சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

ரோஷிணி பிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரோஷிணி பிரகாஷ்

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் கிராமத்தில் உள்ளது பெருங்காரையடி மீண்ட ஐயனார் கோயில். இங்குள்ள 35 அடி குதிரைச் சிலைக்கு ஆசியாவின் மிகப்பெரிய குதிரைச் சிலை என்ற பெருமையுண்டு

பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள இயக்குநரும், சல்மான் கானின் நண்பருமான சாஜித் நாடியத்வாலா ஒவ்வொரு ஆண்டும் தன் பேத்தி சார்பாக சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக 100 பெண் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமும் செய்துகொண்டுள்ளார். இன்னொரு பக்கம் சல்மான் கான், குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துவருகிறார். தங்கமனசுக்காரர்கள்!

ரோஷிணி பிரகாஷ்
ரோஷிணி பிரகாஷ்

மீண்டும் உற்சாகமாகிவிட்டார் பாலா. ‘வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகியதும், அருண்விஜய் ஒப்பந்தமானார். அதன்பிறகு கதாநாயகி கீர்த்தி ஷெட்டியும் விலகிக்கொள்ள, இப்போது ரோஷிணி பிரகாஷ் நடிக்கிறார். தமிழில் இவர் இதற்குமுன் ‘ஏமாளி', ‘ஜடா' எனச் சில படங்களில் நடித்திருக்கிறார். முன்புபோல, கன்னியாகுமரியிலேயே பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பையும் நடத்திவரும் பாலா, படத்தைத் தன் சொந்த பேனரிலேயே தயாரிக்கிறார். வளரட்டும் வணங்கான்!

த்ரிஷா
த்ரிஷா

‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீஸ் தேதி நெருங்குவதால், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் இரவும் பகலுமாக உழைத்துக்கொண்டிருக்கிறார் மணிரத்னம். கிராபிக்ஸ் மற்றும் இதர விஷயங்கள் அத்தனையும் முதல் பாகத்தைவிடச் சிறப்பாக வர வேண்டும் என்பதால், டப்பிங் பேசி முடித்த பெரிய நட்சத்திரங்களையும் மீண்டும் வரவழைத்து டப்பிங் பணிகளைச் செதுக்கிவருகிறார் மணி. பந்தயம் அடிக்கணும்!

ரஜினி
ரஜினி

`காந்தாரா' படம் ரஜினியையும் கவர்ந்து இழுத்துவிட, அப்படத்தின் இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டியைத் தன் வீட்டிற்கே அழைத்துப் பாராட்டினார். முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இப்போது ‘காந்தாரா 2' உருவாகிவருகிறது. அதில் கௌரவத் தோற்றத்தில் நடிக்க ரஜினியிடம் கேட்டிருக்கிறார்கள். ரஜினி பாசிட்டிவ் பதில் சொல்வார் என்ற நம்பிக்கையுடன் போயிருக்கிறது ‘காந்தாரா’ டீம். என்ன வேஷமா இருக்கும்?

திருச்சி சர்வதேச விமான நிலையம்
திருச்சி சர்வதேச விமான நிலையம்

20 லட்சம் பயணிகளைக் கையாளக்கூடிய சிறிய விமான நிலையங்களில், ஆசிய பசிபிக் நாடுகளிலேயே சிறந்ததாக திருச்சி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பயணிகள் சேவை, பாதுகாப்பு வசதிகள், பயணிகளைக் கையாளும் தன்மை, விமான நிலையச் சூழல், பார்க்கிங், உணவு உள்ளிட்ட 32 பிரிவுகளை ஆய்வு செய்து இந்தத் தகுதியை ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் அமைப்பு வழங்கியிருக்கிறது. இந்தியாவின் பெருமை!

நெல்லை புத்தகத் திருவிழா
நெல்லை புத்தகத் திருவிழா

நெல்லை புத்தகத் திருவிழாவில் சிறைச்சாலை நூலகத்துக்குப் புத்தகங்கள் பரிசளிக்கும்வகையில் ‘புத்தகப் பாலம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. சிறைச்சாலைக்கான அரங்கத்தில் ஒரு பெட்டி வைத்து புத்தகங்களைப் பரிசளிக்க விரும்புபவர்கள் அந்தப் பெட்டியில் போடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஏராளமானோர் புத்தகங்களைப் போட்டார்கள். பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வழங்கப்பட்டன. நெல்லை பிரமிள் நூலகம், அன்னை தெரசா அமைப்பு சார்பாக ஆயிரம் புத்தகங்கள் தந்தார்கள். மொத்தம் ஒரு லட்சம் புத்தகங்கள் கிடைத்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். சிறகு முளைக்கும் சிறைச்சாலை!

சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான தேசிய அறிவியல் கண்காட்சிக்கு கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் வேல்முருகன், யுவராஜா ஆகியோர் தேர்வாகி சாதித்திருக்கிறார்கள். தேசிய அளவில் சமர்ப்பிக்கப்பட்ட 1,600 புராஜெக்ட்களில் ரோபோட்டிக் துறையில் தமிழகத்திலிருந்து தேர்வான இரண்டே இரண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர். நம்ம ஊரு சயின்டிஸ்ட்ஸ்!

பெருங்காரையடி மீண்ட ஐயனார்
பெருங்காரையடி மீண்ட ஐயனார்

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் கிராமத்தில் உள்ளது பெருங்காரையடி மீண்ட ஐயனார் கோயில். இங்குள்ள 35 அடி குதிரைச் சிலைக்கு ஆசியாவின் மிகப்பெரிய குதிரைச் சிலை என்ற பெருமையுண்டு. இவ்வாண்டு நடைபெற்ற மாசிமகத் திருவிழாவில் எப்போதும் இல்லாத வகையில் குதிரைச் சிலையின் உயரத்துக்கேற்ப 3,000 பிரமாண்ட மாலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தினர். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், குதிரைச் சிலைக்கு பிளாஸ்டிக் மாலைகளைத் தவிர்த்து, பூ மற்றும் காகித மாலைகள் மட்டுமே அணிவிக்கப்படுவது கூடுதல் சிறப்பு. பசுமை காத்த ஐயனார்!

தேனி புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து
தேனி புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து

தேனியில் முதல் புத்தகத் திருவிழா மார்ச் 3-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு தன் பால்ய கால வாழ்க்கையை நினைவுகூர்ந்தார். வடுகபட்டியிலிருந்து தேனிக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஏற்றிவரும் மாட்டுவண்டியில் வந்து அல்வா சாப்பிட்டுச் சென்றது, 6-ம் வகுப்பு படித்தபோது தன் தாயார் பிறந்த ஊரான கரட்டுப்பட்டியில் முதல்முதலாகப் புத்தகம் வாசித்தது; சாகித்ய அகாடமி விருதுடன் கிடைத்த தொகையோடு கூடுதலாகச் சேர்த்து அதே ஊரில் மருத்துவமனை கட்டிக்கொடுத்தது என வைரமுத்து பகிர்ந்த செய்திகள் தேனி மக்களை நெகிழவைத்தது. கள்ளிக்காட்டு நினைவலைகள்!

நாணயங்கள்
நாணயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிக்காரரான கதிரேசன் ஆட்டோ டிரைவர். ஆனால் ‘காசு' கதிரேசன் என்றால்தான் பலருக்கு அவரைத் தெரியும். சோழர் கால நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், ஓட்டைக் காலணா, அரை அணா உட்பட ஆயிரக்கணக்கான நாணயங்களைச் சேகரித்து வைத்துள்ளார். காலாவதியாகிப்போன 25 பைசா நாணயங்கள் மட்டும் 60,000 ரூபாய்க்கு வைத்திருக்கிறார். 11,000 மதிப்பில் 20 பைசா, 5,000 மதிப்பில் 10 பைசா நாணயங்களும் இருக்கின்றன. இந்த நாணயங்களை வைத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் கண்காட்சி நடத்துவதோடு வரலாற்றையும் மாணவர்களுக்குப் போதிக்கிறார். இதுவரை 100 கண்காட்சிகளும் நடத்தியிருக்கிறார். நாணய மாணவர்!