ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

“நீ அரசியலுக்கு வருவியா, மாட்டியா?” - ரஜினியைப் பேட்டி கண்ட கே.பி

கே.பாலசந்தர், ரஜினிகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
கே.பாலசந்தர், ரஜினிகாந்த்

விகடன் பொக்கிஷம் : டைரக்டர்ஸ் ஸ்பெஷல்

3.11.2010 ஆனந்த விகடன் இதழில்...

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா. பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் என மூத்த தலைமுறை இயக்குநர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். புதிய தலைமுறை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் எனத் திரையுலகத் திருவிழாவாகக் கொண்டாடிக்கொண்டிருந்தது திரையுலகம்!

பாலசந்தர் கேள்வி கேட்க, ரஜினி பதில் சொல்லும் நிகழ்ச்சி. ‘‘உனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னா, ‘நோ கமென்ட்ஸ்’னு சொல்லலாம்!’’ என்றார் பாலசந்தர். உடனே ரஜினி கையெடுத்துக் கும்பிட, ‘‘எவ்வளவு சந்தோஷம் பாருங்க!’’ என்று வாய்விட்டுச் சிரித்தார் கே.பி.

“நீ அரசியலுக்கு வருவியா, மாட்டியா?” - ரஜினியைப் பேட்டி கண்ட கே.பி

‘‘ரஜினியான நீ, திரும்ப சிவாஜி ராவ் ஆக முடியுமா?’’

‘‘நான் சிவாஜி ராவா இப்பவும் இருக்கிறதாலதான் ரஜினிகாந்தா இருக்க முடியுது. இந்தப் பேர், புகழ் எதுவுமே சிவாஜி ராவை பாதிக்கவே இல்லை!’’

‘‘நீ எல்லா சரவண பவனையும் விலைக்கு வாங்கலாம். ஆனா, அங்கே போய் உன்னால் ஒரு காபி சாப்பிட முடியாது. சூப்பர் ஸ்டார் ஆக நீ கொடுத்த விலை என்ன?’’

‘‘என் நிம்மதி, சந்தோஷத்தைப் பறி கொடுத்திருக்கேன். ஒரு சாதாரண குடிமகனா என்னால வெளியில நடமாட முடியலை. ஒரு சூழ்நிலைக் கைதி மாதிரி இருக்கேன்!’’

‘‘உன் சுயசரிதையைப் படிக்க தமிழ்நாடே ஆவலா இருக்கு. சுயசரிதை எழுதுவியா?’’

‘‘சுயசரிதைன்னா உண்மை மட்டும்தான் எழுதணும். அப்படி உண்மையா எழுதலைன்னா அது சுயசரிதையே இல்லை. மகாத்மா காந்தி தன் சுயசரிதையில் தைரியமா நிறைய உண்மைகள் சொல்லியிருந்தார். அந்த தைரியம் எனக்கு வந்தா... எழுதுவேன்!’’

‘‘ ‘மொகல் இ ஆஸம்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற படங்கள் இப்பவும் பேசப்படுது. 50 வருஷங்கள் கழிச்சு உன்னோட எந்தப் படங்கள் பேசப்படும்?’’

‘‘ ‘ஸ்ரீராகவேந்திரா’, ‘பாட்ஷா’, ‘எந்திரன்’!’’

(‘என் படங்களைச் சொல்ல மாட்டேங்குற பார்த்தியா?’ என்று பாலசந்தர் சொல்ல, அவருக்குக் கை கொடுத்துச் சிரிக்கிறார் ரஜினி)

‘‘ரஜினிகாந்த் என்கிற நடிகன்கிட்டே ஆயிரம் திறமைகள் இருக்கு. நீ ஏன், அமிதாப் மாதிரி கேரக்டர் ரோல் பண்ணக் கூடாது? ‘சீனி கம்’ மாதிரி ஒரு படத்தில் நீ நடிச்சுப் பார்க்கணும்னு ஆசையா இருக்குப்பா!’’’

‘‘ஆர்ட்டிஸ்ட் ஆசை ஜாஸ்தி கிடையாது. பெரிய கமர்ஷியல் படங்கள் பண்ணத்தான் எனக்கு விருப்பம்!’’

‘‘நான் உனக்கு ரஜினின்னு எப்போ பேர் வெச்சேன்னு ஞாபகம் இருக்குதா?’’

‘‘புல் மூன் டே. அன்னிக்கு ஹோலி பண்டிகை!’’

‘‘பேர் வெச்சதில் இருந்து ஏழெட்டு வருஷம் ஹோலி பண்டிகை அன்னிக்கு என்னை வந்து பார்ப்பே. வர முடியலைன்னா... போன்லயாவது பேசுவே. அப்புறம் மறந்துட்டியேப்பா!’’

(முகம் மாறுகிறது) ‘‘ஸாரி சார்... கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். இனிமே அப்படி நடக்காது!’’

‘‘உன் மனைவி லதாவை நீ எனக்கு அறிமுகப்படுத்தியது ஞாபகம் இருக்கா?’’

‘‘நல்லா ஞாபகம் இருக்கு. கலாகேந்திராவில் உங்களைச் சந்திச்சேன். ‘இதுதான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு’ன்னு சொன்னேன். ‘அது நல்லாப் படிச்ச பொண்ணு. நீ கோபக்காரன். எப்படிச் சமாளிப்பே?’ன்னு கேட்டீங்க. அப்புறம் லதாகிட்ட, ‘இவன் ரொம்ப நல்ல பையன்மா. நிறைய கோபப்படுவான். நீதான் சமாளிக்கணும்’னு அட்வைஸ் பண்ணுனீங்க!’’

‘‘இப்போ ரேபிட் பயர் ரவுண்ட். கேள்விகளுக்கு ஒரு வரியில், ஒரே வார்த்தையில் பதில் சொல்லணும். உனக்கு தமிழில் ரொம்பப் பிடிச்ச இயக்குநர் யார்?’’

‘‘மகேந்திரன்.’’

‘‘‘ரொம்ப வருத்தப்பட்ட விஷயம்?’’

‘‘என் தந்தையின் மரணம்!’’

“நீ அரசியலுக்கு வருவியா, மாட்டியா?” - ரஜினியைப் பேட்டி கண்ட கே.பி

‘‘மறக்க முடியாத அவமதிப்பு?’’

‘‘நோ கமென்ட்ஸ்!’’

‘‘நீ அரசியலுக்கு வருவியா, வர மாட்டியா?’’

‘‘அது ஆண்டவன் கையில் இருக்கு!’’

‘‘உன்கிட்ட நான் இவ்வளவு நேரம் கேள்வி கேட்டேனே... என்கிட்ட நீ ஒரே ஒரு கேள்வி கேளு!’’

‘‘எப்போ இதை முடிப்பீங்க?’’

டாட்!

- எஸ்.கலீல்ராஜா படங்கள்: என்.விவேக்

9.11.1980 ஆனந்த விகடன் இதழில்...

‘சிறை’ - அனுராதா ரமணன்

பொன்விழாவையொட்டி வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ரூ.2,50,000-க்கு மெகா பரிசுத் திட்டங்களை அறிவித்து நடத்தியது ஆனந்த விகடன். அதில், சிறுகதைப் போட்டியில் அனுராதா ரமணன் எழுதிய ‘சிறை’ சிறுகதை முதல் பரிசு ரூ.10,000/-ஐத் தட்டிச் சென்றது. இந்தக் கதை பின்னர் இயக்குநர் ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளியானது. பின்னாளில் இயக்குநர் ரா.பார்த்திபனின் இயக்கத்தில் முதலில் வெளியாகி, இரண்டு தேசிய விருதுகளையும் தட்டிச் சென்ற ‘புதிய பாதை’ திரைப்படத்திலும் இந்தச் ‘சிறை’ கதையின் தாக்கம் இருப்பதைக் காணலாம்.

“நீ அரசியலுக்கு வருவியா, மாட்டியா?” - ரஜினியைப் பேட்டி கண்ட கே.பி

“ஆறு மாதங்களுக்கு முன் கண்கள் நிறைய கனவுகளும் நெஞ்சுகொள்ளாத ஆசைகளுமாய்- ரகுபதி குருக்களின் மனைவியாய் இந்த ஊரில் அடி எடுத்து வைத்த பாகிரதி நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டாள். இப்பேர்பட்டதோர் இடியை!

அந்தோணிசாமி தீர்மானிக்கிற - திட்டம் தீட்டுகிற - எதுவும் இதுவரையில் நடக்காமல் போனதில்லை. அந்தச் சிறிய கிராமத்தில் மூன்று அடுக்கு மாடி வீடு அவனுடையது. விடிகாலைப் பொழுதில் கழுத்தில் சுண்டு விரல் பருமனுக்கு மைனர் செயினும் இடுப்பில் தோல் பெல்டுமாய் அவன் திண்ணையில் உட்கார்ந்து நாட்டுத் துப்பாக்கிக்கு மருந்து கிட்டிக்கும்போது தெருவில் ஆண்களே நடமாட பயப்படுவார்கள்...”

- இந்தக் கதையை முழுவதுமாகப் படிக்க, கீழே கொடுத்துள்ள யூ.ஆர்.எல். லிங்கைச் சொடுக்குங்கள்.

https://bit.ly/AVPS1