இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை தபஸ்சும். அவருக்கு வயது 78. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பலப் படங்களில் நடித்துள்ளார். 1960 ஆம் ஆண்டு பிருத்விராஜ் நடிப்பில் வெளியான முகல்-இ-ஆசாம் என்ற சரித்திர படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் ஸ்வர்க். படத்தில் நடிப்பதை நிறுத்திய தபஸ்சும் பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் தொகுத்து வழங்கிய போல் கிலேஹைன் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்திருக்கிறது. இந்நிலையில் 78 வயதுடைய தபஸ்சும் மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (18.11.2022)அன்று மரணம் அடைந்தார். இதற்கு திரையுலகினர் பலரும் இரங்கலைத் தெரிவித்து வந்தனர். இதனிடையே பிரபல வங்காள நடிகை ஐந்த்ரிலா சர்மாவும் உடல்நல குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த இவர் தொலைக்காட்சி தொடர் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார். 24 வயதுடைய ஐந்த்ரிலா ஷர்மா கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வங்காள மொழியில் வெளியான ‘பாகர்’ என்ற வெப்சீரிஸில் நடித்திருக்கிறார். ‘லவ் கஃபே’, ‘அமி திதி நம்பர்1’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலமுறை மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று(19.11.2022) இறந்துள்ளார். இளம் வயதில் மரணமடைந்த ஐந்த்ரிலா ஷர்மாவுக்கும் அனைவரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.