
சின்னதா பிசினஸ் பண்ணுறவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சுதான் சில புரொமோஷன்களுக்கு ஓகே சொல்றோம். ஆனா, அதனால சில கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கு.
இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!
`கோலிக் குண்டு கண்ணு... கோவப்பழ உதடு...' பாடலில் பரத் - கோபிகாவின் ரொமான்ஸ் ஹிட் அடித்ததோ இல்லையோ, இன்ஸ்டாகிராமில் அதே பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்திருந்த சண்முகம் - பவித்ராவிற்கு ஏகப்பட்ட ஹார்ட்டீன்கள்!
சினிமாப் பாடல்களை ரீல்ஸாகப் பதிவிடுவது இன்ஸ்டாவில் வழக்கம். எந்தப் பாடலாக இருந்தாலும் அதற்கு ஏற்ற ரியாக்ஷன்ஸ் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர்களுள் இவர்கள் முக்கியமானவர்கள். இருவரும் வேலைக்குப் புறப்படும் நேரம்தான் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டினோம். வரவேற்றுப் பேசத் தொடங்கினார் பவித்ரா.

‘‘நான் காலேஜ் படிக்கும்போதே பார்ட் டைமா ஒரு மருத்துவமனையில் அக்கவுன்ட்ஸ் பிரிவுல வேலை பார்த்துட்டிருந்தேன். காலையில் ஆபீஸ் போயிட்டு வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடி சாயங்காலம் போற மாதிரி இருக்கும். இடைப்பட்ட நேரத்துலதான் ரீல்ஸ் பண்ணிட்டிருக்கோம். நான் எம்.பி.ஏ முடிச்சிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், `ஐ.டி வேலைக்கு ட்ரை பண்ணலாமே, ஏன் இங்கேயே இருக்க'ன்னெல்லாம் சொல்லியிருக்காங்க. எனக்கு இந்த வேலை வசதியா இருக்கிறதால வேற வேலைக்கு முயற்சி பண்ணல’’ என்றவரிடம், ‘‘நீ வீடியோவை போஸ்ட் பண்ணு... நான் பேசிட்டிருக்கேன்’’ என சண்முகம் பேச ஆரம்பித்தார்.
‘‘நான் ஃபிட்னஸ் டிரெயினராக இருக்கேன். கம்ப்யூட்டர் கிளாஸ்லதான் பவித்ராவை மீட் பண்ணினேன். எங்களுடையது காதல் திருமணம்தான். காதலிக்கும்போதே டிக்டாக்கில் நாங்க சேர்ந்து வீடியோ பண்ணினோம். அது எல்லாத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். வீடியோஸ் ட்ரெண்ட் ஆன சமயம் டிக்டாக் பிளாக் ஆச்சு. அதுக்கப்புறமாக இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் பண்ண ஆரம்பிச்சோம். பொதுவா எங்களுடைய வீடியோஸ் எல்லாமே ரியலா இருக்குன்னு சொல்வாங்க. எங்களுக்கு என்ன வருமோ அதை மட்டும்தான் பண்ணுறோம். ரொம்ப சீக்கிரமெல்லாம் நாங்க ஃபேமஸ் ஆகல. நாங்களும் கஷ்டப்பட்டுதான் மேலே வந்துட்டிருக்கோம்’’ என்றவரை, `எமோஷனல் ஆகாத' எனக் கலாய்த்துவிட்டு பவித்ரா தொடர்ந்தார்.
‘‘நிறைய பேர் `இன்ஸ்டாகிராம்ல தான் நீங்க சம்பாதிக்கிறீங்களே...பிறகு எதுக்கு வேலைக்குப் போறீங்க'ன்னு கேட்குறாங்க. எங்க ரெண்டு பேருக்குன்னா இதுல கிடைக்குற வருமானம் போதும். குடும்பத்துக்காக இது தவிர்த்து வேலைக்கும் போய் சம்பாதிக்க வேண்டியிருக்கு’’ என்றவர், புரொமோஷன் குறித்துப் பேசினார்.
‘‘ஆரம்பத்தில் ரம்மி ஆப் பற்றித் தெரியாம புரொமோஷன் பண்ணிட்டோம். இதனால பலர் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு தெரிஞ்ச அப்புறமா அது மாதிரி யான ஆப்களை புரொமோட் பண்ணுறதில்லை.
சின்னதா பிசினஸ் பண்ணுறவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சுதான் சில புரொமோஷன்களுக்கு ஓகே சொல்றோம். ஆனா, அதனால சில கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கு. புரொமோட் பண்ணுறதுக்காக டிரஸ் அனுப்புவாங்க. அந்த டிரஸ்ஸுக்கு போஸ்ட், ரீல்ஸ் போட்டிருப்போம். சில பிராண்ட் ஓனர்ஸ், `நீங்க புரொமோட் பண்ணிக் கொடுத்து மொத்தமும் வித்துடுச்சு மேம். சீக்கிரமே அடுத்த கொலாபரேஷன் பண்ணுவோம்'னு சொல்வாங்க. ஒரு சிலர், `நீங்க ஒரு போஸ்ட்தான் போட்டீங்க. ரெஸ்பான்ஸ் வரவே இல்ல. எக்ஸ்ட்ரா ரீல்ஸ் போடுங்க, போஸ்ட் போடுங்க’ன்னு பிரஷர் பண்ணுவாங்க. மிரட்டல் தொனியிலேயும் பேசுவாங்க. சில சமயங்களில் டிரஸ்ஸையும் திருப்பி அனுப்பிட்டு, அந்த டிரஸ்ஸுக்கான காசையும் கொடுத்திருக்கேன்’’ என்றதும், சண்முகம் தொடர்ந்தார்.
‘‘எங்க வீடியோஸ் பார்த்துட்டு சிலர், `நீங்க ரொம்ப கிரிஞ்ச் பண்ணுறீங்க’ன்னெல்லாம் சொல்லியிருக்காங்க. பாசிட்டிவ் கமென்ட்ஸுக்கு எப்படி மெனக்கெட்டு ரிப்ளை பண்ணுவோமோ அப்படி நெகட்டிவ் கமென்ட்ஸுக்கும் ரிப்ளை பண்ணுவோம். உண்மையாவே நம்ம தப்பைச் சுட்டிக் காட்டுறாங்கன்னா அதை நாம சரி பண்ணிக்கிறதுல தப்பில்லைங்க’’ என்றவரை நிறுத்தி, ``ஆஹ்... இதை நான் சொல்லியே ஆகணும்’’ என்றவாறு பவித்ரா ஆரம்பித்தார்.
‘‘ `கறுப்பா இருக்கீங்க... நீங்க ஏன் வீடியோ பண்ணுறீங்க?', `அவர் வெள்ளையா அழகா இருக்கார்... நீங்க அவருக்கு சுத்தமா மேட்ச் ஆகல...' இப்படியெல்லாம் சொல்லியிருக்காங்க. ஒரு கட்டத்தில், `ஒருவேளை நாம இவர் வாழ்க்கையில் இல்லாம இருந்திருந்தா, இவர் லைஃப் இன்னும் பெட்டரா இருந்திருக்குமோ'ன்னெல்லாம் யோசிச்சிருக்கேன்’’ என்றவரின் கரம் பற்றி, `நீ என் வரம்மா' என நெற்றி முத்தம் கொடுத்துவிட்டு சண்முகம் தொடர்ந்தார்.
‘‘என் ஃப்ரெண்ட் ஒரு செலிப்ரிட்டி. அவன் கூட ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அப்ப அவன்கூட செல்ஃபி எடுக்க பலர் கூடிட்டாங்க. அந்தச் சமயம் ஒரு ஐந்தாறு பேர் என்கிட்ட வந்து செல்ஃபி எடுத்தாங்க. நம்ம கூடவும் செல்ஃபி எடுக்கிறாங்களேன்னுதான் ஆரம்பத்தில் நினைச்சேன். அப்புறமாகத்தான் கூட்டத்தைச் சமாளிச்சு அவனை காரில் ஏற வைக்கிறதுக்காக என்கூட செல்ஃபி எடுக்க வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சது. ஒரு மாதிரி ஆகிடுச்சு. இப்ப இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர் விருதெல்லாம் வாங்கப் போகும்போது எங்க கூட செல்ஃபி எடுத்துக்க அத்தனை பேர் ஆசையா வர்றாங்க. அன்னைக்கு என்னை அவமானப்படுத்தினவங்களுக்கு நிச்சயம் இப்ப நான் யார்னு தெரிஞ்சிருக்கும்’’ என எமோஷனல் ஆனவரிடம் அடுத்தகட்டத் திட்டம் குறித்துக் கேட்டோம்.
‘‘நாங்க யூடியூப் சேனலில் விலாக் (Vlog) மாதிரி பண்ணிட்டு இருக்கோம். அதே மாதிரி இன்ஸ்டாவிலும் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். ஃபுட் ரிவ்யூ, ரியல் லைஃப்ல நடக்கிற காமெடி கன்டென்ட் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்’’ என்றதும் `ஷிஃப்ட்டிற்கு டைம் ஆச்சு... புறப்படட்டுமா?' என பவித்ரா கேட்க, அவர்களிடமிருந்து விடைபெற்றோம்.
அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?
சிலருக்கு ஸ்கின் புராடக்ட்ஸ் செட் ஆகும், சிலருக்கு செட் ஆகாதுங்கிறதனால ஸ்கின் கேர் புராடக்ட்ஸை புரொமோட் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.