'ஒரு விஷயத்தைச் செய்து முடிப்பதற்காக எந்த உயரத்திற்கும் செல்லலாம்' எனச் சிலர் சொல்லக் கேட்டிருப்போம். அமீரக அரசின் விமானச் சேவை நிறுவனமான எமிரேட்ஸ் உண்மையிலேயே உயரத்திற்குச் சென்று ஒரு விஷயத்தைச் செய்து முடித்திருக்கிறது. கடந்த சில நாள்களாகவே எமிரேட்ஸ் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் செம வைரல்.
அந்த விளம்பரத்தில் ஒரு பெண் ஓர் இடத்தில் நின்று கொண்டு எமிரேட்ஸுக்கு விளம்பரம் செய்யும் வண்ணம் வாசகங்கள் கொண்ட சில அட்டைகளை கையில் வைத்து காண்பித்துக் கொண்டிருப்பார். அந்த அட்டைகளைக் காண்பித்து முடித்ததும், அப்படியே ஜூம் அவுட் செய்து அவர் நின்று கொண்டிருக்கும் இடத்தைக் காட்ட, அவர் நின்று கொண்டிருப்பது உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் மீது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த விளம்பரத்தில் நடித்திருக்கும் நிகோல் ஸ்மித் தன் வாழ்நாளில் தான் செய்த மிகச்சிறந்த சாகசம் எனக் கூறித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். ஜூம் அவுட் செய்யும் போது, துபாயின் பின்னணியில் அவர் புர்ஜ் கலீஃபாவின் நின்றிருப்பது அழகாக வீடியோவில் நம் கண் முன்னே விரிகிறது. இதனைப் பார்த்த பலர் இது எடிட் செய்யப்பட்ட ஷாட் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கின்றனர். பார்வையாளர்களின் கருத்துக்குப் பதில் சொல்லும் விதமாக எமிரேட்ஸ் நிர்வாகம் அந்த விளம்பரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் வகையில் ஒரு வீடியோவை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறது.
2010-ம் ஆண்டு திறக்கப்பட்ட புர்ஜ் கலீஃபா, 829.8 மீட்டர் உயரத்துடன் உலகின் உயரமான கட்டடம் என்ற பெருமையைத் தாங்கி நிற்கிறது. உச்சியில் அதன் சுற்றளவு 1.2 மீட்டர் மட்டுமே. 829 மீட்டர் உயரத்தில் 1.2 மீட்டர் சுற்றளவு கொண்ட இடத்தில் நின்றுகொண்டு இந்தச் சாகசத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். மிகவும் உயரமான இடத்தில் படமாக்கப்பட்ட விளம்பரம் என்ற பெயரையும் இந்த விளம்பரம் தட்டிச் செல்கிறது. பார்வையாளர்கள் மத்தியிலும் இந்தக் காணொலி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. காணொலியில் நடித்திருக்கும் நிகோலையும், இதனைப் படமாக்கியவர்களையும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள் பார்வையாளர்கள்.