Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்: மிர்ச்சி அஷ்வினி

மிர்ச்சி அஷ்வினி
பிரீமியம் ஸ்டோரி
News
மிர்ச்சி அஷ்வினி

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

‘`நீங்க கோபமா இருக்கீங்க அப்படிங்கிறதனால ஒருத்தர கேவலமா நடத்துற உரிமையை யாரும் உங்களுக்குக் கொடுக்கல. ‘நான் கோபமா இருந்தேன்... அதனால உன்னை அப்படிப் பேசிட்டேன். நான் கோபமா இருந்தேன்... அதனால உன்கிட்ட அப்படி நடந்தேன்’ங்கிறது என்னைக்குமே எக்ஸ்கியூஸ் ஆக இருக்காது. `Just Because you are angry doesn't have to be an excuse for you being cruel'’ எனக் கூறி மிர்ச்சி அஷ்வினி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவுக்கு மில்லியன் ஹாட்டீன்கள்! ‘கோபத்துல பேசிட்டேன், மன்னிச்சிக்கோ’ என்பதுதானே நாம் பெரும்பாலும் சொல்கிற வார்த்தைகள். வாழ்க்கைப் பாடத்தை அழகா ஒரு ரீல்ஸில் சொல்லிவிட்டார் எனப் பலரும் அந்த வீடியோவிற்குக் கமெண்ட் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

`Nothing is over until you stop trying' என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் மிர்ச்சி அஷ்வினி. அவருடைய வாழ்க்கையில் பல விஷயங்களை புன்னகையால் கடந்து வந்திருக்கிறார். ரேடியோ மிர்ச்சி ஸ்டேஷனில் அவருடைய `On - Air' ஏரியாவில் நமக்காகக் காத்திருந்தார். `ரீல்ஸ் பட்டாளம்' பகுதிக்காக அவரிடம் பேசினோம்.

மிர்ச்சி அஷ்வினி
மிர்ச்சி அஷ்வினி

‘‘இன்ஜினீயரிங் படிச்சிட்டிருக்கும்போதே ஒரு தனியார் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் கேம்பஸில் செலக்ட் ஆகிட்டேன். எங்க காலேஜ் கல்ச்சுரல் ஈவண்ட்டிற்கு ரேடியோ பார்ட்னராக வருவாங்களான்னு கேட்கிறதுக்காக மிர்ச்சி அலுவலகத்துக்குப் போயிருந்தேன். என்னைப் பார்த்துட்டு மிர்ச்சி மார்க்கெட்டிங் ஹெட் பெரோஸ், `நீங்க ஏன் ஆர்.ஜே ஆகக் கூடாது?!'ன்னு கேட்டார். அவர் சொன்னாருன்னு வீட்டுல சொல்லாம மூணு ரவுண்ட் ஆர்.ஜே இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணினேன். செலக்ட் ஆக மாட்டேன்னுதான் நினைச்சேன். ஆனா, என்னை செலக்ட் பண்ணினது மட்டுமல்லாம, எங்க வீட்டிலும் பேசி ஓகே சொல்ல வச்சிட்டாங்க. ஒரு மாசத்துல தமிழ்நாடு முழுக்க என் ஷோ போகுற மாதிரி பண்ணிட்டாங்க. காலேஜ் படிச்சிட்டிருக்கும்போதே இங்க வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இப்ப மிர்ச்சியில் ஐந்தாண்டுகள் ஓடிடுச்சு. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதோ ஒண்ணு ட்ரை பண்ணிட்டே இருக்கேன். மனசுக்குப் பிடிச்சு வேலையைப் பண்ணிட்டிருக்கேன்’’ என்றவரிடம் இன்ஸ்டாகிராம் குறித்துக் கேட்டோம்.

‘‘ரேடியோவில் பேசுற சில விஷயங்களை வீடியோவாக போடலாம்னு நினைச்சேன். மிர்ச்சி வரும்போது நீங்க இத்தனை வீடியோ போஸ்ட் பண்ணியே ஆகணும்னுலாம் யாரும் டார்கெட் எல்லாம் கொடுக்கல. மிர்ச்சியில் மார்னிங் மோட்டிவேஷனல் ஷோ பண்ணிட்டிருந்தேன். சுற்றியுள்ளவங்களை ஹேப்பியா, பாசிட்டிவா வச்சிக்கணும்ங்கிறது என் எண்ணம். அதனால மோட்டிவேஷனல் வீடியோக்களை என் இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஷேர் பண்ண ஆரம்பிச்சேன். `நான் ஒரு வழி சொல்றேன்.. அதை யோசிச்சுப் பாருங்க'ன்னு ஒரு ஐடியா கொடுப்பேன். நானே துவண்டு போகிற சில நேரங்களில் என் வீடியோவைப் பார்த்து, `நாமே இப்படிச் சொல்லியிருக்கோம்... நம்மால ஏன் முடியாது'ன்னு மோட்டிவேட் ஆகியிருக்கேன். நான் பண்ணின எல்லா மோட்டிவேஷனல் ஷார்ட்ஸுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு.

மிர்ச்சி அஷ்வினி
மிர்ச்சி அஷ்வினி

`உங்க வீடியோ பார்த்தேன்... தற்கொலை எண்ணத்துல இருந்து மீண்டு வர உங்க வார்த்தைகள் உதவியா இருந்துச்சு. ரொம்ப நன்றி!'ன்னு பலர் சொல்லியிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும். நான் சொல்ற விஷயங்களை ஒருத்தர் ட்ரை பண்ணினாகூட நான் ஜெயிச்சிட்டேன்தானே? அப்படி பல முறை ஜெயிச்சிருக்கேன். எனக்கு கமல்ஹாசன் சார்னா உயிர். என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் கையால பெஸ்ட் ஆர்.ஜே அவார்டு வாங்கினேன்’’ என்றவரின் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

‘‘பைனல் இயர் படிக்கும்போது Lichen Planus என்கிற Autoimmune Disorder எனக்கு வந்துடுச்சு. உடம்புல முகத்தைத் தவிர எல்லா இடத்திலும் சிவப்பு நிறத்தில் தழும்புகள் வர ஆரம்பிச்சிடுச்சு. என்னன்னு கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே உடம்பு முழுக்க அந்த மார்க்ஸ் பரவிடுச்சு. ரேடியோ மிர்ச்சி ஹெட்கிட்ட இதுபற்றிப் பேசினேன். அவர் என்கிட்ட, `உங்களை நாங்க அழகுக்காக செலக்ட் பண்ணினோம்னு நினைச்சீங்களா? திறமைக்காகத்தான் செலக்ட் பண்ணினோம்'னு சொன்னதோடு நிறுத்தாம, தனியா என்னை மிர்ச்சி சார்பா நடந்த எல்லா பெரிய ஈவண்ட்களையும் தொகுத்து வழங்க வச்சார். அவர் சொல்லலைன்னா முடங்கிப்போயிருப்பேன். ‘இது என் அடையாளம் இல்லை... என் திறமைதான் என் அடையாளம்’னு புரிஞ்சுகிட்டேன். நான் என்பது என் செயல்தானே!’’ என்றவரிடம் இன்ஸ்டா கன்டென்ட் குறித்துக் கேட்டோம்.

மிர்ச்சி அஷ்வினி
மிர்ச்சி அஷ்வினி

‘‘அதுக்காக ரொம்ப மெனக்கெட்டதில்லை. என் நண்பர்கள் எல்லாம், `நீ தரையில் நடக்கிறதை திரையில் காட்டிடுவியே'ன்னு கிண்டல் பண்ணுவாங்க. நம்ம முதல் ரசிகர்கள் நம்முடைய நண்பர்களாகத்தான் இருப்பாங்க. ஒருமுறை என் ஃப்ரெண்ட் என்கிட்ட, `நீ பாடல் வரிகளை நல்லா நோட் பண்ணுற.. அதையே ஏன் வீடியோ பண்ணக் கூடாது'ன்னு கேட்டாங்க. அப்பதான் பாடல்களை டீகோட் பண்ணிப் போட ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல ரீச் கிடைச்சது. நாம சின்ன வயசில கேட்டு ரசித்த சில பாடல் வரிகள் டபுள் மீனிங்ல இருக்கும். அதையும் ரீல்ஸ்ல போட்டேன். அதுக்கு நல்ல ரீச் கிடைச்சது. சிலர் நான் 18+ கன்டென்ட் போடுறதாகச் சொன்னாங்க. நான் வெறும் டபுள் மீனிங் பாடல்கள் மட்டும் போடலையே... அழகான வரிகள் உள்ள பாடல்களையும்தான் ரீல்ஸாகப் போடுறேன். பாடலாசிரியர்கள் எழுதின வரிகளைத்தான் நான் சுட்டிக் காட்டுறேன். `கதைப்போமா' பாடல் எழுதிய கோ சேஷா, `பாடல்கள் குறித்து நீங்க பண்ணுற ரீல்ஸ் எல்லாம் நல்லா இருக்கு!'ன்னு சொன்னார். அவர்கிட்டயே, நீங்க எழுதின `வாயா என் வீரா' பாடலிலும் இது மாதிரியான கன்டென்ட் இருக்குன்னு சொன்னேன்’’ எனச் சிரித்தவரிடம் நெகட்டிவ் கமெண்ட்ஸ் குறித்துக் கேட்டோம்.

மிர்ச்சி அஷ்வினி
மிர்ச்சி அஷ்வினி

‘‘சிலர் `இவளுக்குக் கல்யாணம் ஆகல... இதெல்லாம் எப்படித் தெரியுது?'ன்னெல்லாம் கமெண்ட் பண்ணுவாங்க. ஏற்கெனவே எழுதின பாடல் வரிகளுக்குத்தான் நான் ரியாக்ட் பண்ணுறேங்கிறது அவங்களுக்குப் புரியல. சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் பர்சனலா என்னை பாதிக்கலைன்னாலும் என் ஃபேமிலியை பாதிக்குது. என் மனசுல எந்தத் தப்பும் இல்லை. அதனால அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கிறதில்லை. என்னோட ஃபாலோயர் அனுஷான்னு ஒருத்தர் மலேசியாவில் இருக்காங்க. அவங்க மன அழுத்தத்துல இருந்திருக்காங்க. மருத்துவமனையில் அவருடைய அண்ணன் என் வீடியோஸ் காட்டியிருக்கார். `உங்க வீடியோ பார்த்துட்டு மன அழுத்ததுல இருந்து நான் வெளியே வந்துட்டேன்'னு எனக்கு மெசேஜ் அனுப்பினாங்க. அதுமட்டுமல்லாம, அஷ்வினி வெல்ஃபேர்னு ரிஜிஸ்டர் பண்ணி ஏழைக் குழந்தைங்களுக்கு உதவி பண்ணுறாங்க. இப்படி நல்ல உறவுகளையும் இன்ஸ்டாகிராம் மூலமா சம்பாதிச்சிருக்கேன்’’ என எமோஷனல் ஆனவருக்கு பூங்கொத்து வாழ்த்துகள் சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.

அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?

ஆல்கஹால், ஃபேர்னஸ் க்ரீம், வெயிட் லாஸ் போன்ற கொலாபரேஷன்கள் பண்ண மாட்டேன்!