கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

கீர்த்தி ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி ஷெட்டி

நீலகிரி மலையடிவாரமான கல்லாறு பகுதியில் பெண் இருவாச்சிப் பறவை ஒன்று தனது குஞ்சுகளுக்கு இரை ஊட்டிய காணொலி, பறவைகள் ஆய்வாளர்கள் பலரையும் கலங்கடிக்கச் செய்துள்ளது.

சூர்யாவின் `கங்குவா' படத்தின் பீரியட் காலகட்ட போர்ஷனை கொடைக்கானலில் படமாக்கிவருகின்றனர். மலைப்பகுதியில் ரொம்பவே அடர்த்தியான காட்டுக்குள் படப்பிடிப்பு நடந்துவருகிறது. சூர்யாவின் வித்தியாசமான தோற்றத்திற்கான மேக்கப்பிற்கே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆகிறதாம். படப்பிடிப்பு முடிந்து அந்த மேக்கப்பைக் களைவதற்கும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது என்றும் யூனிட்டில் வியந்து சொல்கிறார்கள். ரோலக்ஸுக்கு டஃப் கொடுக்குமா?

`விடுதலை' பாகம் ஒன்றை, திண்டுக்கல் அருகே சிறுமலை என்ற காட்டில் தனியார் எஸ்டேட் ஒன்றில் படமாக்கினார் வெற்றிமாறன். சமீபத்தில் `வாடிவாசல்' கிராபிக்ஸ் வேலைகளுக்காக லண்டன் சென்று வந்தவர், சென்னை திரும்பிய வேகத்தில் `விடுதலை' இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பையும் அதே லொகேஷனில் ஆரம்பித்துவிட்டார். விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் இதில் புதிதாக இணைந்திருக்கிறார் என்று தகவல். வெல்கம் ஜூனியர் செல்வன்!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக மே 2-ம் தேதி திடீரென அறிவித்தார். பவாரின் அண்ணன் மகன் அஜித் பவாருக்கு முதல்வர் பதவி ஆசையை பா.ஜ.க ஏற்படுத்தியதாகவும், அவர் தலைமையில் கட்சி எம்.எல்.ஏ-க்களில் ஒரு பிரிவினர் பிரிந்து சென்று பா.ஜ.க கூட்டணியில் இணையப்போவதாகவும் சில நாள்களாக வதந்திகள். கட்சியில் செல்வாக்குள்ள அஜித் பவாரைத் தட்டி வைக்கவே சரத் பவார் இந்த அதிரடியைக் காட்டினார் என்கிறார்கள். கட்சியினர் கண்ணீர் விட்டதால் மூன்றே நாள்களில் தன் முடிவைத் திரும்பப் பெற்றார். இப்போது அஜித் பவாரை ஓரங்கட்டிவிட்டு தன் மகள் சுப்ரியா சுலேவைத் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவர சரத் பவார் திட்டமிடுவதாகத் தகவல். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பவாரின் வழிகாட்டலை எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், முதலில் தன் கட்சியை சரிப்படுத்தப்பார்க்கிறார் அவர். வாரிசு இருக்கிறார்..!

கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி

பாலா, அருண்விஜய் கூட்டணியின் `வணங்கான்' படத்தில் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் கீர்த்தி ஷெட்டி. சூர்யாவின் ஜோடியாக கமிட் ஆகியிருந்தார். `வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிவிட, அதன்பின் கீர்த்தி ஷெட்டியும் விலகினார். இந்நிலையில் அந்தப் படத்திலிருந்து அப்போது விலகியதற்கான காரணத்தை இப்போது மனம் திறந்திருக்கிறார் கீர்த்தி. ``சூர்யா சார், பாலா சாரின் மீது பெரும் மதிப்பும், நல்ல புரிதலும் இன்னமும் தொடர்கிறது. தேதிகள் இல்லாத காரணத்தினால் மட்டுமே அதில் நடிக்கமுடியாமல் போனது'' என்கிறார் கீர்த்தி ஷெட்டி. கோலிவுட் மிஸ் பண்ணுது!

பகத் பாசில், துல்கர் சல்மான் என அனைவரும் தமிழ், தெலுங்குப் படங்களில் ஆர்வம் காட்ட, இப்போது மலையாளத்தில் டொவினோ தாமஸ் காட்டில் பெருமழை. கிட்டத்தட்ட பத்துப் படங்களில் வரிசை கட்டி நடிக்கிறார். விஜய்யின் `லியோ' படத்தில் நடிக்க விஜய், லோகேஷ் இருவரும் சேர்ந்து அழைப்பு விடுக்க, பவ்யமாக ஸாரி சொல்லிவிட்டாராம் டொவினோ. கலக்குறீங்க மின்னல் முரளி!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் ஒரு செப்புப் பட்டயம் கிடைத்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிக்க ஆங்கிலேயர் விளம்பரம் செய்த வரலாறு குறித்துப் பேசுகிறது அது. 20.10.1799-ல் எழுதப்பட்ட இந்தப் பட்டயத்தை பிரிட்டிஷ் ராணுவப்படையின் தளபதி மேஜர் பானர்மேன் இங்கு வைத்துள்ளார். ஒருங்கிணைந்த திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த பாளையக்காரர்களுக்கும் குடிமக்களுக்கும் பானர்மேன் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார். ‘பாளையப்பட்டுகளில் உள்ள சேர்வைக்காரர், சேவகர், காவல்காரர், குடியானவர் முதலியோர் துப்பாக்கி, வெடி, ஈட்டி, வல்லயம் பிடித்திருந்தாலும் அல்லது வைத்திருந்தாலும் உயிர்ச்சேதம் செய்யப்படுவர். பாளையப்பட்டுகளின் குடியானவர்களின் நடத்தைகளுக்கு அந்தந்த பாளையக்காரர்களே பொறுப்பு. அதை மீறி எந்த பாளையக்காரர்களின் தொந்தரவு இருந்தாலும், பாளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாளையக்காரரும் தண்டிக்கப்படுவர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க செப்புப் பட்டயம்’ என்கிறார் இதைக் கண்டறிந்த குழுவின் தலைவர் பேராசிரியர் தாமரைப்பாண்டியன். வரலாற்றின் மிச்சம்!

மீரா நந்தன்
மீரா நந்தன்

சின்னத்திரைத் தொகுப்பாளினியாக இருந்து திரைப்பட நடிகையாக அவதாரம் எடுத்தவர் மீரா நந்தன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ரேடியோ ஜாக்கி ஆன இவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை துளிர்விட்டிருக்கிறது. இதற்காக கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவில் படங்களை ஷேர் செய்துள்ளார். இப்போது கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். பெஸ்ட் ரோலிலும் நடிங்க.

கல்லாறு
கல்லாறு
பெண் இருவாச்சிப் பறவை
பெண் இருவாச்சிப் பறவை

நீலகிரி மலையடிவாரமான கல்லாறு பகுதியில் பெண் இருவாச்சிப் பறவை ஒன்று தனது குஞ்சுகளுக்கு இரை ஊட்டிய காணொலி, பறவைகள் ஆய்வாளர்கள் பலரையும் கலங்கடிக்கச் செய்துள்ளது. தந்தையாக மாறிய தாய்ப் பறவையென அதை ஆச்சர்யத்துடன் ரகசியமாகக் கண்காணித்துவருகின்றனர். தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது என்ற சாமானியர்களின் கேள்விக்கான பதிலாக இருக்கிறது இருவாச்சிகளின் வாழ்வியல் முறை. ‘Great Indian Hornbill’ எனப்படும் இருவாச்சிப் பறவைகளைப் பொறுத்தவரை, இனப்பெருக்க காலத்தில் எளிதில் வெளியே வரமுடியாத அளவிற்கு உயரமான மரப்பொந்தில் கூடமைத்து பெண் பறவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். ஆண் பறவையே இணைக்கும் குஞ்சுகளுக்குமான இரையைக் கூட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்கும். ஆண் இருவாச்சிக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு கூடு திரும்பவில்லை என்றால், மொத்தக் குடும்பமும் உயிர் தப்பாது. கல்லாறு பகுதியில் கூடமைத்திருந்த இருவாச்சி குடும்பத்தின் ஆண் பறவை, காயத்துடன் மீட்கப்பட்டு அண்மையில் பரிதாபமாக உயிரிழந்தது. இதை அறியாது குஞ்சுகளுடன் இரைக்காகக் கூட்டுக்குள் காத்திருந்த பெண் பறவை, ஒரு கட்டத்தில் கூட்டை விட்டு வெளியேறி குஞ்சுகளுக்கு இரை தேடி ஊட்டிப் பராமரித்துவருகிறது. அரிதினும் அரிதான இந்த நிகழ்வைக் கண்டு உறைந்திருக்கிறது‌ ஒட்டுமொத்தக் காடும்! வொண்டர் மதர்!

செருகளத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் மனோரமாவின் தம்பி மகள் சாந்தி
செருகளத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் மனோரமாவின் தம்பி மகள் சாந்தி
செருகளத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் மனோரமாவின் தம்பி மகள் சாந்தி
செருகளத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் மனோரமாவின் தம்பி மகள் சாந்தி

ஆச்சி மனோரமாவின் தம்பி மகள் சாந்தி, திருவாரூர் மாவட்டம் செருகளத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இங்கு புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைக்கச் சென்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, ‘`நான் மனோரமாவின் ரசிகை. அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்’’ என மனோரமா குறித்த நினைவுகளை சாந்தியிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், பள்ளியைச் சிறப்பாக நிர்வகித்துவருவதாகவும் பாராட்டி சாந்தியை நெகிழ வைத்திருக்கிறார் சாருஸ்ரீ. ஆச்சியை யாருக்குத்தான் பிடிக்காது!