`சைபர் தமிழா', `சுஹைல் விலாகர்' (Vlogger) என்ற பெயரில் யூடியூப் சேனல்களை நடத்தி வருபவர் சுஹைல். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டிற்குத் திருடன் நுழைந்ததையடுத்து போலீஸூக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். போலீஸ் திருடனைக் கைது செய்து விசாரித்ததில் அவர்களுடைய சேனலைத் தொடர்ந்து பார்த்து வந்த அவர்களுடைய சப்ஸ்கிரைபர் அவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தத் தகவல் வெளிவந்ததும் பலரும் இவர் ஹோம் டூர் வீடியோ போட்டதுதான் இதற்குக் காரணம் என கமென்ட் செய்தனர். இது குறித்துத் தெரிந்துகொள்ள சுஹைலிடம் பேசினோம்.

"அந்த சம்பவம் குறித்து நான் எதுவும் பேசுறதா இல்லைங்க. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம்... அவங்க பார்த்துப்பாங்க..." என்றவரிடம் "ஹோம் டூர்தான் இதுக்கு காரணம்னு சொல்றதை எப்படிப் பார்க்குறீங்க?" எனக் கேட்டோம்.
"நாங்க ஹோம் டூர் போட்டதுக்கான அடிப்படைக் காரணமே மிடில் கிளாஸ் மக்களும் பட்ஜெட் ஃப்ரெண்ட்லியா இப்படி ஒரு வீடு கட்ட முடியும் என்கிற நல்ல நோக்கத்தில்தானே தவிர எங்ககிட்ட இது இருக்குன்னு பெருமையா சொல்லிக்க இல்லை. நாங்க அடிமட்டத்துல இருந்து படிப்படியா உழைச்சு சம்பாதிச்சு மேலே வந்தவங்க. எடுத்ததும் சுலபமா இதெல்லாம் எங்களுக்குக் கிடைக்கல. இந்த இடத்துக்கு வர்றதுக்காக நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்னு எங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

நாங்க எந்த இடத்திலும் எங்க வீட்டோட லொக்கோஷனைப் பகிர்ந்துகிட்டது கிடையாது. உள்ளூர்ல இருக்கிறவங்களுக்கே நாங்க எங்க இருக்கோம்னு தெரியாது. எதெல்லாம் பிரைவேட் ஆக வைச்சிக்கணுமோ அதெல்லாம் நாங்க ரொம்ப சரியாகவே பிரைவேட்டாகத்தான் வச்சிருந்தோம். இந்தச் சம்பவம் நடந்ததுக்கு ஹோம் டூர் வீடியோ போட்டது காரணமில்லைங்கிறதுதான் உண்மை!" என்றார்.