தான் நடித்த படத்தை தானே இணையத்தில் லீக் செய்த நடிகர்... ஆனால், நடந்தது என்ன தெரியுமா?#Viral

தான் நடித்த படத்தை தானே இணையத்தில் லீக் செய்த நடிகர்... ஆனால், நடந்தது என்ன தெரியுமா?#Viral
90's கிட்ஸின் ஃபேவரைட் போக்கிமான்கள் "POKÉMON Detective Pikachu" படத்தின்மூலம் பெரிய திரைக்கும் வரவிருக்கின்றன. இந்த நிலையில், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே லீக்கான முழு படத்தின் வீடியோ லிங்க்கை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இதை என்னவென்று பாருங்கள் என தயாரிப்பு நிறுவனத்தையும், படத்தின் அதிகாரபூர்வ பக்கத்தையும் டேக் செய்தார் ரேய்ன் ரெனால்ட்ஸ். இவர்தான் இந்தப் படத்தில் பிக்காச்சுக்கு குரல் கொடுத்தவர். 106 நிமிடங்கள் ஓடும் இந்த யூடியூப் வீடியோவைப் பார்த்தால் முதலில் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர், படத்தின் பெயர் என முதல் காட்சி வருகிறது. அதில் கதாநாயகன் கதாபாத்திரம் இரவில் சாலையில் நடந்துகொண்டிருக்கிறார். திடீரென நல்ல பீட்டுடன் ஒரு இசை கேட்கத்தொடங்கிறது. கதாநாயகன் திரும்பிப் பார்க்கிறான். என்னவென்று பார்த்தால் பிக்காச்சு நடனம் ஆடுகிறது. ஆனால், என்ன ரொம்ப நேரமா இது நடனம் ஆடிட்டே இருக்கு எனப் பார்த்தால் வீடியோவின் கடைசி வரை இந்த நடனம்தான் ஓடுகிறது. இந்த பிரான்க்கில் பலரும் சிக்கியிருக்கின்றனர்.

இந்த பிரான்க் வீடியோதான் தற்போது வைரல். ஒரே நாளில் சுமார் 1 கோடி பேர் பார்த்த இந்த வீடியோவில் `Ryan Reynolds' என்ற வாட்டர்மார்க் சேர்க்கப்பட்டிருந்தது. ரேய்ன் ரெனால்ட்ஸுக்கு வந்த காப்பிதான் தவறுதலாக லீக் ஆகியிருக்கிறது என நம்பவைக்க இதைச் செய்திருக்கின்றனர். படத்தின் ப்ரோமோஷனுக்காக பண்ணப்பட்ட இது அப்படியே எதிராக திரும்பியிருக்கவும் செய்யலாம். ஆனால், பிக்காச்சுவின் இந்த கியூட் நடனம் இந்த பிரான்க் வீடியோவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் இந்தியாவில் நாளை திரைக்கு வருகிறது.