Published:Updated:

`யூ டியூப்பே அனுப்பும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்!’ - `பொரி உருண்டை' ஹரிதா

சில சமயம் காலேஜ் கலை விழாக்களுக்குப் போகும்போது ``பேசாம மேடைல ஏறி நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணச் சொல்லுவோமா?’’ -ன்னுலாம் எங்களுக்குள்ள பேசிப்போம்.

என்னதான் இது டிக்டாக் யுகம் என்றாலும் பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பங்கள், பெண்களை மீடியா, சினிமா போன்ற துறைகளுக்குப் பணிக்கு அனுப்ப தயங்குகின்றன. இப்படியிருக்க 8 பெண்கள் சேர்ந்து `பொரி உருண்டை' என்ற யூ டியூப் சேனல் ஆரம்பித்து ரசிகர்களின் அப்ளாஸ் அள்ளி வருகின்றனர். கேமரா முதல் சோசியல் மீடியா வரை அனைத்தையுமே இவர்களாகவே கையாளுகின்றனர். பொரி உருண்டைக்கு மேலும் இனிப்பு சேர்க்கும் விதமாக யூ டியூப் நிறுவனம், `சில்வர் ப்ளே பட்டன்’ வழங்கியிருக்கிறது. இந்த சேனலுக்குப் பிள்ளையார் சுழிபோட்டு, வெற்றிகரமாக வழிநடத்தி வரும் ஹரிதா இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

Haritha
Haritha

`` என் கல்லூரி நண்பர்களோட சேர்ந்து ரொம்ப ஜாலியா ஆரம்பிச்ச சேனல் இது. நண்பர்களோட சேர்ந்து வீடியோஸ் பண்ணும்போது இயல்பாவே இருப்போம். நடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வீடியோ அவுட்புட் நல்லா வரும். நாங்க இந்த சேனல் ஆரம்பிச்ச புதுசுல 2,000 சப்ஸ்கிரைபர்ஸ்தான் இருந்தாங்க. நாங்களும் ரொம்ப முயற்சி பண்ணோம். எங்க சேனல்ல எதிர்பார்த்த அளவுக்கு ரீச் ஆகல. சில சமயம் காலேஜ் கலை விழாக்களுக்குப் போகும்போது `பேசாம மேடைல ஏறி நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணச் சொல்லுவோமா?’ -ன்னுலாம் எங்களுக்குள்ள பேசிப்போம். ஆனால் அடுத்தடுத்து வீடியோ போடும்போது நிறைய பேர் எங்க சேனலைப் பின்தொடர ஆரம்பிச்சாங்க. உண்மையச் சொல்லணும்னா எங்க சேனல் ப்ரோமோஷனுக்காக ஒரு ரூபாய் கூட செலவு பண்ணதில்ல. நண்பர்கள் ஷேர் செய்து ஷேர் செய்துதான் இந்த அளவுக்கு ரீச் கிடைச்சது.

ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்ததும், யூ டியூபில் சில்வர் ப்ளே பட்டன் கொடுப்பாங்க, அதற்கு நாமதான் அப்ளை பண்ணணும்னு கூட எங்களுக்கு தெரியாது. யூ டியூபே அனுப்பி வைக்கும்னு காத்திட்டு இருந்தோம். அப்புறம் பார்த்த நாம அப்ளை பண்ணணும்-னு சொன்னாங்க. உடனே அப்ளை பண்ணிட்டேன். யூ டியூப்பில் இருந்து அந்த சில்வர் ப்ளே பட்டன் அனுப்பி வைக்குறதுக்குள்ள எங்க சேனலுக்கு 2,83,000 ஃபோலோயர்ஸ் கிடைச்சுட்டாங்க. எங்க டீம் செம ஹேப்பி. ஏதோ பெரிய சாதனை பண்ண மாதிரி ஃபீல். ஜாலியா ஆரம்பிச்ச சேனல் என்றாலும் இப்போ ரசிகர்கள் எங்களிடமிருந்து தரமான வீடியோஸ் வரும்னு நம்புறாங்க. அதற்காகத்தான் அடுத்தடுத்து வீடியோக்கள் போடாம இடைவெளி ஆகிடுச்சு. எங்க டீம்ல எல்லாருமே வேலை, படிப்பு-ன்னு பிஸியாகிட்டாங்க. அதனாலதான், எல்லோரையும் ஒருங்கிணைத்து ஷூட் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எங்கள்ல சிலர் பிஸியா இருக்கும்போது வேறு சிலரை வெச்சி வீடியோ எடுக்கலாம். ஆனால் அது ஃபன்னா இருக்காது.

Haritha
Haritha

எங்க எல்லாருடைய வேவ் லெந்தும் ஒரே மாதிரி இருக்கும். திட்டிப்போம், அடிச்சுப்போம், நடிப்பும் இயல்பா இருக்கும். ஆனால் மற்றவர்கள்கிட்ட இந்தப் புரிதல் இருக்காது. எல்லாருமே நேரம் ஒதுக்கி. இனிமே தொடர்ந்து நிறையா அட்ராசிட்டி வீடியோக்கள் போடலாம்னு திட்டமிட்டிருக்கோம். பொரி உருண்டை வில் ராக். அப்புறம் இன்னொன்னு சொல்லணும். சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவிய சந்திச்சேன். அவங்க வந்து பேசினாங்க. உங்க வீடியோக்கள் பிடிக்கும். எனக்கு டப்ஸ்மாஷ்லாம் நல்லா வரும். எனக்கு நடிப்பு மேல ஆர்வம்’ன்னு சொன்னாங்க. ``ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பிச்சு, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வீடியோஸ் போடுங்கன்னு சொன்னேன். அதற்கு அவங்க அச்சச்சோ எங்க வீட்ல அவ்வளவுதான்’’-ன்னு பதறினாங்க. எனக்கு கஷ்டமா இருந்துச்சு. இந்த மாதிரி திறமை, ஆர்வம் இருந்தும் நிறைய பொண்ணுங்க சமூகத்துக்குப் பயந்து வெளிய வராம இருக்காங்க. யூ டியூப் தெய்வ குத்தம் கிடையாது. காமெடி வீடியோ, கான்செப்ட் வீடியோ, சமையல், ஷாப்பிங், சுற்றுலா-ன்னு எல்லாத்தையும் ரசிக்கும்படியா வீடியோ எடுத்துப் போடலாம். நம்ம சாதிக்கப் பொறந்தவங்க’’ என்றார் உற்சாகம் பொங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு