
சத்தம் காட்டாமல் சில உதவிகளைச் செய்துவருகிறார் விஜய்சேதுபதி. நா.முத்துசாமி இறப்பிற்குப் பிறகு தொடர்ந்து கூத்துப்பட்டறையை நடத்த முடியாமல் தடுமாறினார்கள். இதனால் கூத்துப்பட்டறை தொடர்ந்து நடப்பது கேள்விக்குறியானது
பாலிவுட்டில் ஒரே ஆண்டில் பல படங்களை வெளியிடுபவர் அக்ஷய்குமாராகத்தான் இருக்க முடியும். சமீபத்தில் அவரது படங்கள் பெரிய அளவில் வசூலைக் கொடுக்காவிட்டாலும், தொடர்ந்து தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறார். மேற்கு வங்கத்தில் 1989-ம் ஆண்டு சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 65 பேரைக் காப்பாற்றிய பொறியாளர் யஷ்வந்த் சிங் கில் வாழ்க்கைக்கதையில் அவர் நடித்திருக்கிறார். படத்திற்கு `The Great Indian Rescue' என்று பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்துவிட்ட நிலையில் படம் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. பயோபிக் நாயகன்!

ஓ.டி.டி-க்காக ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரித்துக் கொடுக்கும் `குற்றப்பரம்பரை'யை சசிகுமார் இயக்குகிறார், விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கிறார் என்றும் முன்பே சொல்லியிருந்தோம். ஆனால், வேல்ராஜும் சசிகுமாரும் வெவ்வேறு படங்களில் பிஸியானதால், `குற்றப்பரம்பரை'க்கான வேலைகளை ஆரம்பிக்காமலேயே இருந்தனர். இப்போது மதுரையில் லொகேஷன் பார்த்து வருகின்றனர். அடுத்த மாதம் ஷூட்டிங் ஆரம்பம். பட்டையக் கெளப்புங்க!

சமீபத்தில் `தங்கலான்' படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டு, வீட்டில் சிகிச்சை பெற்று முன்னேறி வருகிறார் விக்ரம். அவரிடம் உடல்நலம் பற்றி வருத்தமாக விசாரிக்கும் திரையுலகினரிடம் மகிழ்வுடன் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார் விக்ரம். “ `பொன்னியின் செல்வன் 2'-க்கும் பெரிய வரவேற்பும் வசூலும் கிடைச்சிருக்கு. சமீபத்துல வெளியான `தங்கலான்' மேக்கிங் வீடியோவுலேயும் என் உழைப்பைப் பார்த்துட்டு திருஷ்டிபட்டுடுச்சுன்னு நினைக்கறேன். இந்த விபத்துனால அந்த திருஷ்டி கழிந்ததாக எடுத்துக்கறேன்'' எனச் சொல்லியிருக்கிறார் விக்ரம். டேக் கேர் சீயான்!
மனோபாலா கடைசியாகத் தயாரித்த படம், `சதுரங்க வேட்டை 2'. அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும் கூட, சில சூழல்களால் ஹீரோ அரவிந்த்சாமியின் டப்பிங் வேலைகள் முடியாமல் இருந்தன. இந்நிலையில் மனோபாலாவின் நண்பர்கள் பலரும் அந்தப் படத்தை வெளிக்கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுபற்றி அவர்கள் அரவிந்த்சாமியிடம் பேசியுள்ளனர். அவரும் நிலையை உணர்ந்து சம்பளம் இல்லாமல் டப்பிங் பேசவும் ஓகே சொல்லியிருப்பதாகத் தகவல். கலைஞனுக்குச் சமர்ப்பணம்!
கோவை மாவட்டத்துக்குச் சிறுவாணித் தண்ணீர், பஞ்சாலைகள் என்று பல அடையாளங்கள் உள்ளன. அந்த வகையில் அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளை இணைக்கும் மஞ்சள் நிற நடைபாலம் கோவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்தப் பாலம் கட்டி 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாலம் என்னவோ பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்டதுதான். ஆனால் பகலானாலும், இரவானாலும், வெயிலானாலும், மழையானாலும் கோவையன்ஸ்கள் இதன் படத்துடன் சிலாகித்து ஸ்டேட்டஸ் போடுவார்கள். இந்தப் பாலத்தை ரசிக்காதவர்கள் குறைவு. தற்போது அவிநாசி சாலையில் 10.1 கி.மீ தொலைவுக்கு நீண்ட மேம்பாலம் கட்டி வருகின்றனர். இந்தப் பணி காரணமாக விரைவில் இந்த நடைபாலம் அகற்றப்பட உள்ளது. இதனால் கோவை மக்கள் குமுறிக்கொண்டிருக்கின்றனர். நாட்டாமை, பாலத்தை மாத்திக் கட்டுங்க!

சத்தம் காட்டாமல் சில உதவிகளைச் செய்துவருகிறார் விஜய்சேதுபதி. நா.முத்துசாமி இறப்பிற்குப் பிறகு தொடர்ந்து கூத்துப்பட்டறையை நடத்த முடியாமல் தடுமாறினார்கள். இதனால் கூத்துப்பட்டறை தொடர்ந்து நடப்பது கேள்விக்குறியானது. இதைக் கேள்விப்பட்டதும் முன்பு அதில் பணியாற்றிய பாசத்தில் கூத்துப்பட்டறைக் கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்துவருகிறார் சேதுபதி. கூத்துப்பட்டறைக் கலைஞர்கள் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியாம். நன்றி மறவாத பாசம்!

`தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணக் குறும்படம் மூலம் ஆஸ்கருக்குப் பெருமை தேடிக் கொடுத்த முதுமலை பாகன் தம்பதியான பெள்ளி, பொம்மன் ஆகியோருக்குக் கிடைக்கும் அங்கீகாரங்கள் பட்டியல் நீண்ட வண்ணம் இருக்கிறது. பிரதமர் மோடி முதல் தோனி வரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து அன்பு மழையால் குளிர்வித்து வரும் நிலையில், அவர்களுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது மலைகளின் அரசியான நீலகிரி. கோடை விழாவின் அங்கமாக கூடலூரில் நறுமணப் பொருள்கள் கண்காட்சி நடந்திருக்கிறது. 14 வகைகளில் 100 கிலோ நறுமணப் பொருள்களைக் கொண்டு ரகு, பொம்மி யானைகள் மற்றும் ஆஸ்கர் விருதை வடிவமைத்து அசத்தியதோடு, பெள்ளி மற்றும் பொம்மனின் ஆளுயரப் புகைப்படங்களையும் காட்சியரங்கில் வைத்து ஊர் அறியச் செய்திருக்கிறார்கள். இதை ரசித்துச் செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள். அர்ப்பணிப்புக்கு மரியாதை!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரேயா. திருநங்கை மாணவியான இவர், அங்குள்ள கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, 337 மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதியவர்களில் ஸ்ரேயா மட்டுமே திருநங்கை மாணவி. அமைச்சர் உதயநிதி தொடங்கி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வரை பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். “உயர்கல்வி முடித்து, அரசுப் பணிக்குச் செல்வதே எனது லட்சியம். எனது உயர்கல்விக்குப் பலரும் உதவி செய்வதாக நம்பிக்கை கொடுத்துள்ளனர்' என்று நெக்குருகிச் சொல்கிறார் ஸ்ரேயா. நாளை உனதே!
`ஜய ஜய ஜய ஜய ஹே', கடந்த ஆண்டு மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆனது. முன்னணி ஹீரோக்களின் படங்களைத் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்த அந்தப் படத்தை இயக்கிய விபின் தாஸ், அடுத்தாக பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் பேனரில் `குருவாயூரப்பன்றெ நடயில்' என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் சுவிட்ச் ஆன், குருவாயூர் கோயில் வாசலில் நடந்தது. இதில் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது. இந்த வில்லன் மாஸா, ஸ்மார்ட்டா?

கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். கி.பி. 880-ம் ஆண்டு பல்லவ மன்னன் அபராஜித வர்மன், பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் இடையே போர் நடைபெற்ற பகுதி. இதில் பல்லவர்களுக்கு ஆதரவாக ஆதித்த சோழன் மற்றும் கங்க மன்னன் பிரதிவீபதியும் போரிட்டனர். இதில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் பிரதிவீபதி வீரமரணம் அடைந்தார். அதை நினைவுகூரும் வகையில் பள்ளிப்படை ஒன்று கட்டப்பட்டது. சோழர்கள் அந்த இடத்தில் பகவதி ஐயனார் கோயில் கட்டினர். சோழர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்த இப்பகுதிக்குச் செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லை. வயல் வரப்பில் செல்லும் நிலை பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இதனால் வரலாற்று ஆய்வாளர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலரும் சிரமப்பட்டனர். இப்போது திருப்புறம்பியத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தப் போர்க்களத்துக்குப் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கே தடம் பதிக்கிறோம்!