரும்பிய மீன்வளத்துறை, காஷ்மீரிலிருந்து 20,000 டிரவுட் மீன் குஞ்சுகளைத் தருவித்து நீரோடைகளில் விட்டிருக்கிறது. ஒரு நூற்றாண்டில் அவலாஞ்சியின் அடையாளமாகவே மாறிவிட்ட இந்த டிரவுட் மீன்கள் மீண்டும் நீர்திசைக்கு எதிர் திசையில் துடுப்பசைத்துத் துள்ளல் போடுகின்றன. அங்க வந்து உங்கள மீட் பண்ணுறோம்!

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில்

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் ஏப்ரல் 5-ம் தேதி பங்குனித் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, பல்வேறு அமைப்பினர் ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து நீர் மோர், பானகம், குளிர்பானம், பழங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் ஏற்பாடு செய்திருந்தனர். இம்முறை இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து ஒரேநேரத்தில் 500 பேர் அமரும் வகையில் பந்தல் அமைத்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தலைவாழை இலை போட்டு அன்னதானம் வழங்கியது அனைவரையும் நெகிழ வைத்தது. ஒண்ணுக்குள்ள ஒண்ணாக...