
‘‘அகாடமிக்கு நன்றி. நான் THE CARPENTERS-ன் (அமெரிக்க பிரபல இசைக்குழு) பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன். தற்போது ஆஸ்கர் மேடைவரை வந்திருக்கிறேன்’’
``வயல்களின் புழுதியில் குதிக்கும் ஆக்ரோஷமான காளை போல!
உள்ளூர் அம்மன் திருவிழாவில் முன்னணி நடனக் கலைஞர் நடனமாடுவது போல!
மரச் செருப்புகளை அணிந்துகொண்டு குச்சியை வைத்து விளையாடுவது போல!
என் பாடலைக் கேளுங்கள்!”
நம் இந்திய மண்ணின் வாழ்வியலையும், கலாசாரத்தையும் பிரதிபலித்த தெலுங்குப் பாடலின் வரிகள், அதனுடன் இயைந்து இசைத்த நாட்டுப்புறக் கருவிகள், இவையெல்லாம் இன்று உலக அரங்கின் மிகப்பெரிய மேடையில் மகுடம் சூட்டப்பட்டிருக்கின்றன. ஆம், உலகத்தையே நான்கு கால்களில் ஆட்டம் போட வைத்த ‘நாட்டு நாட்டு' பாடல், அதன் படைப்பாளர்களின் கால்களையும் ஆஸ்கர் மேடையேற்றி அழகு பார்த்திருக்கிறது. மார்ச் 13 அன்று, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. உலகின் தலைசிறந்த கலைஞர்களின் திறமையினை அங்கீகரிக்கும் இவ்விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இணைந்து உருவாக்கிய ‘RRR' படப்பாடல் ‘சிறந்த ஒரிஜினல் பாடல்' பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றிருக்கிறது. இத்தனை ஆண்டுக்கால ஆஸ்கர் வரலாற்றில், இப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு விருது பெற்ற முதல் இந்தியத் திரைப்படப் பாடல் என்னும் பெருமையைப் பெற்று வரலாற்றில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது ‘நாட்டு நாட்டு.'

‘RRR' படம் வெளியாவதற்கு முன்பே ‘நாட்டு நாட்டு' பாடல் இந்தியாவில் வைரல். கீரவாணியின் கவர்ச்சிகரமான டியூனும், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் துள்ளலான நடனமும் அனைவரையும் கவர்ந்திழுக்க, தேசங்கள் கடந்து பெரும் சாதனை படைத்தது இந்தப் பாடல். உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கியின் பிரமாண்ட மாளிகையில் எடுக்கப்பட்ட இப்பாடல், ஏற்கெனவே ‘கோல்டன் குளோப்' விருது உட்படப் பல விருதுகளை வென்று பாராட்டுகளைக் குவித்தது. இதையடுத்து 95வது ஆஸ்கர் விழாவிலும் இப்பாடல் விருதினை வெல்லும் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆஸ்கர் விழாவில், ‘நாட்டு நாட்டு' பாடலை தீபிகா படுகோன் ஆஸ்கர் மேடைக்கு அறிமுகம் செய்ய, ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா (கீரவாணியின் மகன்) ஆகியோர் நடனக் கலைஞர்களின் உற்சாக நடனத்தோடு இப்பாடலைப் பாடினர். பாடல் முடிந்ததும் அரங்கம் அதிர அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விருதினை கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் பெற்றுக்கொண்டனர். ஆசியாவில் முதல்முறையாக தங்கள் மொழிப் பாட்டுக்காக விருது பெரும் கலைஞர்கள் எனும் பெருமையை ஆஸ்கர் விருதோடு சேர்த்து இந்தியாவுக்கு எடுத்து வந்தனர். முதன்முறையாக ஓர் இந்தியப் பாடலுக்குக் கிடைக்கும் ஆஸ்கர் விருதும் இதுதான். இதற்கு முன் ஆஸ்கர் விருதுகள் வென்ற பானு அத்தையா, ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி ஆகியோர் பிறமொழிப் படைப்புகளுக்கே இவ்விருதினைப் பெற்றிருந்தனர். சத்யஜித் ரே, வாழ்நாள் சாதனையாளருக்கான கௌரவ ஆஸ்கரை வென்றிருந்தார்.

கீரவாணி என்று தெலுங்குத் திரையுலகில் அறியப்படும் இவரை, மரகதமணியாக தமிழ் சினிமா அன்றே அரவணைத்துக்கொண்டது நினைவிருக்கலாம். தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய ‘அழகன்' திரைப்படத்தில் மரகதமணி என்றே அறிமுகம் செய்யப்பட்டார். பல்வேறு தமிழ் மெலடி பாடல்கள் மரகதமணியின் திறனைத் தமிழ்த்திரையுலகிலும் பறைசாற்றின. ராஜமௌலியின் பல்வேறு ஹிட் படங்களுக்கு, அதன் சூப்பர்ஹிட் பாடல்களும் ஒரு காரணம் என்றால், அதற்கான முழு முதல் காரணமாக கீரவாணி இருந்தார். ‘ஈகா' படத்தில் சாதாரண ‘ஈ'க்கு மாஸ் ஹீரோவுக்கான மியூசிக்கைப் போட்டுப் புல்லரிக்க வைத்தார் என்றால், ‘மகதீரா' படத்தில் ‘பாகுபலி'க்கான முன்னோட்டத்தை அட்டகாசமாகக் காட்டினார் எனலாம். ‘பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் பாடல்களும் இன்றும் நம் பிளேலிஸ்ட்டை ஆள்பவை!

‘‘அகாடமிக்கு நன்றி. நான் THE CARPENTERS-ன் (அமெரிக்க பிரபல இசைக்குழு) பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன். தற்போது ஆஸ்கர் மேடைவரை வந்திருக்கிறேன்’’ என்று ஆஸ்கர் மேடையில் பேசிய கீரவாணி, தொடர்ந்து அந்த இசைக்குழுவின் ‘TOP OF THE WORLD' எனும் பாடலைப் பாடி, ‘‘என்னுடைய மனதில் ஒரே ஆசைதான் இருந்தது. ராஜமௌலிக்கும் எனது குடும்பத்தினருக்கும் அந்த ஆசையே இருந்தது. ‘RRR' படம் ஆஸ்கரை வெல்ல வேண்டும். இது இந்தியர்களின் பெருமை. இந்த வெற்றி என்னை உலகின் உச்சியில் நிறுத்திவிட்டது’’ என்று நெகிழ்ந்தார். மேடையிலிருந்து இறங்கிய பின்னர், “இந்த உலகிற்கு, குறிப்பாக மேற்கத்திய உலகிற்கு நான் சொல்லிக்கொள்வது, இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் மக்களிசை கொட்டிக்கிடக்கிறது. அது இந்த மண்ணில் நீண்டகாலமாக இருந்துள்ளது. அந்தக் கலாசாரத்தைத் தழுவுவதற்கான கதவுகளை உலகத்துக்குத் திறந்து வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கமாக இருக்கும்’’ என்றார்.
அவருடன் சக படைப்பாளியாக விருது பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸ், தெலுங்கில் பிரபலமான ‘ரங்கஸ்தலம்', ‘புஷ்பா', ‘மகதீரா' போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். சந்திரபோஸ், ஆஸ்கர் விழா மேடையில் ‘‘நமஸ்தே” என்று நன்றி சொல்லிச் சுருக்கமாக முடித்தாலும், மேடையை விட்டு இறங்கிய பின்னர், “எங்கள் மொழியில் இப்பாடலை வடிவமைத்துள்ளோம். தெலுங்கு மொழி மிகச் சிறந்த மொழி, மிகச் சிறந்த இலக்கிய மொழி, மிகச் சிறந்த இசை மொழி, அதிலிருந்து உருவாகும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக மட்டுமல்ல, அதுவே இசைபோல உள்ளது. அதனால்தான் மொழி தெரியாதவர்கள்கூட இந்தப் பாடலைக் கொண்டாடியிருக்கின்றனர். உங்களால்தான் இது சாத்தியமானது” என்று பெருமிதமாகக் கூறினார்.
இந்தியாவின் பல முன்னணிக் கலைஞர்கள், ஹாலிவுட் பாணியில் படங்கள் எடுப்பதே உலக அரங்குக்குச் செல்லும் வழி என்று முயன்று கொண்டிருக்க, தெலுங்கு மொழியே புரியாத மேற்கத்திய மக்கள் ‘நாட்டு நாட்டு' பாடலுக்கு அர்த்தம் புரியாமலே நடனமாடித் தீர்த்திருக்கின்றனர். இந்த வெற்றியைப் பார்க்கும்போது 2020-ம் ஆண்டு ஆஸ்கர் வென்ற ‘தி பாரசைட்' இயக்குநர் பாங் சூன்-ஹோ சொன்ன ஒரு வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது. ‘‘நாம் ஒரேயொரு மொழியைத்தான் பேசுகிறோம். நம் அனைவருக்கும் பொதுவான அந்த மொழி சினிமாதான்!’’ ராஜமௌலியின் படைப்பில் கீரவாணி பெற்றிருக்கும் இந்த வெற்றியே அதற்கான சான்று!

சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் ‘The Elephant Whisperers’ படத்துக்காக இயக்குநர் கார்த்திகி கோன்சால்விஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கர் விருதைப் பெற்றனர். நெட்ப்ளிக்ஸில் வெளியான இந்த ஆவணத்திரைப்படம் 41 நிமிடங்கள் நம்மை முதுமலைக் காடுகளுக்கும், மலைகளுக்கும் அழைத்துச் சென்றது என்றே சொல்லலாம்; ஆதரவின்றித் தவித்த ரகு, அம்மு என்ற இரண்டு யானைக்கன்றுகளைப் பார்த்துக் கொண்ட பொம்மன் - பெள்ளி தம்பதிகளின் கதையாகக் கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகளோடு விரிந்தது. இயக்குநர் கார்த்திகி கோன்சால்விஸ், இவர்களின் வாழ்வை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் மனிதக் கண்களைப் போல கேமராக்களில் காட்சிப்படுத்தியிருந்தார்.

‘‘நமக்கும் இயற்கைக்கும் இடையேயான புனித பந்தம் குறித்துப் பேச இன்று இந்த மேடையில் நிற்கிறேன். பழங்குடி சமுதாயத்தின் மரியாதை, மற்ற உயிரினங்கள் மேல் அவர்கள் காட்டும் பரிவு, அனைத்து உயிர்களையும் ஒன்றிணைத்த இணக்கமான வாழ்வு போன்றவற்றுக்கு இந்த விருது. எங்கள் படத்தினை அங்கீகரித்ததற்கும் பழங்குடி மக்களை முன்னிலைப்படுத்தியதற்கும் அகாடமிக்கு என் நன்றிகள். இந்த விருதினை என் தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று மேடையில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கார்த்திகி.
ரகுவும் அம்முவும் இந்தச் செய்தி கேட்டு நிச்சயம் மகிழ்ந்திருப்பார்கள்.