Published:Updated:

காதலுக்கு ஏது இலக்கணம்?

காதலுக்கு ஏது இலக்கணம்?
பிரீமியம் ஸ்டோரி
காதலுக்கு ஏது இலக்கணம்?

Web Series

காதலுக்கு ஏது இலக்கணம்?

Web Series

Published:Updated:
காதலுக்கு ஏது இலக்கணம்?
பிரீமியம் ஸ்டோரி
காதலுக்கு ஏது இலக்கணம்?

திருமணம் என்பதை நிறுவனப்படுத்தாமல், காதலை மட்டுமே ஒற்றைத் தகுதியாக எண்ணும் மனிதர்களின் கதைகள் எப்படி இருக்கும்? தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் அமேசான் பிரைமில் வெளியாகும் ‘மாடர்ன் லவ்’ வெப்சீரிஸ் பார்க்கவும்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வாரம் ஒரு கதை என எளிய மனிதர்கள் பரிமாறிய காதலை வெப் சீரிஸாக மாற்றியிருக்கிறார்கள். ஜான் கார்னியின் திரைக்கதையில் சற்றே புனைவு கலந்து, சிரிக்க வைத்தும் கண்களைக் கலங்க வைத்தும் காதல் பாடம் எடுக்கிறது இந்த வெப் சீரிஸ். செக்ஸ், ரொமான்ஸ், குடும்பப் பாசம், காதல் எனப் பல சுவாரஸ்யங்களை அடுக்குகின்றன இந்தத் தொடரின் எட்டுக்கதைகளும்.

காதலுக்கு ஏது இலக்கணம்?

காதல் எப்போது ஒருவரின் இதயக் கதவைத் தட்டும்? தன் இதயத்தைத் திறந்தே வைத்துக் காத்திருக்கும் மேகியின் ஒவ்வொரு இரவும் இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறது. அவள் அபார்ட்மென்டில் டோர்மேனாக இருக்கும் குஸ்மினுக்கு அதற்கான விடை தெரியும். வெறும் செக்ஸோ, குழந்தையோ அல்லது வற்புறுத்தலோ... இப்படி எந்தவித ஒப்பந்தமும் காதலைக் கொண்டு வந்துவிடாது; காதல் என்பது தானாக உணரப்படும் ஒன்று என்பதை அழகாகச் சொல்கிறது ‘When the Doorman Is Your Main Man.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு முகவரியைத் தொலைத்ததனால் தன் காதலையும் தொலைத்தவர்களின் வலி எத்தகையது? அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையை வாழும் அவர்கள் எங்கேனும் ஒருமுறை சந்தித்துக்கொண்டால்? இந்தக் கதையைக் கேட்கும் டெக் ஜீனியஸ் (தேவ் பட்டேல்) மட்டுமல்ல... நாமுமே பல பாடம் கற்கலாம் என்கிறது இந்த ‘When Cupid Is a Prying Journalist.’

பைபோலார் மனநோயால் அவதியுறும் லெக்ஸி (அன்னா ஹேத்தவே) இரட்டை வாழ்க்கை வாழ்கிறாள். ஒன்றில் சிறகு விரிப்பாள். இன்னொன்றில் அறைக்குள் முடங்கிக்கொள்வாள். மனப்போராட்டங்களில் இருந்து மீண்டுவர யாரிடமேனும் உதவி கேட்கவாவது நாம் தயாராக இருக்கிறோமா? ஒரு தோழி, லெக்ஸிக்கு இதைப் புரியவைக்கிறாள். லெக்ஸியை ஏற்றுகொள்ளப்போகிறவன் அவளின் இந்த இரண்டு பக்கங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். லெக்ஸி அப்படியானவனுக்காகக் காத்திருக்கிறாள் என்கிறது ‘Take Me as I Am,Whoever I Am’.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘So He Looked Like Dad. It Was Just Dinner, Right?’ காட்டுவது முன்பே சொன்ன ப்ளாட்டானிக் லவ். 21 வயது பெண் மேடிக்கு தன் நிறுவனத்தில் தன் அப்பாவின் வயதிருக்கும் ஒருவரின் மீது பிரியம். அதை வேறு விதமாகப் புரிந்துகொள்ளும் அவரை மேடி எப்படிப் புரிந்துகொள்கிறாள்? முதிர்ச்சியடைய வயது முக்கியமா என்ன?

காதலுக்கு ஏது இலக்கணம்?

தன்பாலினக் காதல் ஜோடியான டோபினும் ஆண்டியும் குழந்தை ஒன்றைத் தத்தெடுக்க முடிவுசெய்கிறார்கள். தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைக் கொடுக்க முன்வருகிறாள், இருப்பதற்கே வீடு என்று ஒன்றைக் கட்டமைத்துக்கொள்ளாத ஒருத்தி! அவளைப் பொறுத்தவரை அவள் மட்டுமே உலகம். காதலிக்க, பெற்றோராக... பாலினம் முக்கியமா? குறிக்கோளின்றி அலையும் நாடோடி வாழ்க்கை இதற்கு முன் நாம் வாழ்ந்ததுதானே? பல கேள்விகளை எழுப்புகிறது ‘Hers Was a World of One.’

காதலில் விழ வயது முக்கியமில்லை என்கிறது கடைசிக் கதையான ‘The Race Grows Sweeter Near Its Final Lap.’ சுவாரஸ்யமாக இதே கதையில் ஒரு கோடை மழைத் தருணத்தில் இதுவரை ஓடிய 7 கதைகளையும் ஏதோ ஓர் இடத்தில் தொட்டுவிட்டுச் செல்கின்றன மற்ற கதைகள். அதுவரை இது ஒரு ஆந்தாலஜி என்று பார்த்தவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது நியூயார்க் எனும் பெருநகரத்தின் அந்தத் தொடர் நிகழ்வுகள்!

காதலுக்கு ஏது இலக்கணம்?

மனிதர்கள் அனைவருமே அடிப்படையில் அன்புக்காக ஏங்குபவர்கள்தான். ‘பியர் பிரஷர்’ எனப்படும் சமவயது உடையவர்களின் வாழ்க்கை மாற்றங்களைப் பார்த்து ஏங்கும் மனப்பான்மை அனைவருக்கும் உண்டு. நமக்குள் இருக்கும் இந்த உறவுக்குப் பெயர் சூட்டிக்கொள்ளாத எண்ணற்ற உன்னத உறவுகள் எல்லோர் வாழ்விலும் உண்டு. திருமணம் என்பது காதலின் முடிவல்ல. உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முதலிலிருந்து தொடங்கலாம். இப்படிப் பல தெளிவான கருத்துகளை முன்வைக்கின்றன இந்த நிஜக் கதைகள்!

கோடைமழையைப் போலவே வசீகரிக்கும் இந்தக் கதைகளில் அன்பு நிறைந்த மனிதர்களுக்குப் பஞ்சமே இல்லை. இது இந்த வகை உறவு என்று ஒரு சட்டகத்தில் அடைக்காமல் ஆங்காங்கே தொட்டுச்செல்லும் கதாபாத்திரங்கள் அத்தனை அழகு! டெக் ஜீனியஸாக தேவ் பட்டேல், ஜூலியாக கேத்ரீன் கீனர், லெக்ஸியாக ஆனி ஹாதவே, கார்லாவாக ஒலிவியா குக், டோபினாக ஆன்ட்ரூ ஸ்காட் ஆகியோர் வசீகரிக்கிறார்கள். மெல்லிய நீரோடைபோல அவசரமின்றி நகரும் திரைக்கதைகள், இந்த 8 காதல் கதைகளுக்கும் பலம் சேர்க்கின்றன. வரையறுக்கப்பட்ட இலக்கணங்களை உடைக்கும் காதல்கள்தான் இலக்கியமாகி, காலம் கடந்து நிற்கின்றன. இந்த ‘மாடர்ன் லவ்’ அதில் சேர்த்திதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism