
நேஷனல் பிராண்ட்ஸ்கூட கொலாபரேஷன் பண்ணியிருக்கேன். அதுலேயும் செட் ஆகாத புராடக்ட்டை தேர்ந்தெடுக்கிறதில்லை.
இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!
`இனிமேல் தினமும் வீட்டில் நடக்கும் நாடகம் இனித்திடுமே' என `சாமி’ படத்தில் வருகிற `இதுதானா' பாடலில் த்ரிஷா உருகி நடித்திருப்பார். நம்ம வீட்டுல நடக்குற நாடகத்தை அப்படியே கொஞ்சம் காமெடி கலந்து ஸ்கிரிப்ட் ஆக்கி ரீல்ஸாகப் பதிவிட்டா எப்படி இருக்கும்? யோசிக்கவே செம காமெடியா இருக்குதானே! அந்த காமெடிக்குள்ளே கருத்தையும் நாசூக்காக சொன்னா சட்டுனு மண்டையில் பல்ப் எரியும்தானே! அப்படி, `அம்மா - மகள், மாமியார் - மருமகள், அம்மா - மகன்' என குடும்பத்திற்குள் நடக்கிற விஷயங்களைத் தன் கற்பனையுடன் சேர்த்து ரீல்ஸ் ஆகப் பதிவிட்டுக் கலக்கிக்கொண்டிருக்கிறார், ஆர்.ஜே சிந்து.

ஆர்.ஜே, ஆங்கர், நடிகை எனப் பன்முகம் கொண்டவர். இன்ஸ்டாகிராமில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். ‘‘பாப்பா தூங்கிட்டிருக்கிறா... அவ முழிக்கிறதுக்குள்ள பேட்டியை முடிச்சிடலாம்’’ என்றவாறு பேசத் தொடங்கினார்.
‘‘எனக்குப் பிடிச்ச பாட்டு, டயலாக்னு எதையாவது லிப் சிங்க் பண்ணி இன்ஸ்டாகிராம்ல போஸ்ட் பண்ணிட்டிருந்தேன். நமக்குன்னு ஏதாவது தனித்துவம் வேணும்னு தோணுச்சு. அப்பதான் என் அம்மா என்கிட்ட சொல்ற விஷயங்களை சும்மா ஃபன் கலந்து ஸ்கிரிப்ட் ஆக ரெடி பண்ணி ரீல்ஸா போஸ்ட் பண்ணினேன். அந்த ரீல்ஸ் வைரலாச்சு. அப்பதான் ‘இந்த ரூட் நமக்கு ஒர்க்கவுட் ஆகுது... இதையே தொடர்ந்து பண்ணலாம்’னு முடிவு பண்ணினேன். நான் சொல்ல நினைக்கிற கன்டென்ட்டை ஷார்ட் ஆக சொல்றதுக்கு ரேடியோவில் இருக்கிறது உதவியா இருக்குதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, ரேடியோவில் பாட்டு, விளம்பரங்களுக்கு இடையில் ஒரு நிமிடம்தான் நாம பேசுவோம். அந்த ஒரு நிமிடத்தில் நாம சொல்ல வர்ற விஷயத்தைச் சரியா சொல்லிடணும். அப்படிச் சொல்லிச் சொல்லிப் பழகினதுதான் இப்ப இன்ஸ்டாகிராமில் எனக்கு உதவுது.
அம்மாவுக்கும் எனக்கும் நடக்குற கான்வர்சேஷன் வச்சு நிறைய ஸ்கிரிப்ட் எழுதினேன். அதுல கற்பனையையும் கொஞ்சம் சேர்த்து காமெடியா ரெடி பண்ணினேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே பெண்களின் எம்பவர்மென்ட்டிற்காகக் குரல் கொடுக்கணுங்கிற ஆசை இருந்துச்சு. ஆணும் பெண்ணும் சமம்தான். அவங்களை சமமா பார்க்கணும், சமமா நடத்தணுங்கிறது என் எண்ணம். எங்க ஊருல அம்மா அப்பாவுக்கு பயந்து இன்னமும் முடி கூட வெட்டிக்காம இருக்கிற பொண்ணுங்களை நான் பார்த்தி ருக்கேன். நம்மளால அவங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்னு யோசிச்சப்ப அந்த விஷயங்களை வீடியோவா போடலாமேன்னு தோணுச்சு. என் வீடியோ பார்க்கி றவங்க அவங்க பொண்ணுகிட்டயோ, மருமகள் கிட்டயோ அப்படி நடந்திருந்தா அவங்களுக்கு சுருக்குன்னு நிச்சயம் இருக்கும். ஆண்கள் பார்க்கி றாங்கன்னா அவங்க மனைவிக்கோ, தங்கச்சிக்கோ இப்படி நடக்குதுன்னா, `நம்ம வீட்டுலேயும் இப்படித்தானே நடக்குது'ன்னு தோணும். அது ஏதோ ஒரு வகையில் அவங்களுக்குள்ள மாற்றத்தை ஏற்படுத்தும்னு நம்புறேன்’’ என்றவரிடம் `மாமியார் - மருமகள் கான்செப்ட்' குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.
‘‘பலரும் நான் சொல்ற எல்லாமே என் வாழ்க்கையில் நடந்ததா நினைக்கிறாங்க. அப்படியில்லை. நாம வாழ்க்கையில் பலரைச் சந்திப்போம். அப்படிச் சந்திக்கிற மனிதர்கள் சொல்ற விஷயங்களைத்தான் என் கான் செப்ட்டிற்குப் பயன்படுத்துறேன். அப்படித்தான் மாமியார் - மருமகள் கான்செப்ட் பண்ணினேன். அந்த வீடியோவிற்கு சிலர், `இப்பவும் இந்த மாதிரியெல்லாம் நடக்குமா?'ன்னு கமெண்ட் பண்ணியிருந்தாங்க. அவங்களுக்கு, `எனக்கே நடக்கு துங்க'ன்னு சிலர் பதில் கமெண்ட் கொடுத்திருந்தாங்க. அப்பதான் நாம சரியான பாதையில்தான் பயணிக்கிறோம்னு தோணுச்சு. எனக்கும் நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருக்கு. ஆரம்பத்தில் அதெல்லாம் கஷ்டமாகத்தான் இருந்துச்சு. `குண்டு'ன்னு சொல்லுவாங்க.. ஆமா, நான் குண்டா இருக்கேன். நான் எப்படி இருக்கணுங்கிறதை நான்தானே தீர்மானிக்கணும்? அதனால அப்படி கமெண்ட் பண்ணுறவங்களுக்கு நானே ரிப்ளை பண்ணிடுவேன். மோசமா கமெண்ட் பண்ணுனாங்கன்னா அவங்களை பிளாக் பண்ணி ரிப்போர்ட் பண்ணிடுவேன். என்கிட்ட உள்ள ஒரு நல்ல பழக்கம் எல்லா கமெண்ட்ஸும் படிச்சு எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிடுறது. பிசியா இருந்தாலும் அதை கண்டிப்பா பண்ணிடுவேன்.
சமூகத்தில் பொதுவாக பெண்கள் எதிர்கொள்கிற பிரச்னைகள் குறித்துப் பேசுறதனால ஒவ்வொரு வீடியோவுக்கும் ரொம்பவே மெனக்கெடுவேன். நானே வீடியோ எடுத்து எடிட்டும் பண்ணிடுவேன். என் கணவர் ரொம்பவே சைலன்ட் கேரக்டர். நான் எழுதுற கான்செப்ட்டை அவர்கிட்ட காட்டுவேன். அவர் ஸ்கிரிப்ட் பார்த்துட்டு லைட்டா ஸ்மைல் பண்ணிட்டாருன்னாலே இந்த ஸ்கிரிப்ட் ஹிட்டுப்பான்னு எனக்குள்ளேயே சொல்லிப்பேன். அம்மா - பையனுக்கு இடையில் நிறைய விஷயங்கள் நடக்கும். அத வச்சு `அம்மா - பையன்' கான்செப்ட் பண்ண முடிவெடுத்தேன். அதுக்கும் நாமளே பையன் கெட்டப் போட்டு நடிச்சிடலாம்னு முடிவு பண்ணி அதுக்காக விக் எல்லாம் தேடி அலைஞ்சு வாங்கினேன். அந்த வீடியோவுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அடுத்தது அப்பா கேரக்டர் கொண்டு வரலாம்னு இருக்கேன்’’ என்றவரிடம் வைரல் வீடியோ குறித்துக் கேட்டோம்.
‘‘பொதுவா அம்மா நம்மை ஏதாவது குறை சொல்லிட்டேதான் இருப்பாங்க. அவங்க நம்முடைய ரெஸ்யூம் எழுதினா எப்படி இருக்கும்னு ஒரு வீடியோ பண்ணினேன். அது பல மில்லியன் வியூஸ் போச்சு. அந்த வீடியோவை சன் நியூஸ்ல எல்லாம் போட்டாங்க. அதைப் பார்த்துட்டு என் அப்பா, அம்மாவுக்கு அனுப்பி வச்சேன். என் அப்பா அந்த வீடியோவைப் பார்த்துட்டு, `நான் நியூஸ்ல பார்த்தேன்மா... நீயா அது? எனக்கு அடையாளமே தெரியல'ன்னு சொன்னாங்க. `சூப்பர் டாடி நீ'ன்னு சிரிச்சிட்டேன்’’ என்றவர் மறக்க முடியாத அனுபவங்களையும் சொன்னார்.
‘‘இன்ஸ்டாகிராம் மூலமா இப்ப என்னை பலருக்கும் தெரிய ஆரம்பிச்சிருக்கு. பெங்களூரில் ஒரு ஏரியாவுக்கு ஷாப்பிங்கிற்காகப் போயிருந்தேன். அங்க என்னைப் பார்த்துட்டு சில காலேஜ் பொண்ணுங்க வந்து, `உங்க வீடியோஸ் பார்க்கிறோம் மேம்... ரொம்ப நல்லா இருக்கு'ன்னு சொன்னாங்க. அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இன்னைக்குக்கூட பக்கத்துல உள்ள கடைக்குப் போயிருந்தேன். அங்க ஒருத்தர் `நீங்கதானே குமாரு அம்மா'ன்னு கேட்டாங்க. இதெல்லாமே புது அனுபவமாகத்தான் இருக்கு’’ என்றவர் பிராண்ட் கொலாபரேஷன் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
‘‘நேஷனல் பிராண்ட்ஸ்கூட கொலாபரேஷன் பண்ணியிருக்கேன். அதுலேயும் செட் ஆகாத புராடக்ட்டை தேர்ந்தெடுக்கிறதில்லை. ஒருமுறை ஹேர் கலர் புராடக்ட் கொலாபரேஷனுக்கு வந்தாங்க. ஹேர் கலர் பண்ண மாட்டேன்னு நோ சொல்லிட்டேன். பர்சனலாக செட் ஆகாத புராடக்ட்டிற்கு தயங்காம முடியாதுன்னு சொல்லிடுவேன்’’ என்றவரிடம் சினிமா ஆசை குறித்துக் கேட்டோம்.
“ `செக்கச்சிவந்த வானம்' படத்தில் நடிச்சிருந்தேன். தமிழில் இதுவரைக்கும் ரெண்டு படங்கள்தான் பண்ணியிருக்கேன். சில வாய்ப்புகள் வந்துச்சு. நான் ரொம்ப யோசிச்சுதான் எல்லா முடிவையும் எடுப்பேன். அதனால, சில வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கல. எனக்குப் பிடிச்ச மாதிரி நல்ல கதாபாத்திரம் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன்’’ எனப் புன்னகைத்தார். சொல்லிவைத்தாற்போல் அவர் பேசி முடிக்கவும் அவரின் மகளும் விழித்துக் கொண்டார்.
அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?
ரம்மி மாதிரியான ஆப்களை புரொமோட் பண்ணுறதுல எனக்கு உடன்பாடில்லைங்க!