சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

கீர்த்தி ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி ஷெட்டி

கேரள அரசின் உயர் பதவிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. இப்போது காசர்கோடு மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக் கப்பட்டிருக்கிறார், இன்பசேகர் காளிமுத்து.

கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி

`ஜப்பான்' படப்பிடிப்பு தள்ளிப்போன காரணத்தினால், சில வாரங்களுக்கு முன்னர் நலன் குமாரசாமி இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார் கார்த்தி. அந்த நேரத்தில் ஹீரோயின் முடிவாகாமல் இருந்ததால், கார்த்தியின் போர்ஷனை மட்டும் படமாக்கினார்கள். இப்போது ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியிருக்கிறார். பாலாவின் `வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகியதால், கீர்த்தியும் விலகினார். இந்நிலையில் கார்த்தியின் படத்தில் நடிக்கவிருக்கிறார் கீர்த்தி. கார்த்தியும் கீர்த்தியும்!

சூர்யா
சூர்யா

சூர்யா அதிகமும் மும்பையில்தான் இருக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே வீட்டில் தங்குகிறார். இரண்டு நாள் படப்பிடிப்பு இல்லையென்றால் கூட மும்பைக்கு ப்ளைட் ஏறிவிடுகிறார். இப்போது அங்கே படிக்கும் தேவ், தியாவின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதுதான் இதற்குக் காரணம். இந்த வரிசையில் ஆர்யாவும் சேர்ந்துவிட்டார். மும்பையில் குழந்தையோடு சாயிஷா இருப்பதால் அவரது வீட்டிலேயே வசிக்கிறார். படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே சென்னை விஜயம். அவரது சைக்கிளிங் நண்பர்கள் ஆர்யாவின் சென்னை ஷிப்ட்டை நோக்கிக் காத்திருக்கிறார்கள். சீக்கிரமா வாங்க பாஸ்!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. வேற்றுகிரகவாசி ஒருவர் பூமிக்கு வருகை தருவதைப் பின்புலமாக வைத்து வித்தியாசமாகச் செய்திருக்கும் முயற்சி இது. படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரொம்பவும் குளிர்ந்துபோய் அதன் இயக்குநர் ரவிக்குமாருக்கு பரிசாக இன்னொரு படமும் கொடுக்க முடிவெடுத்துவிட்டார். கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திற்குப் பிறகு, ரவிக்குமார் படத்திற்குத்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சிவா. அடுத்தது ஜாம்பி படமா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சொந்தமாக கேரவன் வாகனம் வைத்திருந்தவர் என்ற பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. இப்போதைய தலைமுறை நடிகர்களில் விக்ரமும், விஜய்சேதுபதியும் சொந்த கேரவன்கள் வைத்திருக்கின்றனர். அதிலும் விக்ரமின் கேரவனில் இண்டீரியர் வேலைப்பாடுகள் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கும். இதைப்போல தெலுங்கில் அல்லு அர்ஜுனின் கேரவனிலும் இண்டீரியர் பிரமாதப்படுத்தும் என்கிறார்கள். கலைஞனின் கலைரதம்!

அட்லி
அட்லி

ஷாருக்கானின் ‘ஜவான்’ பட வெளியீடு தள்ளிப்போய் உள்ளதால், மும்பையில் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் அட்லி. தொடர்ந்து ஹோட்டலில் தங்கி வேலை செய்வது அலுத்துப் போனதால் மும்பை பாந்த்ரா பகுதியில் ஃபிளாட் வாங்கியிருக்கிறார். கோலிவுட்ட மறந்துடாதீங்க...

ஒருவர் இறந்தபின்பும் 4 முதல் 6 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருப்பது கண்கள்தான் என்பதால், அவற்றை தானம் செய்வதன் மூலம், 2 முதல் நான்கு பேருக்குப் பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால் கண் தானம் குறித்து பல மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததும் அவரின் கண்கள் தானம் செய்யப்பட்ட பின், அவரது நெருங்கிய உறவினர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10,000 வழங்கிவருகிறது சமூக நலத்துறை. இந்தியாவில் வேறு எங்கும் இந்த நடைமுறை இல்லை என்கின்றனர் சமூக நலத்துறை அதிகாரிகள். கண்ணெனத் தகும் செயல்!

நாமக்கல் மாவட்டம், பட்டணத்தில் அமைந்திருக்கும் கருப்பசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா வெகுவிமர்சையாக நடக்கும். இந்நிலையில், கருப்பசாமி ஆயுதமான அரிவாளை பிரமாண்டமாகச் செய்ய நினைத்தனர் பட்டணத்தைச் சேர்ந்த ராஜா - சாந்தி தம்பதி. ஒரு டன் இரும்பில் 21 அடி உயரத்தில் இரண்டு அரிவாள்கள், கை வடிவிலான ஐந்து அடி உயர கிரானைட் பீடம் ஆகியவற்றைச் செய்து கோயிலுக்கு டிராக்டர் மூலம் கொண்டு வந்தனர். காணிக்கையாக அவர்கள் வழங்கிய இந்த அரிவாள்கள், கருப்பசாமி கோயில் முன்பு கிரேன் உதவியுடன் நடப்பட்டுள்ளன. எல்லைச்சாமி!

மதுரை ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் பொறுப்பேற்றபோது அதிரடியாக அரசியல் கருத்துகளைக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், தற்போது மடத்தில் பல மாற்றங்களைச் செய்து மடத்தின் நோக்கமான சைவத்தமிழை வளர்ப்பதிலும் மக்கள் நலனிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார். தன்னை காலை முதல் மதியம் வரை பொதுமக்கள் மடத்தில் வந்து பார்க்கலாம் என்று அறிவித்தவர், மாணவர்கள் பயன்பெறும்வகையில் தேவாரப் பாடசாலையும் நடத்துகிறார். பொதுத்தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்குவிக்கிறார். அதைவிட முக்கியமாக, வடமொழிக் கலப்பில்லாமல் தூய தமிழில் `தமிழாகரன்' என்ற ஆன்மிக இதழை சிறப்பாக வெளியிட்டு தமிழ்ப்பணி ஆற்றிவருகிறார். தமிழ் போற்றும் ஆதீனம்!

 இன்பசேகர் காளிமுத்து
இன்பசேகர் காளிமுத்து

கேரள அரசின் உயர் பதவிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. இப்போது காசர்கோடு மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக் கப்பட்டிருக்கிறார், இன்பசேகர் காளிமுத்து. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். தேயிலைத் தோட்டத் தொழிலாளராக இலங்கை சென்று தாயகம் திரும்பிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்பசேகரனின் பெற்றோர் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை பார்த்துதான் அவரைப் படிக்க வைத்தனர். தினசரி 2 மணி நேரம் நடந்துதான் இன்பசேகர் பள்ளிக்குச் செல்வார். கடுமையான வறுமைக்கு இடையே அரசுப் பள்ளியில் படிப்பை முடித்தார். வேளாண் படிப்பை முடித்து சிறிது காலம் விஞ்ஞானியாகப் பணிபுரிந்தாலும், ஐ.ஏ.எஸ் ஆவதுதான் அவரின் இலக்கு. 2015-ல் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களில் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார். கோழிக்கோடு மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய இவரை, காசர்கோடு மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளது கேரள அரசு. ‘அதிரடிகள் தொடரட்டும் இன்பா’ என சக தமிழ் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். ஆளப்போறான் தமிழன்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஜான் சல்லிவன் கோவை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தார். புதிர் நிறைந்த மர்ம மலையாக வெளி ஆட்களால் வேடிக்கை மட்டும் பார்க்கப்பட்டு வந்த நீலகிரி மலையேறி அதன் உச்சியையும் முதலில் அடைந்தவர் இவர்தான். `நீலகிரியின் தந்தை’ என அழைக்கப்படும் ஜான் சல்லிவன், ஊட்டி நகரத்தை நிர்மாணித்து 200 ஆண்டு ஆகிறது. இதனைப் போற்றும் விதமாக ஊட்டி -200 என்ற பெயரில் அரசு சார்பில் பெரும் கொண்டாட்டமே நடைபெற்றுவருகிறது. இதன் முத்தாய்ப்பாக ஜான் சல்லிவனின் ஐந்தாம் தலைமுறை கொள்ளுப்பேத்திகளை சிறப்பு விருந்தினர்களாக லண்டனிலிருந்து அழைத்து வந்திருக்கிறது தமிழக அரசு. அவர்களைக் கண்ட நீலகிரி மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள். நன்றி நவிலல்!

இன்பாக்ஸ்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அகத்தாரிருப்பைத் தாய் கிராமமாகக் கொண்ட 56 கிராம மக்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள குலதெய்வங்களான கூடமுடைய ஐயனார், பொண்ணு இருளப்பசாமி, தைலாகுளம் வீரமாகாளி ஆகிய கோயில்களுக்கு குடும்பத்தினருடன் கூட்டு மாட்டு வண்டியில் வழிபடச் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 215 கூட்டு வண்டிகளில் சென்றனர். பாரம்பரியம் மாறாமல், ஏழை பணக்காரர் வித்தியாசம் இல்லாமல், அனைவரும் சமமாக மாட்டு வண்டியில் 120 கி.மீ-க்கு மேல் 15 நாள் பயணம் செய்து குலதெய்வத்தை வழிபடுகிறார்கள். பாரம்பரியப் பயணம்!