
‘எனக்குப் பொதுத் தேர்வு ஆரம்பிச்சிடுச்சு. என்னால படிக்க முடியல. தயவுசெஞ்சு கரண்ட் கனெக்ஷன் கொடுங்க சார்’ என மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜுக்கு வாட்ஸப் மூலம் வேண்டுகோள் அனுப்பியுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பிரம்மபுரம் குப்பைக்கிடங்கில் 13 நாள்களுக்கும் மேலாகத் தீ எரிந்தது. தீ அணைக்கப்பட்டாலும், அதுகுறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையே மோகன்லால் ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதம் ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கிவிட்டனர். அந்தக் கடிதத்தில், கேரளக் குடிமகன் என்ற வகையில் குப்பையால் ஏற்படும் எதிர்காலப் பிரச்னைகள் குறித்துக் குறிப்பிட்டிருந்தார். ‘மோகன்லால் எதிர்காலத்தை சரியாகக் கணிக்கக்கூடியவர், அவரது ஆலோசனையைக் கேரள அரசு கேட்டு நடக்க வேண்டும்' என்ற ரீதியில் ரசிகர்கள் பின்னூட்டமும் இட்டு, ஆளும் இடதுசாரிகளுக்குக் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். லால் சம்பவம்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன், மல்யுத்தப் போட்டியில் சத்தமில்லாமல் சாதித்துவருகிறார். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சாதித்துள்ள இவர், தற்போது உஸ்பெகிஸ்தான் நாட்டில் மே மாதம் நடைபெறும் சர்வதேச மல்யுத்தப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார். இதன்மூலம், இரண்டாவது முறையாக இளங்கோவன் சர்வதேச அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கிறார். தங்கம் வெல்லட்டும்!

தமிழக அரசு கடந்த 2021-ல் தஞ்சாவூர் மாநகராட்சியைத் தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக அறிவித்து, முதலமைச்சர் விருதுடன் சேர்த்து ரூ.25 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கியது. இந்தப் பரிசுப் பணத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியிருப்பதாக ஆணையர் சரவணக்குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர். மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தின் முகப்புத் தோற்றத்தை சோழர்கள் காலக் கோட்டையை நினைவூட்டும் வகையில் கலைநயத்துடன் மாற்றி அமைத்திருப்பதே பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. சோழ நினைவுகள்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் லெட்சுமி. இவரின் கணவர் ஆறுமுகம் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு 12-ம் வகுப்பு பயிலும் பேச்சித்தாய் என்ற மகளும், 5-ம் வகுப்பு பயிலும் ஐயப்பன் என்ற மகனும் உள்ளனர். லெட்சுமி முறுக்கு சுட்டு தெருத்தெருவாக விற்பனை செய்துவருகிறார். இந்த வருவாயில் குடும்பம் நடத்தி, இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்துவருகிறார். சொத்துப் பிரச்னை மற்றும் வறுமை காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அவர் வீட்டுக்கு மின் இணைப்பு இல்லை. இந்நிலையில் மாணவி பேச்சித்தாய், ‘எனக்குப் பொதுத் தேர்வு ஆரம்பிச்சிடுச்சு. என்னால படிக்க முடியல. தயவுசெஞ்சு கரண்ட் கனெக்ஷன் கொடுங்க சார்’ என மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜுக்கு வாட்ஸப் மூலம் வேண்டுகோள் அனுப்பியுள்ளார். கலெக்டர் உத்தரவுப்படி உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் வந்து, மூன்று மணி நேரத்திற்குள்ளாக மின்சார இணைப்பு வழங்கினர். மொத்தச் செலவையும் கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து கொடுத்திருக்கிறார் செந்தில்ராஜ். கல்வி ஒளி பரவட்டும்...

மதுரை மாவட்டம் சித்திரைத் திருவிழாவுக்கு முன் மற்றொரு கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறது. அரசு ஆதரவில் ‘வைகை இலக்கியத் திருவிழா’ மார்ச் 26, 27 தேதிகளில் மதுரை உலகத்தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற உள்ளது. விழாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி-யைத் தலைவராக நியமித்துள்ளார்கள். வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் மதுரை இலக்கியவாதிகளை அழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திருவிழாவுக்கான லோகோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், மதுரை முதல் ஊமச்சிகுளம் வரை கட்டப்பட்டு வரும் 7.5 கிலோ மீட்டர் தூரமுள்ள பறக்கும் பாலத்தின் தூண்களில் மதுரை வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரையவும் திட்டமிட்டுள்ளனர். மதுரை குலுங்கட்டும்!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சியை வைத்து, வயதையும் காலத்தையும் கணக்கிடும் நீலகிரி மலைவாழ் பழங்குடிகளைப் போலவே, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மூங்கிலைக் கொண்டே வாழ்நாளையும் காலத்தையும் கணக்கிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர், முதுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பழங்குடிகள். ஒருவரது வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே மூங்கில் பூப்பதைக் காண முடியும் என்பதால், குறிஞ்சியைவிட மூங்கில் பூக்கும் தருணத்தையே மிக அரிதாகக் கருதுகின்றனர். இத்தகைய அரிதான மூங்கில் தற்போது மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் என முதுமலையின் பல பகுதிகளில் பூத்துள்ளது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை மூங்கில்கள் பூத்துக் குலுங்குவதால், வழக்கமான பசுமையிழந்து பொன்னிறம் போர்த்தியிருக்கிறது காடு. அரிதான உணவாகப் பார்க்கப்படும் மூங்கில் அரிசியைச் சேகரித்துச் சமைக்க பழங்குடிகளுக்கு எந்தத்தடையும் இல்லையென்றாலும், காட்டின் பேருயிரான யானைகளுக்கு இன்னும் சில காலம் உணவுப்பஞ்சம் இருக்குமே என்ற கலக்கமும் மேலோங்கியுள்ளது இந்தப் பூர்வகுடிகளின் மனதில். பேரன்பின் மிச்சம்!
கும்கிகளின் கேப்டன் என்றழைக்கப்படும் கலீம் யானை ஓய்வுபெறுவதாக தமிழக வனத்துறையினர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். 99 ஆபரேஷன்களை முடித்துள்ள நிலையில் கலீமை கெளரவப்படுத்தும் விதமாக 100வது ஆபரேஷன் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போதுள்ள கும்கிகளில் கலீம் யானைக்கு இணையான கம்பீரத்துடன் இருப்பது சின்னத்தம்பி யானை மட்டும்தான். இதனால் கலீம் இடத்துக்கு சின்னத்தம்பியை நியமிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே சின்னத்தம்பி யானை 3 ஆபரேஷன்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீவிரப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதால் சின்னத்தம்பியே அடுத்த கேப்டன் என்கின்றனர் யானைப் பாகன்கள். கலீமுக்கு நன்றியும் வாழ்த்தும்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அகத்தீஸ்வரர், தில்லாபுரி அம்மன் கோயில், உத்தரவீரராகவ பெருமாள் கோயில் அருகே 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இசை மண்டபம் உள்ளது. பல்வேறு வகைக் கற்களைக் கொண்டு இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள 16 தூண்களில் ஒவ்வொரு தூணைத் தட்டினாலும், வெவ்வேறு ஒலி கேட்கிறது. இந்த இசை மண்டபம் தமிழர்களின் கட்டடக் கலைக்கு சாட்சியாக விளங்கிவருகிறது. வணிகப் பெருவழிப் பாதையில் தாராபுரம் அமைந்துள்ளதால் பல்வேறு வணிகத் தொடர்புகளை விளக்கும் சிற்பங்களையும் இந்தத் தூணில் காணலாம். தமிழர்களின் கட்டடக் கலையையும், இசை ஞானத்தையும் எடுத்துக்கூறும் இந்த இசைத் தூண்கள் முறையான பராமரிப்பின்றிச் சேதமடைந்துள்ளன. சில தூண்கள் கீழே விழும் நிலையில் உள்ளன. மண்டபத்தின் மீது செடி கொடிகளும் படர்ந்துள்ளன. வரலாற்றுச் சுவடுகள் காப்போம்!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகளைக் கட்டிக் கொடுத்துள்ளார், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. இதனால், மாநிலத்திலேயே அனைத்துப் பள்ளிகளும் ஸ்மார்ட் வகுப்பறையுடன் உள்ள தொகுதியாக ராதாபுரம் மாறியுள்ளது. அவற்றை முதல்வரை வைத்துத் திறந்துவைக்க ஏற்பாடு நடப்பதால் அதற்கான பணிகளை ஆய்வு செய்து வருகிறார் அப்பாவு. ஆனைகுடி கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் சென்ற அப்பாவு, வகுப்பறைக்குள் நுழைந்து பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஆசிரியராக இருந்தவர் அவர். ‘தமிழக முதல்வர் யார்?’ என்ற கேள்வியுடன் பாடத்தைத் தொடங்கியவர் கதைகளைச் சொல்லி மாணவர்களை மகிழ்வித்தார். ஸ்மார்ட் தொகுதி!