கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
த்ரிஷா

கும்பகோணம் அருகே உள்ள இளங்கார்குடி கிராமத்தில் 100 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட கரும்பாயிரம் ஐயனார் கோயிலில் பழைமையான புளியமரம் அமைந்துள்ளது

விஜய் - லோகேஷ் கனகராஜின் `லியோ' படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் தொடங்குகிறது. விஜய் - த்ரிஷா காம்பினேஷனில் பிரமாண்ட பாடல்காட்சி ஒன்றைப் படமாக்க உள்ளனர். இதற்காக பிரசாத் ஸ்டூடியோவில் பிரமாண்ட அரங்கம் ஒன்றை அமைத்துள்ளனர். கூடவே, சஞ்சய் தத்தின் காட்சிகளையும் படமாக்க உள்ளனர். மே இரண்டாம் வாரத்தில் இதற்காக சென்னை வருகிறார் சஞ்சய் தத். லியோ ஃபீவர்!

த்ரிஷா
த்ரிஷா

பா.இரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் `தங்கலான்' படத்தின் நிறைவுக்கட்டப் படப்பிடிப்பு மீண்டும் மதுரையில் தொடங்கவிருக்கிறது. இம்மாதத்தோடு இதன் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டாலும்கூட படத்தை உடனடியாகத் திரைக்குக் கொண்டு வரவில்லையாம். கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் ஆண்டு இறுதியில்தான் திரைக்குக் கொண்டு வருகிறார் இரஞ்சித். லேட்டானாலும் ஸ்பீடா வாங்க!

 கிம் கார்டாஷியன்
கிம் கார்டாஷியன்
 கிறிஸ்டினா
கிறிஸ்டினா

அமெரிக்க ரியாலிட்டி ஷோ செலிப்ரிட்டி கிம் கார்டாஷியன். இவர் போலவே இருப்பதால் சோஷியல் மீடியாவில் பிரபலமானார் கிறிஸ்டினா அஷ்டென் குர்கானி. இன்ஸ்டாவில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை எகிறவே, கிம் போல தன்னை மாற்றிக்கொள்ள நிறைய ஆபரேஷன்கள் செய்துகொண்டார் கிறிஸ்டினா. இதன் விளைவு, 35 வயதிலேயே ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார். கடைசியில், அவரை அடக்கம் செய்யவே நிதி திரட்ட வேண்டிய நிலைக்குப்போனது அவர் குடும்பம். இரவல் அழகு ஆபத்து!

இளங்கார்குடி
இளங்கார்குடி

கும்பகோணம் அருகே உள்ள இளங்கார்குடி கிராமத்தில் 100 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட கரும்பாயிரம் ஐயனார் கோயிலில் பழைமையான புளியமரம் அமைந்துள்ளது. இந்த மரம் ஆயிரக்கணக்கான வௌவால்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. சரணாலயமாக வௌவால்களுக்குப் புளிய மரம் இருப்பதால், இதை `வௌவால் கோயில்' என்று மக்கள் அழைக்கின்றனர். வௌவால்களைப் பாதுகாப்பதற்காக அந்த கிராமத்தினர் பட்டாசு வெடிப்பதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகின்றன. மரத்தில் இருக்கும் வௌவால்களைப் பார்ப்பதற்கே தினமும் ஏராளமானோர் கோயிலுக்கு விசிட் அடிக்கின்றனர். எல்லாரும் பாலோ பண்ணுங்கப்பா..!

கரண் ஜோகர் மீண்டும் ஜூன் இறுதியில் காபி வித் கரண் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். காபி வித் கரண் 7வது சீசனைப்போலவே இந்த சீசனும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதற்கு முன்பு மூன்று முறையும் அறிமுக எபிசோடில் ரன்பீர் கபூரும், அவரின் மனைவி ஆலியா பட்டும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனின் அறிமுக எபிசோடிற்கும் அவர்களையே அழைக்க கரண் ஜோகர் முடிவு செய்துள்ளார். கடந்த ஓராண்டில் அவர்களின் திருமண வாழ்க்கை அனுபவங்களை இதில் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர். இவர்கள் தவிர வழக்கமான பாலிவுட் நட்சத்திரங்களும் இதில் பங்கேற்கவுள்ளனர். நட்சத்திரக் கொண்டாட்டம்!

ஸ்ரீராஜராஜன் பள்ளி
ஸ்ரீராஜராஜன் பள்ளி
ஸ்ரீராஜராஜன் பள்ளி
ஸ்ரீராஜராஜன் பள்ளி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இருக்கும் ஸ்ரீராஜராஜன் பள்ளியில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் மதுரை செல்வன் ஏற்பாட்டில், இந்தியாவிலேயே முதல்முறையாக இசையுடன் கூடிய பசுமைச் சூழல் வகுப்பறை தொடங்கப்பட்டிருக்கிறது. எல்.கே.ஜி முதல் 2ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, நாசா அங்கீகரித்த 17 வகையான தாவரங்களுடன், நியூரோசயின்ஸ் மியூசிக்குடன் வகுப்பறை அமைக்கப்பட்டிருக்கிறது. பசுமைச் சூழல் வகுப்பறை, குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கிறது. நியூரோ சயின்ஸ் மியூசிக் தெரபி, குழந்தைகளை சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க வைக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் இதுபோல் வகுப்பறையை ஏற்படுத்துவதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறார். பசுமையின் செல்வன்!

ஷாருக் கான்
ஷாருக் கான்

அட்லியின் இயக்கத்தில் `ஜவான்' படத்தில் ஷாருக் கான் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஜூன் 2-ம் தேதி ரிலீஸ் செய்ய ஷாருக் கான் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதற்காக அவசர அவசரமாக வேலைகளை முடிக்க வேண்டாம் என்று படப்பிடிப்புக் குழுவிடம் ஷாருக் முன்பு தெரிவித்திருந்தார். இப்போது திட்டமிட்டபடி அந்த தேதியே வெளியிடுவதில் ஷாருக் உறுதியாக இருக்கிறார். `பதான்' படத்தைப் போன்று இதற்கும் ஒரு மாதம் பெரிய அளவில் புரொமோஷன் வேலைகளைச் செய்யவும் ஷாருக் தீர்மானித்துள்ளார். தெறிக்கவிடுங்க!

ஊட்டி
ஊட்டி

குளுகுளு ஊட்டியில்கூட வியர்க்கும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. கோடையைச் சமாளிக்க ஜில்லான ஊர்களைத் தேடி மக்கள் படையெடுத்துவருகிறார்கள். நீலகிரிக்கு வரும் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க லட்சக்கணக்கான மலர்கள் அரசுப் பூங்காக்களில் தயார் நிலையில் உள்ளன. இயற்கையின் கொடையான முதுமலையில் தற்போது செம்மயில் கொன்றை என அழைக்கப்படும் செங்கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதிலும் குறிப்பாக, தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் அருகில் மாயாற்றங்கரையில் உள்ள அத்தனை பெரு மரங்களும் ஒருசேரப் பூத்துச் செங்காடாக மாறியிருக்கிறது. பூ மழையென இடைவிடாது சொரியும் செங்கொன்றைச் சாரலில் நனையவே கூட்டம் கூடிவருகிறது. வசந்தத்தின் வாழ்த்து..!

மக்கள் களப்பணி இயக்கம்
மக்கள் களப்பணி இயக்கம்

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில், ‘மக்கள் களப்பணி இயக்கம்’ என்ற அமைப்பினர் தினமும் மதியவேளையில் ஆதரவற்ற 200, 300 பேருக்கு ‘அட்சய பாத்திரம்’ மூலம் உணவளித்துப் பசியாற்றிவருகிறார்கள். பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் பலர் பசியால் வாடிக்கொண்டிருப்பதைக் கண்டு, இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ரவிசங்கர், அட்சய பாத்திரத் திட்டத்தைத் தொடங்கி ஒரு மாதமாக அன்னதானம் வழங்கிக்கொண்டிருக்கிறார். இவரின் முயற்சியை ஊக்கப்படுத்தும் விதமாக, பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடும் பலரும் அன்னதானத் திட்டத்துக்கு உதவிச் செய்கிறார்கள். ஆதரவற்றோரின் வயிறு புன்னகைக்கட்டும்!

 நாய் மீட்பு
நாய் மீட்பு
 நாய் மீட்பு
நாய் மீட்பு
 நாய் மீட்பு
நாய் மீட்பு

தாயன்புக்கு இந்த உலகில் நிகரில்லை என்பதை உணர்த்தும் சம்பவம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிகழ்ந்துள்ளது. கே.என்.புரம் பகுதியில் உள்ள சாக்கடை அருகே கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பெண் நாய் அங்கும் இங்கும் ஓடி சத்தம் எழுப்பியவாறு இருந்துள்ளது. அங்குள்ளவர்கள் சென்று பார்த்தபோது, அந்தப் பெண் நாய் சாக்கடைக்குள் குட்டி ஈன்றுள்ளது தெரியவந்தது. மழை காரணமாக சாக்கடையில் தண்ணீர் அதிகமாக வந்ததாலும், சாக்கடை உயரம் அதிகமாக இருந்ததாலும் குட்டிகளை வெளியே எடுத்து வர முடியாமல் தவித்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆறு குட்டிகளை பத்திரமாக மீட்டுத் தாயிடம் சேர்த்தனர். நாய்க்குட்டிகளை மீட்கும்போது, தீயணைப்புத் துறையினருக்கு எந்தத் தொந்தரவும் செய்யாமல் குட்டிகளிடம் தாய் நாய் தனது அன்பை வெளிப்படுத்தியது அங்கிருந்த மக்களை நெகிழ வைப்பதாக இருந்தது. சின்னச் சின்ன அன்பில்தானே...