மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 'தி கேரளா ஸ்டோரி' என்ற படம் மே 5-ம் தேதி (இன்று) வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. அந்தப் படத்தின் டிரெய்லரே கடும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அதில் இந்து, கிறிஸ்தவ பெண்களைக் காதலிப்பதாக நடித்து, திருமணம் செய்து சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்த்து விடுவதாகவும், கேரளாவில் சுமார் 32,000 பெண்களை இப்படிக் காணவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 'லவ் ஜிகாத்' என்பதாக பிரசாரம் செய்து, அதை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தப் படத்துக்குத் தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்ட நிலையில் படத்துக்குத் தடை விதிக்காமல் சில நிபந்தனைகளை மட்டுமே கோர்ட் விதித்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் 'காம்ரேட் ப்ரம் கேரளா' என்ற ட்விட்டர் பக்கத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் நடத்தப்பட்ட வீடியோ ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இது மற்றொரு 'கேரளா ஸ்டோரி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை ரீ ட்வீட் செய்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "மனிதக்குலத்தின் அன்பு நிபந்தனையற்றதாகவும் சாந்தி ஏற்படுத்துவதுமாக இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் முஸ்லிம் பள்ளிவாசலில் வைத்து இந்து முறைப்படி நடந்த அந்தத் திருமணத்தின் பின்னணி மிகவும் நெகிழ்ச்சியானது. ஆலப்புழாவைச் சேர்ந்த சரத் சசி - அஞ்சு அசோக் ஆகியோரது திருமண வீடியோதான் அது.
அஞ்சு அசோக்கின் பெற்றோர் ஏழ்மை நிலையிலிருந்ததால் மகளின் திருமணத்தை நடத்த பணம் இல்லாமல் தவித்தனர். இதையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் உதவி கேட்டனர். பள்ளிவாசல் கமிட்டியினர் அவர்களுக்கு உதவ முடிவு செய்து 10 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் உதவியாக வழங்கினர். மேலும் பள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம் நடத்தவும் அனுமதித்தனர். மேலும், அந்தத் திருமணத்திற்கு வந்திருந்த ஆயிரம் பேருக்குச் சைவ உணவும் பரிமாறப்பட்டது. இப்போது அந்த வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டது ட்விட்டரில் கவனம் ஈர்த்துள்ளது.