Published:Updated:

எப்போதோ பறந்த விமானம் இப்போது கிராஷானால்... டைம் டிராவல் த்ரில்லர் #JL50 எப்படி?

JL50
JL50

நான்கே எபிசோடுகள், அதுவும் ஒவ்வொரு எபிசோடும் அரை மணிநேரம்தான் என வெறும் 2 மணி நேரத்தில் ஒரு சுவாரஸ்ய டைம் டிராவல் கதையைச் சொல்கிறது இந்த 'JL50'.

டைம் டிராவல் கதைகள் சுவாரஸ்யமானவை. நெட்ஃப்ளிக்ஸின் 'டார்க்' தொடர் போலவோ நோலனின் படங்களைப் போலவோ அதை குழப்பியடித்துச் சொன்னாலும் சரி, 'பேக் டு தி ஃப்யூச்சர்', 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்', 'இன்று நேற்று நாளை', சூர்யாவின் '24' போல எளிமையான கான்செப்ட்டோடு சொன்னாலும் சரி... இரண்டுமே ஒருவித ஈர்க்கும் தன்மையுடன்தான் இருக்கும். அதற்குக் காரணம், அந்த டைம் டிராவல் அறிவியல் சற்றே அலாதியானது. குறிப்பாக இந்தியாவில் தற்போதுதான் டைம் டிராவல் எனும் பரீட்சார்த்த முயற்சி படைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அப்படி ஒரு முயற்சிதான் இந்த சோனி Liv OTT தளத்தில் வெளியாகியிருக்கும் 'JL50' வெப்சீரிஸ்.

ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது. சிபிஐ அது தொடர்பாக விசாரணை நடத்துகிறது. வழக்கமான கதைதானே?! ஆனால், இங்கே ஒரு ட்விஸ்ட்... அந்த விமானம் இப்போதைய காலகட்டத்தைச் சேர்ந்தது இல்லை. க(கொ)ல்கத்தாவிலிருந்து 35 வருடங்களுக்கு முன்னர் கிளம்பியது!
JL50
JL50

1984-ல் கிளம்பிய 'JL50' எனும் பயணிகள் விமானம், 2019-ம் வருடம் மேற்கு வங்க மலைப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகிறது. உள்ளே பயணித்தவர்கள் இறந்துவிட விமானத்தை ஓட்டிய பெண் பைலட்டும் மற்றொருவரும் மட்டும் காயங்களுடன் உயிர் தப்புகின்றனர். நினைவுகள் திரும்பும் பெண் பைலட், தான் 1984-ம் வருடத்தைச் சேர்ந்தவள் என்கிறாள். இதற்கிடையில் தற்போது கடத்தப்பட்டிருக்கும் மற்றொரு விமானம் குறித்தும் இந்த விமானம் குறித்தும் சிபிஐ அதிகாரி அபய் தியோல் விசாரணையைத் தொடங்குகிறார்.

35 வருடங்களுக்கு முன்னர் கிளம்பிய விமானம் என்பதை நம்ப மறுக்கும் அவர் இதைத் தீவிரவாதிகளின் சதி எனத் தீவிரமாக நம்புகிறார். எது உண்மை, டைம் டிராவல் சாத்தியமா? சுவாரஸ்யமாகவும் பரபரப்புடனும் கதை சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.
JL50
JL50

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தில் வில்லனாக நடித்த அபய் தியோல்தான் இதில் ஹீரோ. சிபிஐ அதிகாரி என்றாலும் மிடுக்கான உடல்மொழி, கோபம் என எப்போதும் உருட்டும் 'ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்' பர்னிச்சர் பக்கம் போகாமல் தன் கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக அணுகியிருக்கிறார். டைம் டிராவல் எப்படிச் சாத்தியம் என சீரியஸாக விளக்கும் விஞ்ஞானியின் முன்னர் அமர்ந்து நம்ப முடியாமல் நமட்டுச் சிரிப்புடன் கதை கேட்கும் காட்சியில் தன் கதாபாத்திர இலக்கணத்தைத் தாண்டாத குறும்புத்தனத்தை வெளிப்படுத்துகிறார். தன் இறந்தகால சம்பவங்களைத் தானே மீண்டும் பார்த்து உடைந்து அழும் காட்சியில் கணம் ஏற்படுத்துகிறார். ஆனால், டைம் டிராவல் சாத்தியமில்லை என்று சுற்றும் மனிதர் தன் மனதை மாற்றிக்கொண்டதை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம். போகிற போக்கில், 'சரி, எல்லாரும் இவ்ளோ சொல்றீங்க' ரேஞ்சிலேயே அதையும் அணுகியிருக்கிறார்.

வயதான சயின்டிஸ்ட்டாக வரும் பங்கஜ் கபூர் தளர்வான உடல்மொழியுடன் தன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். டைம் டிராவல் குறித்து அவர் விளக்கும் காட்சிகள்தான் கதையின் தெளிவான போக்குக்கும், நம் புரிதலுக்கும் வழிவகுக்கிறது. பைலட்டாக வரும் ரித்திகா ஆனந்த் தான் காலம் மாறி வந்திருக்கும் அந்தக் குழப்ப உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். பின்னர் தன் குழந்தை பற்றிய உண்மை... அது புரிந்தும் புரியாத மனநிலை... எங்கும் மிகை நடிப்பில்லாத யதார்த்தம் இழையோடுகிறது. துணைக் கதாபாத்திரமாக ராஜேஷ் சர்மா ('தோனி' படத்தில் அந்த சிறுவயது பி.டி. வாத்தியார்), வில்லனாக பியூஷ் மிஷ்ரா. டைம் டிராவல் என்ற ஒன்றைச் சாத்தியப்படுத்தியதும் சாதா சயின்டிஸ்ட் பியூஷ், 'பவர்' எனக் கத்தும் 'சக்திமான்' வில்லன்போல் ஆகிவிடுவது ஏன் என்றுதான் புரியவில்லை. அதிலும் அவரின் சிரிப்பு ஓவர் ஆக்ட்டிங்கின் உச்சம் சாப்!

JL50
JL50
நான்கே எபிசோடுகள், அதுவும் ஒவ்வொரு எபிசோடும் அரை மணிநேரம்தான் என வெறும் 2 மணி நேரத்தில் ஒரு சுவாரஸ்யக் கதை சொல்கிறது இந்த 'JL50'.
சீரியல் கில்லரும் சின்சியர் போலீஸும்... ட்விஸ்ட் என்னென்னா? #VTheMovie #Nani25

இருந்தும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ போன்று பெரிய பட்ஜெட் இல்லாத காரணத்தினால் கிராபிக்ஸ் காட்சிகள் படு சுமார் ரகம். அதிலும் கதையின் அடிநாதமான ஆரம்ப விமான விபத்தைக்கூடத் தெளிவாகக் காட்சிப்படுத்தாமல் நிழலையும் பிளாக் ஸ்க்ரீனையும் மட்டும் வைத்து ஒப்பேற்றியது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்! இப்படி பல காட்சிகள் ஐடி விங்குகள் போட்டோ ஷாப் செய்ததுபோல் அப்பட்டமாகத் தெரிவது கதையுடன் நம்மை ஒன்றவிடாமல் செய்கிறது. ஒளிப்பதிவும் கலை இயக்கமும் கொல்கத்தாவின் அந்தக் கால இந்தக் கால வேறுபாடுகளை கண்முன் நிறுத்தினாலும், மேற்கு வங்கத்தில் அதுவும் வீட்டிலும்கூட கதாபாத்திரங்கள் இந்தியில் மட்டுமே உரையாடுவது என்ன லாஜிக்கோ!

JL50
JL50
இருந்தும் எங்கும் குழப்பாத சுவாரஸ்யமான டைம் டிராவல் லாஜிக், யூகிக்க முடியாத சில ட்விஸ்ட்கள், சொல்ல வந்ததை அதிக நேரம் எடுக்காமல் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியது போன்ற காரணங்களால் இந்த 'JL50'-யில் தாராளமாக ஒரு டிரிப் அடிக்கலாம்!
அடுத்த கட்டுரைக்கு