
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஜெ.புதுக்கோட்டை மலைமேடு பகுதியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாலை தாண்டும் பாரம்பரியத் திருவிழா நடக்கும்.

இந்தியாவில் முதல்முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறக்க வந்திருந்தார் ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக். மும்பையிலும் டெல்லியிலும் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்களைத் திறந்துவிட்டு, பயணம் முழுக்க அவர் செம பிஸி. பிரதமர் மோடியுடன் சந்திப்பு ஒருபுறமென்றால், மாதுரி தீட்சித்துடன் வடா பாவ் சாப்பிட்டது, சோனம் கபூருடன் ஐ.பி.எல் மேட்ச் பார்த்தது, சாய்னா நேவாலுடன் பேட்மின்டன் ஆடியது என்று மனிதர் செம பிஸி.


ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் ஆப்பிள் ஸ்டோருக்கே போய் டிம் குக்கைச் சந்தித்தார். ஐபோனில் ஷார்ட் பிலிம் எடுத்த அராடி காடவ், சமையல் வீடியோக்கள் எடுக்கும் இன்ஃப்ளூயன்ஸர் பூஜா திங்ரா என்று பலரையும் சந்தித்து தங்கள் தயாரிப்புகளுக்கு புரொமோஷன் செய்யவும் டிம் குக் தவறவில்லை. திங்க் டிஃபரன்ட்!


பெங்களூரில் முதல்முறையாக, எலெக்ட்ரானிக் சிட்டியில் ஆங்காங்கே ஸ்மார்ட் பஸ் ஸ்டாப் அமைத்துள்ளார்கள். இந்த பஸ் ஸ்டாப்பில் செல்போன் மற்றும் லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி, ஸ்நாக்ஸ் மற்றும் சாக்லேட் வழங்கும் இயந்திரம், சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் ஆகியவை உள்ளன. இங்குள்ள தகவல் திரையில், பஸ் மற்றும் மெட்ரோ ரயில் ரூட் மேப், பஸ்கள் வரும் நேரம் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம். அவசர உதவி தேவைப்படுவோர், இங்குள்ள ‘Panic’ பட்டனை அழுத்தியதும், அருகிலுள்ள சி.ஐ.எஸ்.எப் அல்லது போலீஸாருக்குத் தகவல் சென்றுவிடும். இந்த ஸ்மார்ட் பஸ் ஸ்டாப் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இதேபோல் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் அமைக்க வேண்டுமென எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உதவிக்கு சாட் ஜி.பி.டி இருக்குதா?!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஜெ.புதுக்கோட்டை மலைமேடு பகுதியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாலை தாண்டும் பாரம்பரியத் திருவிழா நடக்கும். மாடுகள்மீது மஞ்சள் பொடியைத் தூவி உரிமையாளர்கள் மேற்சட்டை அணியாமல் மாடுகளுடன் ஓடிவருவார்கள். ஊர்க் கோயில் அருகே ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தரையில் வெள்ளை வேட்டியை விரித்துவிடுவார்கள். அந்த வேட்டியை எந்த மாடு முதலில் தாண்டுகிறதோ, அந்த மாட்டுக்குப் பூஜை செய்து முதல் மரியாதை வழங்குவார்கள். பிறகு அந்த மாடு ‘கோயில் மாடு’ என அழைக்கப்படும். அப்பகுதியில் உள்ள பொம்மைய சுவாமி மாலை தாத்தையா மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படும் மாட்டுக்கு பக்தர்கள் பழங்கள், கரும்பு கொடுத்து வணங்கிச் செல்வர். கால்நடைகளுக்கு மரியாதை!


ஊட்டியிலிருந்து அவலாஞ்சி போகும் வழியில் எமரால்டு அணைக்கட்டின் மேட்டில் அமைந்திருக்கிறது அழகிய எமரால்டு கிராமம். கடைக்கோடியில் உள்ள இந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் அண்மையில் கொண்டாடப்பட்ட மாரியம்மன் கோயில் திருவிழாவின் புகைப்படங்கள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. காரணம், கோயில் முகப்பில் மின் விளக்குகளால் ஜொலித்த மும்மதங்களின் அடையாளங்களைக் கொண்ட பதாகைகள்தான். இந்தக் கிராமத்தில் எந்த மத விழா நடைபெற்றாலும், மும்மதங்களின் அடையாளங்கள் இடம்பெறுமாம். மத பேதமின்றி மும்மதங்களின் தலைவர்களையும் அழைத்து விழா மேடையில் வைத்து மரியாதை செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல இந்த ஆண்டும் நடைபெற்ற மத நல்லிணக்கத் திருவிழாவை கல்வித்துறையில் பணியாற்றும் கவிஞர் விஜயராஜன் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து உலகறியச் செய்திருக்கிறார். `எங்கள் அடையாளமே மத நல்லிணக்கம்' எனப் பெருமை கொள்கிறார்கள் எமரால்டு மக்கள். இதுதான் ஒற்றுமை..!

இந்தியாவில் விளையாட வரும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பலரும் ``இந்தியாவில் இருக்கும்போது சொந்த மண்ணில் உள்ள உணர்வு ஏற்படுகிறது'' என்பார்கள். டு பிளஸ்ஸியும் அதற்கு விதிவிலக்கில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்துவிட்டு இப்போது ஆர்.சி.பி கேப்டனாக இருக்கும் டு பிளஸ்ஸி ‘Faf Through Fire’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியிருக்கிறார். தென்னாப்ரிக்க அணியின் கேப்டனாக இருந்தாலும், சமீப ஆண்டுகளில் புறக்கணிக்கப்பட்டதால் ஓய்வை அறிவித்த அவர், ஐ.பி.எல் போட்டிகளில் உற்சாகமாக ஆடிவருகிறார். தோனி உள்ளிட்டவர்களுடன் தனக்கு நேர்ந்த அனுபவங்களை ஆங்காங்கே நூலில் தொட்டிருக்கிறார். ``ஆனால், இந்த நூல் முழுக்க முழுக்க கிரிக்கெட் பற்றியதாக இருக்காது. என் திறமை குறித்த சந்தேகத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் வலம்வந்தவன் நான். வாழ்க்கைப் போராட்டங்கள், உறவுகள், தலைமைப்பண்பு என்று எல்லாவற்றைப் பற்றியுமான உரையாடலாக இதை எழுதியிருக்கிறேன். படிப்பவர்கள் எவரும் இதைத் தங்கள் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்'' என்கிறார் டு பிளஸ்ஸி. நண்பா ஓ நண்பா!
குடும்ப அரசியலின் பிரச்னைகள் குறித்து எல்லோரும் பேசுகிறார்கள். ஒரு கட்சி உடையும்போது, அது இன்னும் பிரச்னைக்குரியதாக மாறிவிடுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தனி அணி அமைத்து, பா.ஜ.க-வுடன் கூட்டணி உருவாக்கி முதல்வரானார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் குடும்பமும் இதனால் உடைந்துவிட்டது. உத்தவ் தாக்கரேவின் மூத்த அண்ணன் பிந்து மாதவ், தன் மகன் நிகர் தாக்கரேவை அரசியல் நிழல் படியாமல் வளர்த்தார். வழக்கறிஞரான நிகர் தாக்கரே இப்போது ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்து அரசியல் செய்கிறார். இத்தனைக்கும் சித்தப்பா குடும்பத்துடன் அவருக்கு நல்ல உறவு இருக்கிறது. உத்தவின் இன்னொரு அண்ணன் ஜெய்தேவ் தாக்கரே, இந்தக் குடும்பத்துடன் சண்டை போட்டு ஏற்கெனவே தனியாகப் போய்விட்டார். அவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளிக்க, அவர் மகன் ஜெய்தீப் இப்போதும் சித்தப்பா உத்தவ் தாக்கரே பக்கம் நிற்கிறார். சிவசேனா தலைவர்கள் பலரின் குடும்பங்களும் இப்படி இரண்டு அணிகளிலும் பிரிந்து கிடக்கின்றன.அண்ணன் என்னடா தம்பி என்னடா...

`ஜெயிலர்' படத்தின் மொத்த போர்ஷனையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினி. இப்போது புத்துணர்ச்சி பெறுவதற்காக பெங்களூரு சென்றிருக்கிறார். அங்கே உள்ள தன் அபிமான ஆசிரமம் ஒன்றில் யோகா, தியானம் என மனதைக் கரைத்து அமைதியில் லயித்து வருகிறார். அங்கிருந்து சென்னை திரும்பியதும் `லால் சலாம்' படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அதனை முடித்துக் கொடுத்துவிட்டே, `ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேலின் படத்திற்கு வருகிறார். இந்த எனர்ஜிதான் தலைவர்!
நகரப்பகுதியாக இருந்தாலும் பொள்ளாச்சியிலும், பக்கத்து கிராமப்பகுதிகளிலும் ஏதாவது படப்பிடிப்பு நடந்து கொண்டேதான் இருக்கும். பொள்ளாச்சி மட்டுமல்லாமல் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையிலும் ஏராளமான படங்களின் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற காரமடை அரங்கநாதர் கோயில், இயற்கை எழில் கொஞ்சும் காரமடை ரயில் நிலையம் என நிறைய லொகேஷன்கள் இங்கு உள்ளன. ரஜினியின் ‘தம்பிக்கு எந்த ஊரு’, பிரபுவின் ‘மாப்பிள்ளை கவுண்டர்’ போன்ற படங்கள் தொடங்கி விஜய்யின் ‘பகவதி’, ‘வேலாயுதம்’, விஷாலின் ‘ஆம்பள’, கடந்த ஆண்டு சக்கை போடு போட்ட கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வரை காரமடையில் படம்பிடிக்கப்பட்ட படங்களின் பட்டியல் நீளமானது. ரோலிங் சார்!

அடுத்தடுத்து படங்களைத் தேர்வு செய்வதில், நிதானம் கடைப்பிடிக்கிறார் பிரியங்கா மோகன். இப்போது தனுஷின் `கேப்டன் மில்லர்' படப்பிடிப்பில் இருக்கும் அவர், ராஜேஷின் இயக்கத்தில் `ஜெயம்' ரவியின் படத்திலும் நடித்துவருகிறார். இதனையடுத்து மீண்டும் தெலுங்குப்பக்கம் போகிறார். அங்கே பவன் கல்யாண் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். சால சந்தோசம்!
இப்போது லண்டனில் சட்ட மேற்படிப்பு படித்துவரும் சரத்குமார் மகன் ராகுல் இந்தியா திரும்பியவுடன் அவரை ஹீரோவாக்கத் தீர்மானித் திருக்கிறார்கள். மணிரத்னம் ஆபீஸ் வரைக்கும் ராகுல் விசிட் நடந்திருக்கிறது. கமல் படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் எடுக்கப்போகும் மல்டி ஸ்டார் படத்தில் ராகுலை சேர்க்கவும் ஏற்பாடுகள் நடக்கிறதாம். ராதிகாவை விடவும் சரத்குமார் இதில் ஆர்வமாக இருப்பதாகச் செய்தி. லிட்டில் சுப்ரீம் ஸ்டாரே வருக!

‘கர்மா’ என்ற வங்கமொழிப் படத்தால் கவனம் பெற்றவர், ப்ரீதா சென் குப்தா. அவர் தென்னிந்தியப் படங்களில் மோக்ஷா என்ற பெயரில் நடித்துவருகிறார். சமீபத்தில் சோட்டாணிக்கரை பகவதி கோயிலுக்குச் சென்று வழிபட்ட மோக்ஷா, கோயில் யானையைப் பார்த்ததும் போட்டோ எடுத்துக்கொள்ள அருகில் சென்றுள்ளார். அப்போது போனில் பேசிக்கொண்டிருந்த யானைப்பாகன், அருகில் வந்து போட்டோ எடுக்கும்படி கூறுவதற்காக கையில் வைத்திருந்த அங்குசத்தால் மோக்ஷாவைத் தொட்டார். யானைதான் தன்னைத் தொடுகிறது என நினைத்து பயத்தில் நடுங்கிவிட்டார் மோக்ஷா. அந்த வீடியோ வைரலான நிலையில் ‘யானைப் பாகன் ராஜினாமா செய்ய வேண்டும்’ என ஆன்லைன் சமரில் இறங்கியுள்ளனர் சேட்டன்மார். பாகனுக்கும் யாராவது சப்போர்ட் பண்ணுங்கப்பா...
சந்தானத்தை வைத்து ‘குலுகுலு’வை இயக்கிய ரத்னகுமார், அடுத்து ராகவா லாரன்ஸ் படத்தை இயக்குகிறார். முதன்முறையாக லாரன்ஸுடன் ஜோடி சேர நயன்தாராவிடம் பேசிவருகிறார்கள். இந்தப் படத்திற்கு இன்னொரு ஸ்பெஷல், கதை, திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் எழுதுகிறார். ‘லியோ’வின் எழுத்தில் பங்கேற்ற ரத்னகுமார், அதை முடித்துக் கொடுத்துவிட்டு லாரன்ஸின் படத்தை ஆரம்பிப்பார் என்கிறார்கள். படம் குளுகுளுன்னு வரட்டும்!