தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா (கிருஷ்ண மூர்த்தி (80)) உடல் நலக்குறைவின் காரணமாக இன்று (செவ்வாய் கிழமை) அதிகாலை 4 மணி அளவில் காலமானார். இவர் மாரடைப்பின் காரணமாக நேற்று (திங்கள் கிழமை) அதிகாலை காலை 1.15 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு உடனடி சிகிச்சையாக 'CPR' முதலுதவி அளித்து, அவருக்குச் சுயநினைவு திரும்பியதும் அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றி சிகிச்சை அளித்து வந்தனர்.

இது பற்றிக் கூறிய மருத்துவமனை நிர்வாகம், "அவரது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது என்பதால் எங்கள் மருத்துவமனையின் இதய நோய் மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், 24 மணிநேரத்திற்குப் பின்னர்தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும். அவரது குடும்பத்தினருக்கும் தகவல்களைக் கொடுத்து வருகிறோம்" என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் நடிகர் கிருஷ்ணா காலமானார். இந்த சோகமான செய்தி அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வருடம் 2022-லேயே தனது அண்ணன் (ரமேஷ் பாபு) மற்றும் தாய் (இந்திரா தேவி) இருவரையும் இழந்த மகேஷ் பாபு, இன்று தனது தந்தை கிருஷ்ணாவின் மரணத்தால் பெரும் துயரத்தில் உள்ளார். ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மகேஷ் பாபுவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கிருஷ்ணா, தெலுங்குத் திரையுலகில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் என்னும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர். இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர். மேலும் பத்மபூஷன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அரசியலிலும் பங்காற்றிய இவர், 1989ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி யாகவும் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்திருந்தார்.