இந்திய சினிமாவின் பிரபல கலை இயக்குநரான சுனில் பாபு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 50. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுனில் பாபு மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்து வந்தவர்.
கலை இயக்குநர் சாபு சிரிலின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கிய சுனில் பாபு, 'கஜினி', 'துப்பாக்கி', 'பெங்களூர் டேஸ்', 'பிரேமம்', 'எம்.எஸ் தோனி', 'சீதா ராமம்', போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு செட் அமைத்திருக்கிறார். ஜனவரி 11ம் தேதியன்று பொங்கலையொட்டி வரவிருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கும் இவர்தான் கலை இயக்குநர்.

திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்திருக்கிறார். இவரின் மறைவிற்கு அனைத்து மொழி திரைதுறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சுனில் பாபு பணியாற்றிய கடைசி படமான 'வாரிசு' படத்தின் இயக்குநர் வம்சி, சுனில் பாபு மறைவு தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எங்களுக்கு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளீர்கள். ஒரு நல்ல சகோதரராகவும், தோழனாகவும் இருந்தீர்கள். இன்று சத்தமில்லாமல் மறைந்துவிட்டீர்கள். நீங்கள் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் வாரிசு தயாரிப்பு நிறுவனமும் வாரிசு படக்குழு சார்பில் சுனில் பாபு மரணத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளனர்.
அப்பதிவில், “நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். உங்களுடன் பணியாற்றியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒரு மனிதன் இந்த உலகத்தை விட்டு வெளியேறலாம். ஆனால் அவரது மரபு அவரது செயல்களின் மூலம் தொடரும் என்ற பழமொழி சொல்வது போல் நீங்கள் இருந்தீர்கள். இன்று உங்களை இழந்த வலியைத் தாங்குவது கடினம். ஏனென்றால், இந்த உலகத்திற்கு நீங்கள் இன்னும் பல வருடங்கள் தேவைப்பட்டீர்கள். சுனில் சாபு குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.