Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்: நிஷா

நிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
நிஷா

பர்சனலா பலர், அவங்க வீட்டுக்கு வந்து சாப்பிடச் சொல்லி மெசேஜ் அனுப்புவாங்க. அப்படி என்னுடைய ஃபாலோயர் ஒருத்தர் தொடர்ந்து அவருடைய வீட்டுக்குச் சாப்பிட வரச் சொல்லிக் கேட்டுட்டே இருந்தார். அவருடைய வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வந்தேன்.

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

சாப்பாட்டுப் பிரியர்களுக்காக விதவிதமான ஹோட்டல்கள் குறித்தும், வெரைட்டியான உணவுகள் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு எக்கச்சக்க லைக்ஸ்களை அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கிறார் நிஷா. ஊர் ஊராகச் சென்று அந்தந்த ஊர்களின் ஸ்பெஷல் உணவுகள் குறித்துத் தொடராகவும் ரீல்ஸ் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

ஐ.டி வேலை ஒருபுறம், இன்ஸ்டா ஒருபுறம் என பேஷனையும், புரொபஷனையும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் நிஷாவை `ரீல்ஸ் பட்டாளம்' பகுதிக்காக சந்தித்துப் பேசினேன்.

‘‘ஆரம்பத்துல பொழுதுபோக்குக்காகத்தான் இன்ஸ்டாகிராம் பேஜ் ஆரம்பிச்சேன். நாங்க சாப்பிடப் போகும்போது ஆர்டர் பண்ணுற உணவுகளை போட்டோ எடுத்து அப்லோடு பண்ணுவேன். வெறுமனே போட்டோக்கள் மட்டும்தான் ஆறு மாசமா போட்டுட்டு இருந்தேன். அந்த போட்டோக்களை மட்டுமே விரும்பி கிட்டத்தட்ட ஆயிரம் ஃபாலோயர்ஸ் வந்தாங்க. அப்பதான் சாப்பாடு பற்றியும், என்னென்ன ஃபுட் எங்கெங்கே ஸ்பெஷல்னும் தெரிஞ்சிக்க ஆடியன்ஸ் விரும்புறாங்கன்னு புரிஞ்சது. அதுக்கப்புறம் ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் குறித்து வீடியோக்கள் எடுக்க முடிவு பண்ணினேன்.

நிஷா
நிஷா

சென்னை மண்ணடி ஏரியாவில் கிடைக்கிற உணவுகள் குறித்து ரீல்ஸ் போட்டிருந்தேன். அந்த வீடியோ பார்த்துட்டு பலர், `அக்கா, நான் அங்க ட்ரை பண்ணினேன்... நல்லா இருந்துச்சு!'ன்னு சொன்னாங்க. நம்மகிட்ட ஏதோ கன்டென்ட் இருக்குன்னு நம்மள ஃபாலோ பண்ணுறதோடு நிறுத்திடாம ட்ரை பண்ணியும் பார்க்கிறாங்க. அவங்களுக்காகவே மெனக்கெடணும்னு தோணுச்சு. சின்னச் சின்னக் கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரைக்கும் தேடித் தேடி வீடியோ எடுக்க ஆரம்பிச்சேன்!’’ என்றவரிடம் இன்ஸ்டா ரீல்ஸ் குறித்துக் கேட்டேன்.

‘‘நான் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருக்கேன். அதுல மார்னிங் ஷிப்ட்ங்கிறதனால சாயங்காலம் வீடியோ ஷூட் பண்ணப் போவேன். போயிட்டு வந்து நைட், வீடியோவை எடிட் பண்ணி அப்லோடு பண்ணுவேன். ஆரம்பத்தில் அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணல. இதெல்லாம் பண்ணணுமான்னுதான் கேட்டாங்க. அம்மா மட்டும்தான் எனக்கு ஃபுல் சப்போர்ட். அப்பாவுக்குப் பிடிக்காததனால நான் கேமரா முன்னாடி வராம வெறுமனே வீடியோ எடுத்துட்டு அதுக்கு வாய்ஸ் ஓவர் மட்டும் பண்ணிட்டு இருந்தேன். என் குரல் என்னுடைய பலம்னு சொல்லலாம். பலரும் உங்க குரல் நல்லாருக்குன்னு சொல்லியிருக்காங்க. ஆங்... சொல்ல மறந்துட்டேங்க! இப்ப அப்பா என்னைப் புரிஞ்சிக்கிட்டு எனக்கு சப்போர்ட் பண்ணுறாரு. `இந்த ஹோட்டலில் இது ஸ்பெஷல்'னு இப்போலாம் அவரே பல இடங்களுக்கு என்னைக் கூட்டிட்டுப் போறார்.

நிஷா
நிஷா

என் ஃபாலோயர்ஸ் நிறைய பேர், `எங்க ஊருல இந்த டிஷ் ஃபேமஸ்... நீங்க வந்து ட்ரை பண்ணிப் பார்த்துட்டு வீடியோ போடுங்க'ன்னு சொல்லுவாங்க. அவங்களுக்காகவே ஒவ்வொரு ஊரா டிராவல் பண்ணி வீடியோ போட ஆரம்பிச்சேன். அந்த சீரிஸ்க்கெல்லாம் நல்ல ரீச் இருந்துச்சு. வெவ்வேறு டிஷ்கள் ட்ரை பண்ணுறதனால பல நேரங்களில் உடல்நிலை சரியில்லாமப்போயிருக்கு. சில உணவு ஒத்துக்காம உடம்புல அலர்ஜியெல்லாம்கூட வந்திருக்கு. வாரத்துக்கு நான்கு நாள்கள் வெளியில்தான் சாப்பிடுறேங்கிறதனால ஜிம்முக்குப் போய் ஒர்க் அவுட் எல்லாம் பண்ணி ஃபிட்னஸ் மெயின்டெயின் பண்ணிட்டிருக்கேன்’’ என்றவரிடம் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்துக் கேட்டேன்.

‘‘நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வரும். `இந்தப் பொண்ணு இப்படி சாப்பிடுறதாலதான் குண்டா இருக்கா!'ன்னு சொல்லுவாங்க. எனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. நான் குண்டா இருக்கிறதால எனக்கோ, என் ஃபேமிலிக்கோ எந்தப் பிரச்னையும் இல்ல. பிறகு எதுக்காக யாரோ முகம் தெரியாத நபர் சொல்றதை நான் பெருசா எடுத்துக்கணும்? அதையெல்லாம் புறக்கணிச்சுட்டு அடுத்த வேலையைப் பார்க்க இப்ப பழகிட்டேன்’’ என்றவர், தொடர்ந்து பேசினார்.

நிஷா
நிஷா

‘‘நான் சாப்பிடுற டிஷ் நல்லா இல்லைன்னா அதை வீடியோவே எடுக்க மாட்டேன். சாப்பிட்டுப் பார்த்து எனக்குப் பிடிச்ச டிஷ் மட்டும்தான் போஸ்ட் பண்ணுவேன். அண்ணா நகரில் ஒரு சின்ன பரோட்டாக் கடை பற்றி வீடியோ போட்டேன். அந்த வீடியோவைப் பார்த்துட்டு 35,000-த்துக்கும் மேல எனக்கு ஃபாலோயர்ஸ் வந்தாங்க. அந்த வீடியோ எனக்கு மட்டும் நல்ல ரீச் கொடுக்கலைங்க... அந்தக் கடையும் இப்ப சூப்பரா வியாபாரம் ஆகிட்டு இருக்கு. அப்படி பல சின்னச் சின்னக் கடைகள் என்னால அடுத்த லெவல் போயிருக்கு. அது எனக்கு ரொம்பவே பெருமை!

சாப்பாட்டு விஷயத்துல ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட் பிடிக்கும். எனக்குப் பிடிச்சது உங்களுக்குப் பிடிக்காம இருக்கலாம். அதனால நீங்க கண்டிப்பா இத சாப்பிடணும்னெல்லாம் சொல்ல மாட்டேன். ட்ரை பண்ணிப் பாருங்கன்னு மட்டும்தான் சொல்றேன். எனக்கு நான்வெஜ் பிடிக்கும்ங்கிறதனால அது சார்ந்த உணவுகளை அதிகமா தேடுவேன்’’ என்றவரிடம் புரொமோஷன் குறித்துக் கேட்டேன்.

‘‘சின்ன வயசில நான் விரும்பிச் சாப்பிட்ட ஐஸ்கிரீம் கம்பெனி இப்ப என்னுடன் கொலாபரேஷன் பண்ணச் சொல்லிக் கேட்டப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்ககூட தொடர்ந்து கொலாபரேஷன் பண்ணிட்டு இருக்கேன். ஹோட்டல்களுக்கு புரொமோஷனுக்காகப் போகும்போதுகூட எனக்குப் பிடிக்காத உணவுகளை நல்லா இருக்குன்னு நிச்சயம் சொல்ல மாட்டேன்... கொலாபரேஷன் பொறுத்தவரை எனக்குன்னு சில கொள்கைகள் வச்சிருக்கேன். அத எப்பவும் மீற மாட்டேன்’’ என்றவரிடம், ஃபாலோயர்ஸ் வீட்டுக்குப் போய் சாப்பிட்ட அனுபவம் குறித்துக் கேட்கவும் சிரித்தவாறே பேசத் தொடங்கினார்.

ரீல்ஸ் பட்டாளம்: நிஷா
ரீல்ஸ் பட்டாளம்: நிஷா

‘‘பர்சனலா பலர், அவங்க வீட்டுக்கு வந்து சாப்பிடச் சொல்லி மெசேஜ் அனுப்புவாங்க. அப்படி என்னுடைய ஃபாலோயர் ஒருத்தர் தொடர்ந்து அவருடைய வீட்டுக்குச் சாப்பிட வரச் சொல்லிக் கேட்டுட்டே இருந்தார். அவருடைய வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வந்தேன். அந்த மாதிரி நெகிழ்வான தருணங்களையும், நல்ல உறவுகளையும் இன்ஸ்டாகிராம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கு’’ என்றவரிடம் அடுத்த கட்டத் திட்டம் குறித்துக் கேட்டேன்.

‘‘இதுவரை என் வீடியோவில் என் முகத்தைப் பெரிய அளவில் காட்டாம இருந்தேன். இனிமேல், கேமரா முன்னாடி வந்து நிறைய வீடியோக்கள் பண்ணலாம்னு இருக்கேன். அதே மாதிரி, தொடர்ந்து சின்னச் சின்னத் தள்ளுவண்டிக் கடைகளைக் கண்டுபிடிச்சு வீடியோ போடணும். ருசியாகவும் சுத்தமாகவும் சமைக்கற வீதியோரக் கடைகள் நிறைய இருக்கு. சரி, ஃபுட் ஸ்ட்ரீட்டுக்குப் போகிற நேரம் வந்துருச்சு... கிளம்பட்டுமா?’’ என்றவாறு விடைபெற்றார்.

அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?

எளிதாகக் கையாள முடியாத பொருள்களையும், ஆல்கஹால் பொருள்களையும் புரொமோட் பண்ண மாட்டேன்.