செர்னோபில் முதல் குயின் வரை... 2019-ல் கவனம் ஈர்த்த டாப் 10 வெப் சீரிஸ்! #VikatanRewind2019

2019-ல் வெளியான நம்மூரில் கவனம் பெற்ற வெப் சீரிஸ்!

செர்னோபில் : (HBO/Hotstar)
Also Read
1986-ம் ஆண்டு, சோவியத் ரஷ்யாவில் நடந்த அணுஉலை விபத்தையும், அதைச் சரிசெய்ய அந்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் பற்றி விறுவிறு திரைக்கதையுடன் சொன்னது, `செர்னோபில்' மினி சீரிஸ். கொஞ்சம் அறிவியலும் அரசியலும் கலந்து, மனித உணர்ச்சிகள் மூலம் நேர்த்தியாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். ஐந்து எபிசோடில் வந்த இந்த மினி சீரிஸ், ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமில்லாமல், பல விருதுகளையும் வென்றது.

வென் தே சீ அஸ்: (Netflix)
Also Read
1980-களில், அமெரிக்க நாட்டில் கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது இத்தொடர். 1989-ம் ஆண்டு நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் தவறாக குற்றம் சாட்டப்பட்டு, தங்கள் இளமைப் பருவத்தை முழுவதுமாய் இழந்த 5 சிறுவர்களைப் (கறுப்பின) பற்றிய கதைதான் இந்த மினி சீரிஸ். 4 எபிசோடுகள் மட்டுமே கொண்ட இந்தத் தொடர், ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் வென்றது.

டெல்லி கிரைம் (Netflix)
2012-ல் இந்தியாவையே உலுக்கிய டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மையக்கருவாக வைத்து, அதில் சம்பந்தப்பட்டவரைத் தேடும் கதைதான் `டெல்லி க்ரைம்'. ஒரு பக்கம், இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என்பதைக் கூறுவதிலிருந்து இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் பத்திரிகையாளராக ஒரு பெண் இருப்பதன் மூலம், பெண்கள் தங்கள் பாதுகாப்பைத் தாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உரக்கக் கூறுகிறது.

கிரிமினல் ஜஸ்டிஸ் (Hotstar)
Also Read
2008-ம் ஆண்டு, பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட `கிரிமினல் ஜஸ்டிஸ்' சீரிஸின் இந்திய வெர்ஷன். தனி ஒரு மனிதனுக்கு சட்டத்தில் கிடைக்கும் மரியாதையும் அதற்கு அவன் செய்யவேண்டிய போராட்டங்களையும் எடுத்துரைத்தது இந்த சீரிஸ்.

தி பாய்ஸ் (Amazon Prime)
சூப்பர் ஹீரோ கதைகளிலும் படங்களிலும் காட்டப்படாத கறுப்புப் பக்கங்களைப் புரட்டுவதுதான் `தி பாய்ஸ்'. 'அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் (Collateral Damage), அந்த அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவது' என்ற ஒன்லைன்தான் கதை. சூப்பர் ஹீரோ கதை என்றாலும் அவர்களின் சாகசங்கள் இல்லாத திரைக்கதையில் கார்ப்பரேட் அரசியல், மதமாற்றம் என்ற தேவையான அனைத்தையும் பேசியுள்ளார்கள்.

யூஃபோரியா: (Hotstar)
பதின் பருவத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண், தன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களையும் தனது மனசாட்சி எழுப்பும் கேள்விகளையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. இன்றைய இளைஞர்கள், வழிகாட்டல் கிடைக்காததால் அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாதை எப்படி முடிவடைகிறது என்பதைச் சொல்லியிருக்கிறது. இந்தத் தொடருக்கு, உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தி அம்ப்ரெல்லா அகாடமி : (Netflix)
சிறுவயதில் சூப்பர் ஹீரோக்களாக வலம் வந்தவர்கள், சிறிய இடைவேளைக்குப் பின்பு மீண்டும் உலகைக் காக்க ஒன்று சேர்ந்து, சொந்தப் பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்வதுதான் இந்த நகைச்சுவைத் தொடர். காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த சீரிஸ்.

தி ஃபேமிலி மேன்: (Amazon Prime)
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு உளவாளி, தனது குடும்பப் பொறுப்புகளையும் தன் நாட்டிற்காகத் தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளையும் எப்படி பேலன்ஸ் செய்கிறான் என்பதுதான் இந்தக் கதை. இந்தியாவில் நடந்த பல தீவிரவாத சம்பவங்களைத் தழுவி வந்தது இந்தத் தொடர். இந்தித் திணிப்பில் இருந்து, பீப் அரசியல் வரை இந்த ஆண்டின் அனைத்து சம்பவங்களையும் பற்றிப் பேசியிருக்கிறது, `தி ஃபேமிலி மேன்'.

வாட்ச்மென் (Hotstar)
Also Read
2009-ம் ஆண்டு வெளிவந்த 'DC Comics' படத்தின் நீட்சிதான் இந்த 'வாட்ச்மென்'. முகமூடி அணிந்த நிறவெறியர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடக்கிற போராட்டத்தில், தனது கடந்த கால உறவை தேடிச்செல்லும் பெண்ணின் கதை. DC ரசிகர்களுக்கு வருட இறுதியில் கிடைத்த நல்ல பரிசு இது.

குயின் (MX Player)
Also Read
கெளதம் மேனன் - பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளியான ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவு. தனக்கே உரிய ஸ்டைலில் கௌதம் கதை சொல்ல, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பெரிதும் கவனம் ஈர்த்தது. 2-வது சீசனுக்கு வீ ஆர் வெயிட்டிங்!