Published:Updated:

சில்க் ஸ்மிதா, `பராசக்தி’ சிவாஜி, `96’ ராம்- ஜானு... இணையத்தை கலக்கும் 'கலக்கி'!

கலக்கி
கலக்கி

சமூக வலைதளங்களில் அனுதினமும் பல புதுப்புது ஐடியாக்கள் டிரெண்டாகி வலம்வருகின்றன. சமீபத்தில் அப்படி டிரெண்டான ஒன்று, கலக்கி #kalakki

வான்கா, எட்வர்ட் ஹீப்பர் உள்ளிட்ட கலைத்துவம் மிக்க ஓவியர்களின் ஓவியங்களுடன், பராசக்தி, பருத்தி வீரன் தொடங்கி சார்லி சாப்ளின் வரை பலரையும் மிக்ஸ் செய்யும் வடிவம்தான் இந்த 'கலக்கி'. பல ஆண்டுகளுக்குமுன் வரையப்பட்டு, கலைத்துறையினரை மட்டுமே கவர்ந்து வந்த பல ஓவியர்களின் படைப்புகளை வெகுஜன மக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம். ஒவ்வோர் ஓவியத்தையும் அதற்கொத்த ரசனையுள்ள வகையில் 'கலக்கி'யாக்கியிருக்கிறார்கள், சார்லஸ் பிரிட்டோ மற்றும் முகமது சாலெஹ்.

பரியேறும் பெருமாள் கலக்கி வடிவில்
பரியேறும் பெருமாள் கலக்கி வடிவில்

இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கும் படங்கள் ரசனையானவை. கிறிஸ்டோபர் நோலனின் 'பேட்மேன்', வான்காவுடைய 'Roof Top in Paris' ஓவியத்தில் பாரிஸின் சுவர்களில் நிற்கிறார். ஜோஹனஸ் விர்மீரின் 'The Little Street' ஓவியத்தின் தெருக்களில் 'கும்பலங்கி நைட்ஸ்' திரைப்படத்தின் சகோதர்கள் நடந்துசெல்கிறார்கள்.

கும்பலங்கி நைட்ஸ் கலக்கி வடிவில்
கும்பலங்கி நைட்ஸ் கலக்கி வடிவில்

'பராசக்தி' சிவாஜி, வான்காவின் 'The Starry Night'- ல் உலா வருகிறார். 'பரியேறும் பெருமாள்' பரியனும் அவனது 'கருப்பி' நாயும் காஸ்பர் டேவிட் பெட்ரிச்சின் 'Wanderer above the Sea of Fog' -கிலுள்ள குன்றில் அமர்த்து பனிமேகங்களை ரசிக்கிறார்கள். சில்க் ஸ்மிதா, பாந்தமான விழிகளுடன் வான்காவின் கோதுமை வயல்களில் நிற்கிறார். இந்த வித்தியாசமான ஐடியா குறித்து இருவரிடமும் பேசினோம்.

" இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புகில் பரவலாக இந்தக் கலை அறியப்படுகிறது. நாமும் ட்ரை பண்ணலாமே என நினைத்தோம். சில்க் ஸ்மிதாவோட நினைவு நாளன்று, ஒரு 'கலக்கி' ரெடி பண்ணி ட்விட்டரில் பதிவிட்டேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்த உற்சாகத்துல 'தே கண்கள்' படத்தையும் வரைஞ்சு போஸ்ட் பண்ணினேன். என்னுடைய நண்பர் முகமது சாலெஹ்-வும் நானும் சேர்ந்து 'கலக்கி' னு சோஷியல் மீடியா பேஜ் ஒண்ணு ரெடி பண்ணியிருக்கோம்.

ஓவியத்தைப் பொறுத்தவரை அடிப்படை புரிதல் என்னிடம் உள்ளது. திரைப்படங்களை நாங்கள் இருவருமே அதிகமாக விரும்பிப் பார்ப்போம். எனவே, பிடித்த படங்களை வித்தியாசமாக வரையத் தொடங்கினோம்" என்ற சார்லஸைத் தொடர்ந்து பேசினார் முகமது.

சார்லஸ் பிரிட்டோ மற்றும் முகமது சாலெஹ்.
சார்லஸ் பிரிட்டோ மற்றும் முகமது சாலெஹ்.

"இவை எல்லாத்துக்கும் சினிமா மீதான ஆர்வம்தான் தொடக்கப்புள்ளியாக அமைஞ்சது" எனச் சொல்லும் முகமது சாலெஹ், சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்தவர். "இன்ஜினீயரிங் முடித்ததும் சில குறும்படங்கள் மற்றும் இண்டிபெண்டன்ட் திரைப்படங்களில் துணை இயக்குநராக வேலை செஞ்சேன். அதுக்கப்புறம் டெல்லி JNU வில் எம்.ஏ (கலை மற்றும் அழகியல்) படித்தேன். விஷூவல், வரலாறு என நிறைய விஷயங்களை அங்கே கத்துக்கிட்டேன். என்னுடைய ஆர்வமும் அதிகமாகியது" என்கிறார் சார்லஸ் பிரிட்டோ.

அதே கண்கள் கலக்கி வடிவில்
அதே கண்கள் கலக்கி வடிவில்

பதிவுகளைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டுறாங்க. 'வட சென்னை' படத்தை வரைந்திருக்கும்போது, படத்தின் கதையை அழகாகச் சொல்லியிருப்பதாகப் பாராட்டியிருந்தனர். 'சுப்ரமணியபுரம்' படம் வரைந்ததைப் பார்த்துவிட்டு இயக்குநர் சசிகுமார்,ட்விட்டர்ல ரீ-ட்வீட் செய்திருந்தார். ஹாரிபாட்டர் வரைந்ததைப் பார்த்துவிட்டு, பிரான்ஸிலிருந்து ஒருவர் பாராட்டியிருந்தார். அதிகமாக தென்னிந்திய சினிமாக்களையே தேர்வுசெய்து வரைகிறோம். எங்களைப் பார்த்து நிறைய பேர் கலக்கி முயற்சி பண்றாங்க. அதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு.

`விண்ணைத் தாண்டி வருவாயா’ கலக்கி வடிவில்
`விண்ணைத் தாண்டி வருவாயா’ கலக்கி வடிவில்

ஓவியம் போன்ற கலைகள் சினிமாவுடன் இணையும்போது, அதன் வீச்சு அதிகமாக இருக்கிறது. எளிமையாக மக்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அழகான படைப்புகளை, படைப்பாளிகள் உருவாக்குகிறார்கள். நாங்கள் அதைப் பிரதிபலிக்கிறோம். இதுவரை நாங்கள் செய்ததில் மிகப்பெரிய ஹிட் 'பேட் மேன்'. அப்போது, வங்காளப் படங்களுக்கு இதேபோல பண்ணுங்கன்னு கமென்ட் வந்திருந்தது. ஒருவர் மட்டும் இந்தமாதிரி பண்ணாதீங்க என்று எழுதியிருந்தார். மற்றபடி வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது." என்கின்றனர் இருவரும்.

'கலக்கி'யில் டிரெண்டு அடித்திருக்கும் இவர்கள் இருவரின் கனவும் சினிமாதானாம். கலக்குங்க பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு