என் பெரியக்கா தாமரைச்செல்வியின் கல்யாணத்தின் போதுதான் அப்பா ரேடியோ வாங்கினார். ரீசா கம்பெனி தயாரிப்பான அது, சூடான பின்னால்தான் பாடும் வால்வு ரேடியோ. என் அம்மாவின் ஊரான பெருங்களூரில்தான் கல்யாணம். (எழுத்தாளர் அகிலனின் ஊர் அது) அந்த சன்னிதித்தெருவே ரேடியோவை வேடிக்கை பார்த்தது. அக்காவுக்கு பி.சுசிலா என்றால் இஷ்டம். எனக்கு பி.பி.எஸ் பித்து. தம்பிக்கு சிவாஜி பாட்டு. அப்பாவுக்குச் செய்திகள். இப்படிக் கேட்டவர்க்குக் கேட்டதைக் கொடுத்த கடவுள் அது. எல்லோரையும் சந்தோஷப்படுத்தியபடி, பசங்க கைக்கு எட்டாத உயரத்தில் அந்த ரேடியோ உட்கார்ந்திருந்த காட்சியை ஒருநாளும் மறக்கமுடியாது.
கனவில் கவிதை வந்த என் கல்லூரி நாள்களில் “வா” என அழைத்தது வானொலிதான். அதுவும் திருச்சி நிலையத்தின் ’இளையபாரதம்’ வாசலில் கோலமிட்டு என் மாதிரி இளைஞர்களின் கவிக்குரலை ஊர் முழுதும் பரப்பியது. என் கவிதை கேட்டு பெரியப்பா வடிவேல் பிள்ளை பாராட்டி எழுதிய அஞ்சலட்டைதான் எனக்குக் கிடைத்த முதல் மரியாதை. நாடகம் கேட்டபடி என் அம்மா அடுப்படி வேலையை முடித்து முந்தானையில் கைதுடைக்கவும் நாடகம் முடியவும் சரியாக இருக்கும். அதன்பிறகு மெல்ல மெல்ல மர்ஃபி குழந்தையின் விரல் பிடித்து டிரான்ஸ்சிஸ்டர் வந்து சேர்ந்தது. ரேடியோ ஸ்டேஷனே நாங்கள் போகும் இடமெல்லாம் கூடவே வந்ததுமாதிரி இருந்தது அப்போது. உண்மையாகவே அது ரேடியோவின் காலம்.

எங்கோ இருந்து வரும் கண்ணதாசனின் “காலங்களில் அவள் வசந்தம்” கவிதைத் தமிழுக்குக் குரலில் வெண்ணெய் தடவி அனுப்பிவைக்கும் P.B ஶ்ரீனிவாஸை என்னிடம் அழைத்து வந்த மகானுபாவன் யார் என அறிவு தேடிய போதுதான் என் இயற்பியல் பேராசிரியர் சபேசன் மார்க்கோனியைக் கூட்டிவந்தார்.
குக்லியெல்மோ மார்க்கோனி 1874-ல் இத்தாலியில் பிறந்தார். கம்பிகளின்றி நெடுந்தூரம் செய்திக்குறிப்புகளை அனுப்ப மின்காந்த அலைகளைப் பயன்படுத்தலாம் என்பதைத் தன் 20வது வயதில் உணர்ந்தார். 1895-96-ல் இதற்கான கருவியை இயக்கிக் காட்டினார். 1901-ல் “மார்க்கோனி செய்திகள்” அட்லாண்டிக் கடலைக் கம்பியின்றிக் கடந்து சாதனை நிகழ்த்தியது. 1909-ல் ரிபப்ளிக் கப்பல் சந்தித்த பெரும் விபத்தில் கப்பல் மூழ்கியது. ஆனால் “மார்க்கோனி செய்தி” அனுப்பப்பட்டதால் எல்லோரும் காப்பாற்றப்பட்டனர். இந்த ஆண்டு மார்க்கோனிக்கு நோபல் பரிசு கிடைத்தது. அடுத்த ஆண்டே அயர்லாந்திலிருந்து அர்ஜென்டினாவிற்கு 6,000 மைல்கள் கடந்து ரேடியோ செய்தி அனுப்பினார். இவை எல்லாம் புள்ளி, கோடுகளால் அமைந்த மார்ஸ் குறியீடுகள். ஆனால் குரலை ரேடியோ மூலம் அனுப்பும் முறையை 1920களில் தொடங்கினார். தூரத்துக் குரலையும் கேட்கவைத்த ரேடியோ, உலகம் முழுதும் விரைவாகப் பரவியது. அதன்பிறகும் சிற்றலை, நுண்ணலை களிலும் ஆய்வுகள் செய்த மார்க்கோனி 1937-ல் ரோமில் மறைந்தார்.
“குரல் ஒலி” சுமந்த ரேடியோ பதினாறே ஆண்டுகளில் இந்தியா வந்துவிட்டது. 1936 ஜூன் 8-ம் தேதி “ஆல் இண்டியா ரேடியோ” (AIR) உருவாகி தன் ஒலிபரப்பைத் தொடங்கியது. அந்த ஒலி அலை மூன்றே ஆண்டுகளில் 1939-ல் திருச்சிக்கும் வந்துவிட்டது. இதுதான் வானொலி திருச்சிக்கு வந்த கதை. முதல் “ரேடியோ ஸ்டேஷன்” திருச்சி வில்லியம்ஸ் சாலையில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள DCTC பணிமனைக்கு பக்கத்தில் முனீஸ்வரன் கோயிலுக்கு எதிரில் உள்ள கட்டடத்தில் 5 KW MW அலை வரிசையாக இயங்கியது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, இந்தியா முழுமைக்கும் அமைந்த ஆறு வானொலி நிலையங்களில் திருச்சி வானொலி நிலையமும் ஒன்று.

அன்றைய சென்னை ராஜதானியின் முதல் அமைச்சர் ராஜாஜி 1939-ம் வருடம் மே மாதம் 16-ம் தேதி திருச்சி வானொலியின் ஒலிபரப்பைத் தொடங்கிவைத்தார். வானொலி எதற்காக என்பதை ஒரு தத்துவப் பார்வையோடு அன்று பேசினார், “வானொலியால் நாடு முழுவதும் மகிழ்ச்சியைப் பரப்பலாம். மகிழ்ச்சி என்பது உயிருக்கு அடையாளம். மகிழ்ச்சியேதான் உயிராகிறது என்றுகூடச் சொல்லலாம். மகிழ்ச்சியே ஆத்மாவின் அந்தரங்க சொரூபம். உயிர் உள்ளதற்கும் உயிரற்றதற்கும் வித்தியாசம் மகிழ்ச்சியே. உணவுப் பொருள் மட்டும் உயிருக்குப் போதாது. மகிழ்ச்சியும் வேண்டும். உணவு உடலாகிறது. மகிழ்ச்சி மனமாகிறது. மகிழ்ச்சியைப் பரப்ப இந்த வானொலி ஒரு நல்ல இயந்திரமாகும். தமிழர் சார்பாக நன்றி செலுத்துகிறேன்” என்றார் ராஜாஜி.
இந்தியாவில் வானொலி வருவதற்கு முன்பே “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம்” என்று ஆசைப்பட்டவன் பாரதி. அவன் ஆசையை திருச்சி வானொலி தொடக்கத்தில், மதியம் 2.10 முதல் 3.10 வரை, பிறகு மாலை 6.10 முதல் இரவு 9.30 வரை நிகழ்ச்சிகளைத் தந்து நிறைவேற்றியது. இந்திய ஒலிபரப்புத் துறையின் முக்கிய ஆளுமையாகப் பார்க்கப்படுகிற இந்தியாவின் முதல் ஒலிபரப்பு கன்ட்ரோலராகப் பணி செய்த லயோனல் ஃபீல்டனும் வாழ்த்தியிருந்தார். திருச்சி வானொலியின் முதல் நிகழ்ச்சியாக நாதஸ்வரம் இசையை பெரம்பலூர் அங்கப்பப்பிள்ளை வாசித்தார். அடுத்து இசையரங்கில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாடினார்.
சக்தி மிக்க 50 கிலோ வாட் ஒலிபரப்பை அன்றைய முதல்வர் காமராசர் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி தொடங்கிவைத்தார். அடுத்த ஆண்டில்தான் இன்று நாம் பார்க்கும் பாரதிதாசன் சாலையில் உள்ள சொந்தக் கட்டடத்தில் 2-11-1962-ல் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் குடியமர்ந்தது. தலைமை நிலையமும் அதோடு இணைந்த 8 ஸ்டூடியோக்களும் குளத்தூரில் அமைந்துள்ள ஒலி பரப்பியும் முத்துக்குளத்தூரில் அமைந்துள்ள நிகழ்ச்சி அஞ்சல் நிலையமும் இணைந்த ஒன்றுதான் திருச்சி வானொலி நிலையமாகும். இது 100 கிலோ வாட்ஸ் ஒலிபரப்பாக 1-1-1988 முதல் மேம்படுத்தப்பட்டது. நாம் தெரிந்துகொள்ள ஒரு சுவையான தகவலை வானொலி நிலையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 50% மும் நிலப்பரப்பில் 56% மும் திருச்சி வானொலியின் நிகழ்ச்சிகள் சென்றடைவதாக அது பெருமைப்படுகிறது. திருச்சியைச் சுற்றியுள்ள—திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்ட மக்களை (356 லட்சம்) திருச்சி வானொலியின் நிகழ்ச்சிகள் தழுவுகின்றன.

1980-களில் திருச்சி வானொலியில் கால் பதித்த நாள்களை மறக்க முடியாது. அந்த விஸ்தீரணமான கூடம், யாரோ தம்புராவை மீட்டிக்கொண்டே இருப்பதைப்போன்ற அமைதியின் லயம். செய்திப் பலகை முழுதும் கலைஞர்களின் படங்கள். இளையபாரதம் நிகழ்வுக்கு என்னை அழைத்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சீனிவாசராகவன் மற்றும் சீனிவாசனின் சிரித்த முகங்கள். ஒலிப்பதிவுக் கூடத்தின் தூயஅமைதியை என் கவிதை வார்த்தைகளால் காயப்படுத்த மனமில்லாமல் வானொலிக்கு நான் தந்த “மல்லாந்த உறக்கம்” கவிதையை கண்ணாடிக்குப் பின்னிருந்த அம்மையார் தன் விரல் பாவனையால் என்னை ஆட்டுவித்துப் பதிவு செய்த அந்தக் காலம் வானொலியின் வசந்தகாலம். எத்தனையோ இளைய படைப்பாளிகளை அடையாளம் காட்டிய நிகழ்ச்சி திருச்சி வானொலியின் “இளையபாரதம்”. அதை 1969 ஜூலையில் வானொலி தொடங்கியது.

தமிழ் மண்ணில் கூத்தும் நாடகமும் கடவுளோடு கட்டப்பட்டவை. குரலை மட்டும் மூலதனமாக்கி முழு நாடகத்தை மக்கள் மனதில் அரங்கேற்றிய நாடகக் காவலர்கள் வாழ்ந்த இடம் திருச்சி வானொலி. அதிலும் அப்போது வந்த “சூரியகாந்தி” நேயர்களைக் காத்திருந்து கேட்கவைத்தது. ஞாயிறு மட்டும் பகல் 12.10-க்கு மலர்ந்த “சூர்யகாந்தி” அது. 15 நிமிடங்களில் நடந்த அந்த நாடகந்தான் இன்றைய குறும்படங்களின் முன்னோடி. இதை 7-12-1952-ல் திருச்சி வானொலி தொடங்கியது.
குரல் கேட்டாலே பெயர் சொல்லும் அளவுக்கு நிலைய நடிகர்கள் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தார்கள். அவர்களில் டி.எஸ்.பகவதி டி.வி.கிருஷ்ணமூர்த்தி, சந்திரகாந்தா, எம்.எஸ்.ரமணி, ஜே.வி.ராகவன், வீரம்மாள், டி.எம். கமலா, எஸ்.கே.சுமதி போன்றவர்களின் குரல் நடிப்பு ஜாலங்கள் செய்தன. அவர்கள் குரலையே முகமாக மாற்றிய மேதைகள். குரல் வயதால் (Voice Age) உடல் வயதை மீறியவர்கள் அவர்கள். ஆச்சி மனோரமா போன்ற நடிப்பில் உச்சி தொட்டவர்களும் வானொலியில் நடித்தனர். பின்னணி இசையும் வலுச்சேர்த்தது. எழுத்தாளர்கள் அகிலன், மாயாவி, ராகவன், சுகி.சுப்பிரமணியம் போன்ற பலர் நாடகங்களை எழுதினர். கவிஞர் வாலியும் நாடகங்கள் தந்துள்ளார். இப்போதும் புதன் இரவு 8 மணிக்கும் ஞாயிறு மதியம் 3 மணிக்கும் நாடகங்களை வானொலி வழங்குகிறது.
திருச்சி வானொலி பற்றிப் பேசினாலே நிலைய இயக்குநர் க.நடராஜனுக்குள் ஒரு புது அலைவரிசை தவழ்கிறது. திருச்சி வானொலி கர்னாடக இசை தொடங்கி தமிழிசை, கிராமிய இசை என்று எல்லா வடிவங்களையும் காப்பாற்றி வளர்த்துள்ளது. ஒரு அரசு நிறுவனம், அதற்குரிய சங்கடங்களையும் மீறி சாதித்துள்ளது.
இங்கு பாடாத, இசைக்காத குரலோ விரலோ இல்லை என்று பெருமைப்படுகிறார் டி.பி.வி.இராமகிருஷ்ணன். பதிவு செய்து ஒலிபரப்பும் வசதியில்லாத காலத்திலேயே தியாகராஜ பாகவதர் இங்கு பாடியுள்ளார். ஒரு சமயம் பாலக்கரை ரயில்வே கேட்டை மூடிவிட்டார்கள். பாகவதரின் கார் வரமுடியவில்லை. நேரத்துக்கு வந்தால்தான் நேரடி ஒலிபரப்பில் பாட முடியும் என்பதால் காரை விட்டுவிட்டு சைக்கிளில் வந்துள்ளார் அன்றைய சூப்பர் ஸ்டார் பாகவதர். பம்மல் K.சம்பந்தம் படத்தில் பரமசிவனான கமல்ஹாசன் சைக்கிளில் வருவதைக்கண்டு நீதிபதி மிரள்வதைப்போல் நிலையத்தில் பலர் அதிசயத்துள்ளனர்.

ஞானப்பழத்தைப் பிழிந்த கே.பி.சுந்தரம்பாள் முதல் ’உள்ளம் உருகுதையா’ என்று பாடிய டி.எம்.சௌந்தரராஜன் வரை தங்கள் குரலை தமிழர்களின் காதுகளுக்கு அனுப்பியது இங்கிருந்துதான். எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன், பாலமுரளி கிருஷ்ணா, யேசுதாஸ் என்ற அந்தப் பட்டியல் ரொம்பப் பெரிசு. அதுபோலவே நாதஸ்வர மேதைகளான ராஜரத்தினம்பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மௌலானா, ஏ.கே.சி நடராஜன், வயலின் மேதை மைசூர் சௌடைய்யா, குன்னக்குடி வைத்தியநாதன், புல்லாங்குழல் மாலி, ரமணி, மிருதங்கக் கலைஞர் உமையாள்புரம் சிவராமன், மாண்டலின் சீனிவாசன் என்று இசையில் உச்சி தொட்ட எல்லோரும் சங்கமித்த இடமும் இந்த வானொலிதான். மிருதங்கம் வாசிப்பில் சிகரம்தொட்ட தஞ்சாவூர் இராமமூர்த்தி 45 ஆண்டுகள் நிலையக் கலைஞராக இங்கு பணி செய்துள்ளார். 1940 களில் டி.எம்.சௌந்தர்ராஜனின் குரலைத் தேர்வு செய்து பதிவு செய்த கே.சி.தியாகராஜன் இங்குதான் இசைத் துறையில் பணி செய்தார்.
திருக்குறளின் 133 அதிகாரங்களையும் 133 ராகங்களில் தந்த இசை அமைப்பாளர் நெல்லை ஆ.சுப்பிரமணியன் பேசப்பேச அது ஆலாபனையாக விரிகிறது. திருச்சி வானொலியின் இசைப் பங்களிப்பைத் தன் 90 வயதிலும் அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டார். கொல்லங்குடி கருப்பாயி, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, கே.ஏ.குணசேகரன் என்று யாருடைய குரல்களால் மண்ணின் இசையை நாம் அறிந்தோமோ, அத்தனை பேரையும் குரல் தேர்வு செய்து பாடவைத்தது திருச்சி வானொலி என்றார் நெல்லையார். திருக்குறள் முனுசாமி இவரை இசைக் கொண்டல் என்றார். “தொட்டில் முதல் தொட்டில் வரை”, “மண்ணின் மணம்” போன்ற இவரின் இசைக் கோவைகள் அகில இந்திய அளவில் பரிசு பெற்றவை. ராஜ்குமார் பாரதி பாடிய “காணிநிலம் வேண்டும்” இவரின் இசையில் உருவானதுதான். வயல் வெளியையும் குரல் தேர்வு நிலையங்களாக மாற்றிய துகிலி.சுப்பிரமணியம் மற்றும் ஆ.சுப்பிரமணியன் இருவரும் இவர் பேச்சில் அடிக்கடி வந்துபோனார்கள். ஏட்டில் எழுதா அந்தக் கவிதைகளை 1982 முதல் திருச்சி வானொலி பதிந்துவருகிறதாம்.


“நீடுதுயில்நீக்கப் பாடிவந்த நிலவாக” பாரதியை வரையறை செய்த கவிதையைத் திருச்சி வானொலியில்தான் பாரதிதாசன் பாடினார். சுத்தானந்த பாரதி 92-ம் வயதில் தன் பன்முக ஆற்றலை ஒரு நேர்காணலில் இங்கு வெளிப்படுத்தினார். சுஜாதாவின் அறிவியல் கருத்துகளை நம்மைக் கேட்க வைத்த நிலையமிது. ம.பொ.சி பேசிய அழுத்தமான தமிழை இதில்தான் 1986-ல் கேட்டேன். சிறையிலிருந்தபோது 119 பவுண்டாக இருந்த எடை 89 ஆகக் குறைந்தது அவருக்கு. வந்துவிட்ட சாவை வெல்லவே சிலப்பதிகாரமும் சங்க இலக்கியமும் படித்ததாக ம.பொ.சி சொன்னதை வானொலியில் கேட்டு நெகிழ்ந்தேன். நாட்டைப் படித்துவிட்டு ஏட்டைப் படித்ததாக அதில்தான் சொன்னார். அவரைச் சிலம்புச் செல்வர் என முதலில் அழைத்துப் பட்டம் தந்தது ரா.பி.சேதுப்பிள்ளை என்று அந்தப் பேட்டியில் சொன்னார்.
கவிஞர் வாலி 13 ஆண்டுகள் திருச்சி வானொலியில் பகுதிநேரம் பணி செய்தார். மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாவின் விரிவான பேட்டி வானொலியில் வந்தது. பத்திரிகையில் படிப்பதைவிட வானொலியில் கேட்பது சுகமானது. ஏனெனில் குரலின் ஏக்கங்களை அதில்தான் கேட்க முடியும். கலைஞர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவரது தலைமையில் இங்கு கவியரங்கம் நடந்தது. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, செய்குத்தம்பி பாவலர், நாமக்கல் கவிஞர், உ.வே.சா, வாரியார், கி.வா.ஜ போன்ற பலரின் தமிழும் குரலும் பதிவானது இங்குதான். டி.கே.சிதம்பரநாத முதலியார் தலைமை ஏற்ற கவியரங்கமும் நடந்தது.
எழுத்தாளர் கு.அழகிரிசாமி குறித்து வல்லிக்கண்ணனும் கி.ராஜநாராயணனும் 1978 வாக்கில் சகஜமாகப் பேசிய கலந்துரையாடலை என்னால் மறக்க முடியாது. கு.அழகிரிசாமியை எப்போது படித்தீர்கள் என்று கேட்காமல், எழுத்தில் எப்போது பார்த்தீர்கள் என்ற கி.ரா-வின் கேள்வியே கவிதையாக இருந்த நேர்காணல் அது. இப்படிப் பல ஆளுமைகளை அறிமுகம் செய்த பெருமை வானொலிக்கு உண்டு. வளர்ந்த ஆளுமைகளை மட்டுமல்ல, தகுதிமிக்கவர்களை அடையாளம் கண்டு வாய்ப்புகள் தந்து வளர்த்ததிலும் திருச்சி வானொலிக்குத் தனி இடமுண்டு. “இலக்கியசோலை” “சான்றோர் சிந்தனை” “செவிச்செல்வம்” “தமிழமுதம்” என்று இன்றும் இலக்கியம் பரப்பும் பணியை வானொலி செய்துவருகிறது. பழைய புத்தகங்களை அறிமுகம் செய்யும் எனது “ஓலை விசிறி” இதில்தான் தொடராக வந்தது.
“மண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம், அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்...” என்ற பாடலின் இசையும் பாடிய டி.எஸ்.பகவதியும் டி.எம்.கமலாவும் ’பண்ணை இல்ல’ ஒலிபரப்பின் மறக்கமுடியா குரல்கள். “வயலும் வாழ்வும்” நிகழ்ச்சிதான் வான் ஒலியை மண் ஒலியாய் மாற்றியது. பசுமைப் புரட்சியை விதைக்க அரசு தேர்வு செய்த 10 இந்திய வானொலி வயல்களில் திருச்சியும் ஒன்று. 1966-ம் வருடம் ஜூன் 7-ல் பண்ணை இல்ல ஒலிபரப்பு தொடங்கியது. 1970-75 களில் இதன் பயன்பாடு உச்சம் தொட்டது. பல ஆயிரம் விவசாயிகள் ரேடியோவோடு வயலுக்குப் போனார்கள். ஆடுதுறை-27 என்ற உயர் விளைச்சல் நெல் பல லட்சம் ஏக்கரில் பயிரிட வானொலியே காரணமானது. அதனால் அதை மக்கள் “ரேடியோ நெல்” என்று சொன்னதாக வான்மதிகண்ணன் சொல்கிறார். ஒரு நாளில் 110 நிமிடங்களைப் பண்ணை இல்லத்திற்கு ஒதுக்கி சாதனை செய்தது திருச்சி வானொலி. வேளாண்மைத் துறை தொடங்கி பல அரசு அமைப்புகளோடும் இணைந்து வானொலி நடந்த ராஜபாட்டையின் தொடர்ச்சியாகவே “உழவர்களுக்கு”, “வேளாண் அரங்கம்”, “உழவர் உலகம்” ஆகிய நிகழ்ச்சிகள் இன்றும் தொடர்கின்றன.

“பட்டினியில்லா பாரதம்” என்ற திசையில் இந்தியா நடந்தபோது வழித்துணையாய் வந்த திருச்சி வானொலியை வயிறுள்ள எவனும் மறக்க மாட்டான். அதில் கேட்ட துகிலி சுப்பிரமணியன், வான்மதிகண்ணன், பிச்சினிக்காடு இளங்கோ போன்ற பலரின் குரல்கள் இன்றும் பலருக்கு நினைவில் உண்டு. ஆனால் வேளாண்மைப் பட்டதாரிகளே இப்போது இந்த நிலையத்தில் இல்லை என்பது எவ்வளவு சோகம். பொழுது போக்க மட்டுமல்ல, பழுது பார்க்கவும் ஊடகங்கள் பயன்படட்டும்.
குழந்தைகள் வானவில்லை ஏணியாக்கும் மனசுக்காரர்கள். அவர்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல. அவர்களுக்குப் பிடித்தமாதிரி வானொலியைப் பயன்படுத்தும் வழியைத் திருச்சி வானொலி 1946 ஆகஸ்ட்டிலேயே தொடங்கியது. அப்போது வந்த “ரேடியோ அண்ணா” குழந்தைகளின் விருப்பமாக இருந்தார். எம்.விஸ்வநாதனும் இளசை சுந்தரமும் ரேடியோ அண்ணாவாக வாழ்ந்தார்கள். இப்போது வனி அத்தை கதை சொல்கிறார். 75 ஆண்டு விடுதலை வரலாற்றை குழந்தைகளே சொல்கிறார்கள். வாரம் முழுதும் நடந்ததை குழந்தைகளே தொகுக்கிறார்கள். நிகழ்ச்சியைக் குழந்தைகளே நடத்துவது அவர்களின் ஆளுமைப் பண்பை வளர்க்கும். இன்னும் குழந்தை நிபுணர்களைப் பயன்படுத்தலாம்.
“சுவர் இருந்தால்தான் சித்திரம்” என்பது சாதாரணப் புழக்கத்தில் உள்ள வார்த்தை. இந்த உடலைப் பேண பல நிகழ்ச்சிகளை வானொலி நடத்துகிறது. நலக்கல்வி, உங்கள் கவனத்திற்கு, வானொலி மருத்துவப்பள்ளி போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புவதாக நேயர் ஆய்வுப் பிரிவு சொல்கிறது.

மங்கையர் உலகம், பூவையர் பூங்கா போன்ற நிகழ்ச்சிகள் மகளிருக்கான தனி அக்கறையோடு வருகின்றன. செய்திப்பிரிவு உள்ளூர்ச் செய்திகளில் கவனம் செலுத்துகிறது. திருச்சி வானொலியின் செய்திப் பிரிவு மதியம் 1.45 செய்தியைத் தயாரிக்கிறது. விவித்பாரதி வழங்கிய தேன் கிண்ணம் எல்லோராலும் சுவைக்கப்பட்டது. விவித்பாரதியின் வர்த்தகப் பிரிவு 1969 ஏப்ரலில் இங்கு தொடங்கப்பட்டது. நேயர் ஆய்வுப் பிரவு திருச்சி வானொலியில் இயங்குகிறது. ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் பற்றிய மக்களின் கருத்துகளை இந்தப் பிரிவின் வழியாக அறிந்துகொள்ளும் வானொலி தன் ஒலிபரப்பை மேன்மைப்படுத்திக்கொள்ள இது உதவுகிறது.
FM என்பதைப் பண்பலை என்று தமிழாக்கிய வானொலியைப் பாராட்டலாம். Rainbow FM என்னும் “வானவில் பண்பலை” 10-1-2001 முதல் தன் ஒலிபரப்பை 102.1 அலைவரிசையில் தொடங்கியது. இது 5 மாவட்டங்களை உள்ளடக்கிய 25 லட்சம் மக்களைச் சென்றடைகிறது. பல தனியார் FM தொகுப்பாளினிகளின் வேக வேகப் பேச்சால் தமிழ்த்தாய்க்குப் பல நேரங்களில் மூச்சு வாங்குவதாகத் தோன்றும். வானொலியின் பண்பலையில் தமிழன்னை சற்று சீராக மூச்சுவிடுவதுபோல் தோன்றுகிறது. போட்டி, சுவையிலும் தரத்திலும் இருக்கட்டும். வேகத்தில் வேண்டுமா என்ன?
இதழியல் வரலாற்றில் 'வானொலி' இதழ் வித்தியாசமானது. 1940 ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. மாதம் இருமுறை இதழாக இது வந்தது. தமிழ்நாட்டின் எல்லா வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளையும் முன்கூட்டியே நேயர்களுக்குத் தெரிவிப்பதே இதன் நோக்கம். அதோடு பல நல்ல கட்டுரைகளையும் இந்த இதழ் நேயர்களுக்குத் தந்தது. அண்ணல் காந்தி சுடப்பட்டு இறந்த பிறகு வந்த 1948 பிப்ரவரி இதழைப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அந்த இதழின் அட்டையில் காந்தியின் அஸ்தி காவிரிக்கு வந்த படமும் ஊர்வலமும் ரதமும் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பல ஆளுமைகளின் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை. ஆனால் இந்த இதழ் 1987-ல் நின்றுபோனது.

உலகம் முழுதும் ஊடகங்களில் நடந்துள்ள மாற்றம் வானொலியையும் பாதிக்கும் என்பது சரிதான். ஆனால் வேறு வேறு பண்பாடுகளோடு வாழும் மக்களைக்கொண்ட நாடு நம்முடையது. எனவே எல்லாப் பண்பாட்டின் வேரையும் காயாமல் காக்க வேண்டியது அரசின் கடமை. வானொலியின் கடந்தகாலச் செழிப்பும் வணப்பும் அது மண்ணோடு பிசைந்து கிடந்ததால் வந்தது. ஆனால் இப்போது உள்ளூர் சார்பு குறைந்து, எல்லாவற்றையும் ‘மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என்ற அரசின் போக்கு பண்பாட்டு நிறுவனமான வானொலியை பாதித்துள்ளதை உணரமுடிகிறது. என்னதான் பேரன் பேத்தியை ஆசையோடு கொஞ்சினாலும் பாட்டியைத்தான் வணங்குகிறோம். ஒவ்வொருமுறை வானொலிக்குப் போகும்போதும் இப்படியொரு உணர்வு ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை.