
எனக்கு கிரியேட்டிவ் ஆக வீடியோ எடுக்கப் பிடிக்கும். ஒருமுறை பீச்ல உட்கார்ந்து சும்மா எதையோ யோசிச்சிட்டிருந்தேன். ஒரு பையன் வந்து, `அண்ணா உங்களை வரைஞ்சிருக்கேன்'னு என் படத்தைக் காட்டினான்
இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!
`என்ன கொறை என் பொறப்பில்
அத்தனைக்கும் நான் பொறுப்பா
உன்ன விட்டா எனக்கு
யார் இருக்கா!'
`பாவக்கதைகள்' ஆந்தாலஜியில் வருகிற `தங்கமே தங்கமே' பாடல் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. திருநங்கை ஒருவர் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி போன் கேட்கிறார். அவர்களும் கொடுக்கின்றனர். அவர் பேசிவிட்டு அவர்களிடம் போனைத் திருப்பிக் கொடுக்கிறார். அப்போது பைக் ஓட்டிக் கொண்டிருக்கும் நபர் கோப்ரோ கேமராவைப் பொருத்தியுள்ளதைப் பார்த்து அதுகுறித்து அந்தத் திருநங்கை விசாரிக்கிறார். அப்போது பைக் ஓட்டிக்கொண்டிருந்த நபர், ‘உங்க லைஃப்ல ஹேப்பி மொமண்ட் பற்றிச் சொல்லுங்க?' எனக் கேட்கிறார். அதற்கு அந்தத் திருநங்கை சகோதரி, ‘எனக்குப் பிடிச்ச மாதிரி வாழுறேன்... அதுதான் என் லைஃப்ல ஹேப்பி மொமண்ட்!' என பதிலளிக்கிறார். நெகிழ்வான அந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு ஏகப்பட்ட லைக்குகள்!

அந்த ரீல்ஸுக்கு சொந்தக்காரரைக் கண்டுபிடித்தோம். அவருடைய புரொபைல் முழுக்கவும் இதுமாதிரியான வீடியோக்கள்தான்! தேடித்தேடி மனிதர்கள் முகங்களில் சந்தோஷத்தைப் பார்த்து ரசிக்கிற பிரவீனை ரீல்ஸ் பட்டாளம் பகுதிக்காகச் சந்தித்துப் பேசினோம்.
‘‘எனக்கு வைல்டு லைஃப் போட்டோகிராபி ரொம்பப் பிடிக்கும். அதுக்காகத்தான் இன்ஸ்டாகிராம் பேஜ் ஆரம்பிச்சேன். விஸ்காம் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா, குடும்பச் சூழல் காரணமா டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் அது சம்பந்தமாகவே வேலைக்கும் போயிட்டேன். ஆனாலும், போட்டோகிராபி மீதிருந்த ஆர்வம் மட்டும் குறையவே இல்ல.
ஒரு போட்டோகிராபி நிறுவனத்துல இன்டர்ன்ஷிப் மாதிரி அங்கேயே இருந்து ஈவன்ட் போட்டோகிராபி முழுக்கக் கத்துக்கலாம்னு ஆசைப்பட்டு அதுக்காக இன்டர்வியூவுக்காகப் போயிருந்தேன். ஐந்து வருஷத்துக்கு ஒப்பந்தம், 3,000 ரூபாய்தான் சம்பளம்னு சொன்னாங்க. வேண்டாம்னு வந்துட்டேன். அந்த நிறுவனத்துல சேர்ந்துட்டா நிறைய கத்துக்கலாம்னு ரொம்ப ஆசைப்பட்டுட்டு இருந்தேன். அது இல்லைன்னதும் ரொம்ப கஷ்டமாகிடுச்சு.

அதையே நினைச்சிட்டு வண்டியில் வந்துட்டிருந்தேன். அப்ப சிக்னலில் ஒரு அம்மா காசு கேட்டாங்க. என்கிட்ட இருந்த ஐந்து ரூபாயைக் கொடுத்தேன். உடனே என் தலையில் கை வச்சு ஆசீர்வாதம் பண்ணினாங்க. அதுவரைக்கும் எதையோ இழந்த மாதிரி இருந்த எனக்கு அவங்க முகத்துல பார்த்த அந்த சந்தோஷம் ஏதோ பண்ணுச்சு. `Insta360' கோப்ரோ கேமரா வாங்கினேன். முகம் தெரியாதவங்க முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கிறதே தனி ஃபீல். 100-க்கு 80 பேர் ஏதோ ஒருவிதக் கவலையில்தான் இருக்காங்க. அவங்களுக்கும் நம்மளால முடிஞ்ச சந்தோஷத்தைப் பகிர்ந்தளிக்கலாம்னு முடிவு பண்ணினேன். ‘என் பேஜ் பார்க்கிறவங்க சிரிக்கணும், அதுதான் என் இலக்கு’ன்னு தீர்மானம் பண்ணினேன். ரோட்டுல நான் பார்க்குற சின்னச் சின்னப் பசங்களுக்கு சாக்லேட் கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படியே படிப்படியா ஒவ்வொன்னா கொடுக்க ஆரம்பிச்சேன். கொடுக்கும்போது அவங்ககிட்ட உங்களை வீடியோ எடுத்துக்கலாமான்னு பர்மிஷன் கேட்டுட்டுத்தான் அந்த வீடியோவை போஸ்ட் பண்ணுவேன். வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னா அது எத்தனை மணி நேர ஃபுட்டேஜா இருந்தாலும் டெலிட் பண்ணிடுவேன்.
என் நண்பர் ஒருவர் உதவி பண்ணி நோட்டு, பேனா, பென்சில்னு வாங்கி வச்சிருக்கேன். பார்க்கிற பசங்களுக்கு அதைக் கொடுத்துட்டு இருக்கேன். ஏதோ ஒரு வகையில் அந்த நோட்டும் பேனாவும் அவங்க படிக்கிறதுக்குத் தூண்டும்னு நம்புறேன். அதே மாதிரி, ரோட்டுல அடிபட்டு ஒரு நாய் இறந்ததைப் பார்த்தேன். அது என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. அதுல இருந்து ரோட்டுல நாய்கள் அடிபட்டுடக் கூடாதுன்னு ரோப் கட்ட ஆரம்பிச்சேன். அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கவும் ஆரம்பிச்சேன். எனக்கு நாய்கள்னாலே பயம். ஆனா, பழகப்பழக அவங்களை நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். இப்ப அவங்களுக்கு விடாம உதவி பண்ணிட்டிருக்கேன்’’ என்றவர், தொடர்ந்து பேசினார்.

‘‘ஆட்டோ ஓட்டுற ஒரு அண்ணன்கிட்ட, `நீங்க சாப்பிட்டீங்களா?'ன்னு ஒரு வார்த்தை கேட்டுப் பாருங்க. அவரால அடுத்து எதுவுமே பேச முடியாது. புன்னகையை மட்டுமே பரிசா கொடுப்பார். அவர் முகத்துல அந்த சந்தோஷத்தை நேரடியா நீங்க பார்க்கும்போது நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியும். மனுஷங்க முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கும்போது, வேற ஒரு உலகத்துக்குப் போகிற மாதிரி இருக்கும்’’ என்றவரிடம் நெகட்டிவ் கமெண்ட்ஸ் குறித்துக் கேட்டோம்.
‘‘நான் ஃபேமஸ் ஆகுறதுக்காக இதெல்லாம் பண்ண நினைச்சிருந்தா கண்டிப்பா என் முகத்தைக் காட்டிப் பண்ணியிருப்பேன். என் நோக்கம் அது கிடையாது. நான் துப்புரவுத் தொழிலாளர்களை அதிகம் கவர் பண்ணுவேன். அவங்களுக்கு ஜூஸ், சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன். அதையெல்லாம் ஒருத்தர் கிண்டல் பண்ணி வீடியோ போட்டிருந்தாங்க. அது கொஞ்சம் காயப்படுத்துச்சு. என்னுடைய மாச சம்பளத்துல வீட்டுக்குக் கொடுத்தது போக மீதமிருக்கிற பணத்துல, என் நண்பர்கள் உதவியில்தான் நான் மத்தவங்களுக்கு உதவுறேன். என்கிட்ட இருக்கிற பணத்துல என்னால என்ன முடியுமோ அத வாங்கிக் கொடுக்கிறேன்’’ என்றவரிடம், முகம் தெரியாத நபர்களை வரைந்து அவர்களுக்கு சர்ப்ரைஸாகக் கொடுத்து அவர் பதிவிட்டிருந்த வீடியோ குறித்துக் கேட்கவும், புன்னகைக்கிறார்.

‘‘எனக்கு கிரியேட்டிவ் ஆக வீடியோ எடுக்கப் பிடிக்கும். ஒருமுறை பீச்ல உட்கார்ந்து சும்மா எதையோ யோசிச்சிட்டிருந்தேன். ஒரு பையன் வந்து, `அண்ணா உங்களை வரைஞ்சிருக்கேன்'னு என் படத்தைக் காட்டினான். ‘நாம பலருக்கு சர்ப்ரைஸ் பண்ணியிருக்கோம்... யார்றா இவன் நமக்கே சர்ப்ரைஸ் கொடுத்துட்டான்’னு இருந்துச்சு. அந்தப் பையன்கிட்ட விசாரிச்சப்ப அவனுக்கு வரைய ரொம்பப் பிடிக்கும்னு தெரிஞ்சது. குடும்பச் சூழல் காரணமா சொந்த ஊரை விட்டுட்டு சென்னைக்கு வேலைக்கு வந்திருக்கான். அவன் தூரமா நின்னு ஒருத்தரை வரைஞ்சிடுறான். ஆனா, அவங்ககிட்ட போய் அதைக் காட்டுறதுல அவனுக்குத் தயக்கம் இருந்துச்சு. நான் போகிற இடங்களுக்கு அவனையும் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சேன். அப்படித்தான் ஒருமுறை ஹேப்பி ஸ்ட்ரீட்டிற்கு அவனைக் கூட்டிட்டுப் போனேன். அங்க அவன் வரைஞ்ச ஓவியங்களால பல பேர் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்க முடிஞ்சது. அன்னைக்கு முழுக்கவும் அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான். என்கிட்ட, `உங்களை நான் வரையாம இருந்திருந்தா என் வாழ்க்கை எப்படியோ போயிருக்கும்'னு சொன்னான். இப்ப அவன் ரொம்பவே ஹேப்பியா இருக்கான்’’ என்றவரிடம் அடுத்தகட்டத் திட்டம் குறித்துக் கேட்டோம்.
‘‘ஒரு மாசம் தமிழ்நாடு முழுக்க டிராவல் பண்ணணும்னு பிளான் பண்ணியிருக்கேன். வித்தியாசமான மனுஷங்களைப் பார்த்து, அவங்களுடைய கதைகளைக் கேட்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்காக சம்பளத்துல தனியா பணம் சேர்த்து வைக்க ஆரம்பிச்சிருக்கேன். சீக்கிரமே அந்த ஆசையை நிறைவேத்திக்குவேன்’’ எனப் புன்னகைக்கிறார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!
***
அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?
நிறைய கொலாபரேஷன் மெசேஜ் வந்திருக்கு. நான் எதையும் அக்செப்ட் பண்ணினதில்லை. இப்போதைக்கு கொலாபரேஷனில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை!