அலசல்
Published:Updated:

திரைத்துறையை விஷம பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொள்கிறதா பா.ஜ.க?

நேற்று காஷ்மீர் ஃபைல்ஸ்... இன்று கேரளா ஸ்டோரி...
பிரீமியம் ஸ்டோரி
News
நேற்று காஷ்மீர் ஃபைல்ஸ்... இன்று கேரளா ஸ்டோரி...

நேற்று காஷ்மீர் ஃபைல்ஸ்... இன்று கேரளா ஸ்டோரி...

`தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்தான் இந்திய அளவில் இப்போதைய ஹாட் டாபிக்! `கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை, இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கிறார்கள்’ என்பதே இந்தப் படத்தின் கதை. ‘இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில், உண்மைக்குப் புறம்பாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது’ எனப் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, போராடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், நாட்டின் பிரதமர் மோடியோ, `தி கேரளா ஸ்டோரி திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியிருக்கிறது. சமூகத்தில் புரையோடும் ஒரு புதுவித பயங்கரவாதத்தை, ஆயுதங்களைத் தாண்டி இப்போது புதிய முகம் உருவாகியிருப்பதைத்தான் இந்தப் படம் காட்டியிருக்கிறது’ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

இது போன்ற இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தூண்டும் திரைப்படங்கள் வெளியாவதும், அதற்கு மோடி ஆதரவு பிரசாரம் செய்வதும் இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த ஆண்டு `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெளியானபோதும், எதிர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார் மோடி. மேலும், ``இது ஒரு நல்ல படம். உண்மையைச் சரியானவிதத்தில் சொல்லியிருக்கிறது. மக்கள் அனைவரும் அதைப் பார்க்க வேண்டும். `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற திரைப்படங்கள் இன்னும் நிறைய எடுக்கப்பட வேண்டும்” எனப் படத்துக்கு ஃப்ரீ புரொமோஷனும் கொடுத்தார். அந்த வரிசையில், அடுத்தடுத்துப் பல்வேறு சர்ச்சைக்குரிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. `இதெல்லாம் பா.ஜ.க-வின் திட்டமிடப்பட்ட அஜண்டா, தனது கொள்கையை பரப்பும் ஊடகமாகத் திரைத்துறையை கையாண்டுவருகிறது’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் எதிர்த்தரப்பினர்.

நேற்று காஷ்மீர் ஃபைல்ஸ்... இன்று கேரளா ஸ்டோரி...
நேற்று காஷ்மீர் ஃபைல்ஸ்... இன்று கேரளா ஸ்டோரி...

இது குறித்து இயக்குநர் அமீரிடம் பேசினோம். ``நூறாண்டுக்கால இந்திய சினிமாவில் இல்லாத இது போன்ற இஸ்லாமிய வெறுப்புத் திரைப்படங்கள் இப்போது வருவதற்குக் காரணம், அது ஆளும் பா.ஜ.க அரசின் நெக்ஸ்ட் அஜண்டா என்பதே. எல்லா வகையிலும் இந்த தேசத்தைக் கபளீகரம் செய்ய நினைக்கும் பா.ஜ.க., பாடத்திட்டங்கள் முதல் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், ஆன்மிக நம்பிக்கைகள், விளையாட்டுகள் (கிரிக்கெட்) என எல்லாவற்றுக்குள்ளும் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்துவருகிறது. கடைசியாக இப்போது திரைத்துறையையும் கையிலெடுத்திருக்கிறது. அதை மூன்றுவிதமாகப் பிரித்து, தனது பிரசாரங்களை மேற்கொள்கிறது.

குறிப்பாக, `தி கேரளா ஸ்டோரி’, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ` தி ஃபேமிலி மேன்’ போன்ற திரைப்படங்கள் மூலமாக இஸ்லாமிய வெறுப்பை உருவாக்குவது, `தி ஆக்ஸிடன்டல் பிரைம் மினிஸ்டர்’, `எமர்ஜென்சி’, `தி தாஷ்கன்ட் ஃபைல்ஸ்’, `காந்தி கோட்சே’ போன்ற திரைப்படங்கள் மூலம் காங்கிரஸ் தலைவர்களைக் குறைத்து மதிப்பிட்டு, கொச்சைப்படுத்தி, காங்கிரஸால் நாடு வீழ்ச்சி அடைந்தது போன்ற பிம்பத்தைக் கட்டமைப்பது, கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் `ஆதிபுருஷ்’, `ஆர்.ஆர்.ஆர்’, `ராம் சேது,’ `ஹிந்துத்வா’, `பிரம்மாஸ்திரா’ போன்ற படங்களையும், பயோபிக் எனும் பெயரில் `ஸ்வதந்தர வீர் சாவர்க்கர்’, `டாக்டர் ஹெட்கேவர்’, `தாக்கரே’, `உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ போன்ற திரைப்படங்கள் மூலம் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டுக் கருத்துகளைப் புகுத்துவது போன்ற மூன்று அஜண்டாவை வைத்துத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள் என்பதைத்தான் `தி கேரளா ஸ்டோரி’, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற திரைப்படங்கள் காட்டுகின்றன. இது போன்ற படங்களுக்கு பிரதமரே நேரடியாக வாழ்த்து சொல்வது, ஆதரவாகப் பேசுவது, வரிவிலக்கு, விடுமுறை கொடுப்பதெல்லாம் இதைத்தான் காட்டுகிறது” என மத்திய அரசைக் குற்றம்சாட்டினார்.

அமீர், சுபகுணராஜன், பேரரசு
அமீர், சுபகுணராஜன், பேரரசு

மேலும், ``நார்த் இந்தியாவுக்கு `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போலத்தான், சவுத் இந்தியாவுக்கு `கேரளா ஸ்டோரி.’ ஆனால், அந்தப் படம் தமிழ்நாட்டில் காவல்துறை பாதுகாப்போடு திரையிடப்படுகிறது. கேரள முதல்வருக்கு இருக்கிற பொறுப்புணர்வு ஏன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இல்லை என்பதுதான் எனக்கு வருத்தமளிக்கிறது. இதற்கு முன்பாக `டேம் 999’ போன்ற படங்களெல்லாம் தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. அரசு நினைத்திருந்தால் `தி கேரளா ஸ்டோரி’ படத்தையும் ஆய்வுசெய்து, சர்ச்சைக்குரிய கருத்துகள் இருக்கின்றனவா என விவாதித்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், தமிழ்நாடு அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டது. அண்டை மாநிலம் கேரளாவோடு நட்புறவில் இருக்கும் தமிழ்நாடு இதை எப்படி வரவேற்கிறது என்பது தெரியவில்லை. வரவேற்பதுபோலத்தான் தங்களுடைய நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவித்திருக் கிறார்கள். ‘ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை; நாங்கள் நடுநிலை’ என்று சொல்வதே ஒரு சார்புதான். அந்த வெளியீட்டுக்கு மறைமுக ஆதரவுதான் நடுநிலை! கண்ணுக்கு முன்னால் நடக்கும் தவறைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்க்கிறேன் என்பதே அதை அனுமதிப்பதுதான்” என மாநில அரசின்மீதும் வருத்தம் தெரிவித்தார் அமீர்.

அதேபோல மூத்த எழுத்தாளர் சுபகுணராஜனும், `இது போன்ற படங்களின் பின்னணியில் 100% பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-தான் இருக்கின்றன’ எனக் குற்றம்சாட்டினார். இது குறித்து மேலும் நம்மிடம் பேசியபோது, ``தேசியவாதம் என்பது ஒரு நாட்டின், மக்களின் மீதான பற்று என்பதை மாற்றி, மற்றொரு நாட்டின், இன்னொரு சமூகத்தின்மீதான வெறுப்பு என்பதாக மாற்றப்பட்டுவருகிறது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிப்படை சித்தாந்தமே, ‘ஓர் எதிரியைக் கட்டமைத்து, அவர்களை நாட்டுக்கு விரோதமானவர்களாகக் காட்டி, அவர்களைத் தாங்கள் எதிர்த்து போராடுவதுபோலவே தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்க வேண்டும்’ என்பதுதான். அப்படித்தான் இங்கு இஸ்லாமியர்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது.

மோடி
மோடி

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் காலம் முழுக்கப் பழகிய பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் தீவைத்துக் கொல்வதுபோலக் காட்டிருப்பார்கள். அதேபோல, இப்போது ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில் 32,000 பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்ததுபோலக் காட்டிருக்கிறார்கள். இப்படி ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான செய்திகளை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படமாக எடுத்தது போன்ற போலியான பிம்பத்தை மக்களிடம் விதைத்து, உளவியல்ரீதியாக இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, திரைத்துறையில் இஸ்லாமிய வெறுப்பை கான்டம்பரரி (நிகழ்கால) மற்றும் ஹிஸ்டாரிகல் (வரலாற்று) அடிப்படையில் இரண்டு வகையாகச் செய்கிறார்கள். மன்னர் வரலாற்றுக் கதைகள் எனும் பெயரில், (`பத்மாவத்’, `பானிபட்’, `சாம்ராட் பிரித்விராஜ்’) இஸ்லாமிய மன்னர்களைத் தீயவர்களாகக் காட்டியும், இப்போதிருக்கும் நிகழ்காலத்தின் அடிப்படையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ என்றும் எடுக்கிறார்கள். ஒருபுறம் ‘பாரதம்’ என்ற இந்துப் பாரம்பர்யத்தை ஹைலைட் செய்யும் ஹார்டுகோர் படங்களுக்கு மத்தியில், இன்னொருபுறம் ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ போன்ற சாஃப்ட்கோர் படங்களிலும் இந்துத்துவாவை மறைமுகமாகப் புகுத்திவருகின்றனர்” என்கிறார் சுபகுணராஜன்.

இந்த பகிரங்கக் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க-வின் கருத்தை அறிய, அந்தக் கட்சியின் மாநில நிர்வாகியும், திரைப்பட இயக்குநருமான பேரரசுவிடம் பேசினோம். ``இது போன்ற திரைப்படங்களின் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது என்று கூறுவது முற்றிலும் தவறான கருத்து. மதமாற்றம் என்பதைத் தொழிலாகவே வைத்து, வற்புறுத்தி இந்துக்களை மதம் மாற்றிக்கொண்டிருக்கும் கும்பல்கள் இருக்கின்றன என்பது உண்மை. அது பற்றி, அவர்களைப் பற்றிப் படம் எடுக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள், நம்பாதீர்கள், அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள், அவர்களோடு சேர்ந்து தங்கினால் மதம் மாற்றிவிடுவார்கள் என்பதுபோல ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தவறாகச் சித்திரித்துப் படம் எடுப்பது கண்டிக்கத்தக்கது. இதையெல்லாம் சென்சார் போர்டு கவனமாகப் பார்க்க வேண்டும். இந்திய சுதந்திரத்துக்காக இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தவர்களும்தான் போராடினார்கள். பாகிஸ்தான் பிரிந்து சென்று நம் எதிரி நாடாக மாறிவிட்டது என்றால், அங்கிருப்பவர்களை பாகிஸ்தானியர்களாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர முஸ்லிம்களாகப் பார்த்து, இங்கிருக்கும் முஸ்லிம்களையும் எதிரிகளாகப் பார்க்கக் கூடாது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. நம் நாட்டில் இருக்கும் அனைவரையும் இந்தியர்களாகத்தான் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி அந்தப் படத்தை பார்த்தாரா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே, அவர் குறித்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாது” என்றார்.

திராவிட இயக்கத்தினர், கம்யூனிஸ்ட்டுகள் எல்லோரும்தான் தங்கள் சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடிக்கும் படங்களை எடுத்திருக்கிறார்கள். அந்த உரிமை பா.ஜ.க-வினருக்கும் உண்டு. ஆனால், எதிர்த்தரப்பினரை இழிவுபடுத்தும், அவதூறு செய்யும் படங்களை எடுப்பதும், அதை பிரதமரே நியாயப்படுத்துவதும்தான் கவலையளிக்கிறது!